சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியை பெண் ஒருத்தி கூறியதை சில்வண்டு சிங்காரம் கேட்டது.
அப்பழமொழிக்கு மற்றொரு பெண் “பாத்திரத்தில் உணவு இருந்தால் மட்டுமே அதை அகப்பையால் (கரண்டியால்) எடுக்க முடியும் என்பதுதானே இதற்கான பொருள்” என்று கூறினாள்.
அதனைக் கேட்ட வயதான பெண்மணி “கந்த சஷ்டியில் முருகனை நினைத்து உண்ணா நோன்புடன் விரதம் மேற்கொண்டால் அகப்பையான கருப்பையில் குழந்தை வளரும் என்பதே இதனுடைய சரியான பொருள்” என்று விளக்கம் கூறினாள்.
சில்வண்டு சிங்காரம் பழமொழியும் அதற்கான விளக்கமும் கிடைத்த சந்தோசத்தில் ரீங்காரம் இட்டு அவ்விடத்தை விட்டு காட்டை நோக்கி பறந்தது.
சில்வண்டு சிங்காரம் காட்டை அடையும் நேரத்தில் மாலை நேரம் ஆகியிருந்தது. எல்லோரும் வழக்கமாக் கூடும் வட்டப் பாறையில் கூடத் தொடங்கினர்.
சிவ்வண்டு சிங்காரம் வட்டப் பாறையினை அடைந்தது. காக்கை கருங்காலனிடம் இன்று பழமொழி கூறும் வாய்ப்பைக் கேட்டு அதற்கான அனுமதியையும் வாங்கியது.
எல்லோரும் வந்ததும் கருங்காலன் எழுந்து பேசலானது. “என் அருமை குஞ்சிகளே, குட்டிகளே இன்றைக்கு சில்வண்டு சிங்காரம் தான் கேட்ட பழமொழி பற்றிக் கூறுவான்” என்று அமர்ந்தது.
சில்வண்டு சிங்காரம் எழுந்து “இங்கு கூடியிருக்கும் எல்லோருக்கும் வணக்கம். நான் இன்றைக்கு சட்டியில் இருந்தால் அகப்பைக்கு வரும் என்ற பழமொழி பற்றி கூறப்போகிறேன்.
கந்த சஷ்டி திருவிழா சமயத்தில் முருகனை நினைத்து குழந்தைப்பேறு இல்லாதவர்கள் விரதம் மேற்கொண்டால் அகப்பையான கருப்பையில் குழந்தை வளரும் என்பதே இதன் பொருளாகும்.” என்று கூறியது.
அதனைக் கேட்ட நரி நல்லதம்பி “சட்டியான பாத்திரத்தில் உணவு இருந்தால்தான் அகப்பையான கரண்டியில் வரும் என்பதே இதற்கான சரியான பொருளாகும். நான் சொல்வது சரிதானே தாத்தா” என்று காக்கை கருங்காலனிடம் கேட்டது.
அதற்கு காக்கை கருங்காலன் “சற்று பொறுங்கள். நான் உங்களுக்கு தக்க விளக்கம் தருகிறேன்.
நரி நல்லதம்பி கூறியபடி இந்தப் பழமொழி ஏதோ உணவுப் பொருளானது பாத்திரத்தில் இருந்தால் மட்டுமே அதை அகப்பையால் (கரண்டியால்) எடுக்க முடியும் என்ற பொருள் தருவதாக உள்ளது.
இதே பொருள்படும் படியாகவே பலரும் இப்பழமொழியை பேசி வருகின்றனர். ஆனால், இதன் உண்மையான பொருளோ வேறு ஒரு தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
குறிஞ்சி நிலத் தெய்வமெனப் போற்றப்படும் முருகனின் முக்கியத் திருவிழாக்களில் மிகப் பிரசித்தி பெற்றது கந்த சஷ்டி திருவிழா.
அறுபடை வீடுகளில் ஒன்றான தீருச்சீலரைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி நிகழ்ந்வு நடந்ததாகக் கருதப்படுகிறது.
தீமையின் உருவமான சூரபத்மனை நன்மையின் வடிவமான முருகப்பெருமான் வெற்றி கொண்ட நிகழ்ச்சியே, கந்தசஷ்டிப் பெருவிழாவானது.
அந்தக் கந்தசஷ்டி நன்னாளில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் விரதம் இருந்து முருகனிடம் வேண்ட அவர்களுக்கு குழந்தைச் செல்வங்கள் உண்டாகும் என்பதன் அடிப்படையில் இப்பழமொழி உருவானது.
அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) (கருவளரும்) வரும் என்பதாகும்.
இதுவே நாளடைவில் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என மருவி தவறானப் பொருளைக் குறிக்கப் பயன்படுதலாயிற்று!” என்று காக்கை கருங்காலன் கூறியது.
நரி நல்லான் “சரியான விளக்கம் தந்தீர்கள் தாத்தா. மிக்க நன்றி” என்று கூறியது.
காக்கை கருங்காலன் “சரி எல்லோரும் தற்போது கலைந்து செல்லுங்கள். நாளை இதுவரை பழமொழி கூறாதவர் ஒருவர் கூறுங்கள்” என்று கூறியது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)