சங்கப் பலகை தந்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப் புலவர்களுக்கு தமிழ்பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதைக் குறிப்பிடுகிறது.
சங்கப் புலவர்கள் யார்?, இறைவனாரிடம் சங்கப் புலவர்கள் வைத்த வேண்டுகோள், இறைவனார் பாடல்களின் தரத்தினை அளவீடு செய்ய சங்கப் பலகை அளித்தது ஆகியவற்றை இப்படலம் எடுத்துக் கூறுகிறது.
சங்கப் பலகை தந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து ஒன்றாவது படலமாக அமைந்துள்ளது.
சங்கப் புலவர்கள்
வங்கிசேகர பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்தபோது, பிரம்மதேவன், தேவர்கள் மகிழும் பொருட்டு பத்து அசுவமேத யாகங்களைச் செய்து முடித்தார்.
பின்னர் பிரம்ம தேவர் தனது தேவியர்களான சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் கங்கையில் நீராட விரும்பினார். அதற்காக அவர் தனது மனைவியருடன் கங்கைக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விஞ்ஞை மாது (கந்தர்வ கன்னி) ஒருத்தி யாழினை மீட்டி பாடிக் கொண்டிருந்தாள். அப்பாடலால் ஈர்க்கப்பட்ட சரஸ்வதி அங்கே நின்று விட்டாள்.
இதனால் பிரம்ம தேவர் மற்ற இருவருடன் கங்கையில் நீராடி வெளியேறினார். அங்கே வந்த சரஸ்வதி பிரம்ம தேவரிடம் “என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் நீராட வந்தது ஏன்?” என்று கேட்டாள்.
அதனைக் கேட்ட பிரம்ம தேவர் “நீதான் உன்னிலை மறந்து இசையில் மூழ்கிவிட்டாய். தவறு உன் மீது இருக்க நீ எங்களைக் கோபிப்பது முறையல்ல. குற்றம் புரிந்த நீ மானிடப்பிறவி எடுத்து அக்குற்றத்தைப் போக்கிக் கொள்.” என்று கூறினார்.
இதனைக் கேட்டதும் அதிர்ந்த சரஸ்வதி “உங்களின் உயிரான நான் அழியும் மானிடப்பிறவி எடுக்க வேண்டுமா?” என்று கேட்டாள்.
அப்போது பிரம்மதேவர் “உனது வடிவமாகிய நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதரிப்பார்கள். அவர்களுக்கு தலைமைப் புலவராய் சொக்கநாதர் தோன்றி அவர்களுக்கு அறிவைத் தோற்றுவித்து அவர்களின் புலமையைக் காப்பார்” என்று கூறினார்.
பிரம்மதேவரின் கூற்றுப்படி நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்து எட்டு புலவர்களாக அவதாரம் செய்தனர். சிவத்தொண்டில் சிறந்து விளங்கிய அவர்கள் பலநாடுகளுக்கும் சென்று புலமையில் வென்று மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சொக்கநாதர் தானும் புலவர் வடிவில் சென்று அவர்களின் எதிரே சென்று அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து திருக்கோயிலை அடைந்து மறைந்தருளினார்.
அப்புலவர்கள் புலவராக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்து பலபாடல்களைப் பாடி அவரை வழிபட்டனர். பின்னர் வங்கிசேகர பாண்டியனைக் கண்டு வாழ்த்துக் கூறினர்.
பாண்டியனும் அவர்களுக்கு பல பரிசுகள் கொடுத்து திருக்கோயிலுக்கு வடமேற்கு திசையில் ஒரு சங்க மண்டபம் அமைத்து அதில் அவர்களை இருத்தி இருந்தான். ஆதலால் அவர்கள் சங்கப் புலவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
சங்கப் பலகை தந்தருளல்
சங்க மண்டபத்தில் வீற்றிருந்த சங்கப் புலவர்கள் வடநாட்டுப் புலவர்களையும், பாண்டிய நாட்டின் முதன்மைப் புலவர்களையும் வாதாடி வென்றனர்.
ஒருநாள் சொக்கநாதரை வழிபட்ட அவர்கள் “எம்பெருமானே, எம்மோடு வாதிட பல புலவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். புலவர்களின் புலமையை உள்ளபடி சீர்தூக்கி அறிய, அளக்கும் கருவியாக ஒரு சங்கப் பலகையைத் தந்தருள வேண்டும்.” என்று விண்ணப்பித்தனர்.
உடனே இறைவனார் ஒரு பலகையுடன் புலவர் வடிவம் தாங்கி வந்தார். புலவர்களைப் பார்த்து “புலவர்களே, இப்பலகை பார்ப்பதற்கு குறுகியது. ஆனால் மந்திரத் தன்மை உடையது.
ஒரு புலவர் தனது பாடலுடன் இந்தப் பலகையில் அமர வரலாம். பாடல் சரியாக இருந்தால் மட்டும் இது அவர்களுக்கு இடம் கொடுக்கும். அடுத்த புலவர் சரியான பாடலுடன் வந்தால் இப்பலகை சிறிது நீண்டு அவருக்கு இடம் கொடுக்கும்.
நீங்கள் அனைவரும் சரியான பாடலுடன் வந்தால் நாற்பத்து எட்டு பேருக்கும் வளர்ந்து இடம் கொடுக்கும். நீங்கள் மற்றவருடன் வாதத்தில் ஈடுபடும்போது உங்கள் பாடல் சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள இது ஒரு துலாக்கோலாக உதவும்.” என்று கூறி மறைந்தருளினார்.
சங்கப்புலவர்கள் அப்பலகையை திருக்கோயிலில் வைத்து வழிபட்டனர். பின்னர் நக்கீரர் முதலில் சரியான பாடலுடன் சங்கப் பலகையில் அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து கபிலர், பரணர் உள்ளிட்ட நாற்பத்து ஏழு புலவர்களும் சரியான பாடலைக் கொண்டு சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்தனர்.
நாளடைவில் அவர்களின் பாடல்கள் பல்கிப் பெருகியதால் அவர்கள் தங்களுடையது எது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் கருத்து வேறுபாடு கொண்டனர்.
அவர்களின் முன்னால் தோன்றி சொக்கநாதர் அவர்களின் பாடல்களை ஆராய்ந்து பொருளினை கூறி அவரவர் பாடல்களை அவரவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.
பின்னர் அப்புலவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் மத்தியில் நடுநாயகமாக மணிபோல் வீற்றிருந்தார். அப்போது வங்கிசேகர பாண்டியன் தன் மகனான வங்கிய சூடாமணிக்கு பட்டம் அளித்து சிவப்பேறு அடைந்தான்.
சங்கப் பலகை தந்த படலம் கூறும் கருத்து
இறைவனார் எங்கும் நடுநிலைமை வகிப்பார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.
முந்தைய படலம் சுந்தரப் பேரம்பு எய்த படலம்
அடுத்த படலம் தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
Comments
“சங்கப் பலகை தந்த படலம்” மீது ஒரு மறுமொழி
[…] முந்தைய படலம்: சங்கப் பலகை தந்த படலம் […]