கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?

கோவைக்காய் சட்னி என்பது அருமையான தொட்டுக்கறி வகையாகும். இதனை இட்லி, சப்பாத்தி, தோசை உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

இனி சுவையான கோவைக்காய் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோவைக்காய் – 100 கிராம்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

தக்காளி – 1 எண்ணம் (பெரியது)

இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 2 இதழ்கள் (நடுத்தர அளவு)

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

மிளகு – 15 எண்ணம்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

கோவைக்காய் சட்னி செய்முறை

கோவைக்காயை கழுவி சுத்தம் செய்து வட்டமாக வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.

 

கோவைக்காய்
கோவைக்காய்

 

வில்லைகளாக்கப்பட்ட கோவைக்காய்
வில்லைகளாக்கப்பட்ட கோவைக்காய்

 

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலை அலசி உருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

புளியை பிய்த்துப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊற விடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் சதுரங்களாக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம் சேர்த்து வதக்கும் போது
வெங்காயம் சேர்த்து வதக்கும் போது

 

வெங்காயம் பாதி வதங்கியதும் துண்டுகளாக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் மிளகாய் வற்றல், மிளகு, இஞ்சி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.

 

மிளகாய் வற்றல், மிளகு, இஞ்சி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கும் போது
மிளகாய் வற்றல், மிளகு, இஞ்சி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கும் போது

 

கலவை ஓரளவு வதங்கியதும் வில்லைகளாக்கிய கோவைக்காய் சேர்த்து வதக்கவும்.

 

கோவைக்காய் சேர்த்து வதக்கும் போது
கோவைக்காய் சேர்த்து வதக்கும் போது

 

கோவைக்காய் நிறம் மாறி வதங்கியதும் கலவை இறக்கி ஆறவிடவும்.

 

ஆறிய கோவைக்காய் கலவை
ஆறிய கோவைக்காய் கலவை

 

மிக்ஸியில் வதக்கிய கலவையைச் சேர்த்து அதனுடன் ஊறவைத்த புளி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

சுவையான கோவைக்காய் சட்னி தயார்.

 

சுவையான கோவைக்காய் சட்னி
சுவையான கோவைக்காய் சட்னி

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாயைப் பயன்படுத்தி சட்னி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.