சண்டேசுவர நாயனார் சிவ வழிபாட்டிற்காக வைத்திருந்த பாலை எட்டி உதைத்த தன் தந்தையின் காலை துண்டித்த மறையவர்.
சண்டிகேசர், சண்டேசர் என்று அழைக்கப்படும் இவரை சிவாலயங்களில் காணலாம். சிலர் கைதட்டி சாமி என்றும் கூறுவர்.
சண்டேசுவர நாயனார் சோழநாட்டில் உள்ள திருச்சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விசாரசருமா என்பதாகும்.
திருச்சேய்ஞலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ளது.
சேய் என்பது முருகனைக் குறிக்கும். முருகன் இங்கே உள்ள சிவனாரை வழிபட்டு சர்வசங்காரப் படையைப் பெற்று போரில் சூரனை வென்றார் என்பது வரலாறு.
மேலும் சிவனுக்கு குருவாக அமர்ந்து போதித்தால் முருகனுக்கு சிவத் துரோக தோசம் பற்றியது. இங்குள்ள இறைவனாரை வழிபட முருகனைப் பற்றிய தோசம் விலகியதாகக் கூறப்படுகிறது.
முருகன் வழிபட்ட இடமாதலால் இவ்வூர் சேய்ஞலூர் என்றும், திருச்சேய்ஞலூர் என்றும் அழைக்கப்பட்டு தற்போது தற்போது சேங்கனூர் என்று அழைக்கப்படுகிறது.
ஆவினம் மீது ஏன் சினம்
திருச்சேய்ஞலூரில் வேதியர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் எச்சதத்தனும் ஒருவர். இவருடைய மனைவி பெயர் பவித்திரை. இவ்விருவரின் புதல்வரே விசாரசருமா.
விசாரசருமா சிறுவயதிலேயே வேதஅறிவில் சிறந்து விளங்கினான். அத்தோடு இறைவனை எண்ணி வாழும் பேரன்பும் நிறைந்தும் விளங்கினான்.
விசாரசருமாவுக்கு ஏழு வயது நிரம்பிய போது, அவருடைய தந்தை வேதங்களைக் கற்றுக் கொள்ள வேதபாட சாலைக்கு அனுப்பினார்.
வேதபாட சாலையில் பயின்ற சமயம் ஒருமுறை விசாரசருமா நண்பர்களுடன் மண்ணியாற்றங் கரைக்குச் சென்றார்.
அப்போது மண்ணியாற்றங் கரையில் சிறுவன் ஒருவன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். பசு ஒன்று
அச்சிறுவனை முட்டியது. இதனால் கோபம் அடைந்த அச்சிறுவன் கையிலிருந்த கோலால் பசுவை அடிக்கத் தொடங்கினான். பசுவின் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தியது.
இதனைக் கண்ட விசாரசருமா பசுவின் மேல் கொண்ட அன்பால் கண்ணீர் வடித்தான்.
ஆநிரைகளை மேய்த்த அச்சிறுவனிடம் விசாரசருமா “உலகத்தின் தலைவனான சிவனாரின் அபிசேகத்திற்கு உதவும் பஞ்சகவ்யத்தை அளிப்பது ஆவினம். மேலும் சிவனாரும் அவர் தம் அடியார்களும் பூசிக் கொள்ளும் திருவெண்ணீற்றின் மூலத்தைக் கொடுப்பது ஆவினம். எல்லா தேவர்களையும், எல்லா தீர்த்தங்களையும் கொண்டு விளங்குவது ஆவினம். எல்லாவற்றிற்கும் மேலாக சிவனார் எழுந்தருளும் திருநந்தியின் இனம் இவ்வாவினிம். இப்படிப்பட்ட பெருமைகளை உடைய பசுவிடம் கடுமையாக நடந்து கொள்கிறாயே? இனி நானே இப்பசுக்களை மேய்கிறேன்.” என்று கூறி அப்பொறுப்பினை ஏற்றான். ஊராரும், வேதியர்களும் இதற்கு உடன்பட்டனர்.
பரமனுக்கு பாலாபிசேகம்
விசாரசருமா பசுக்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வான்; மண்ணியாற்றின் கரையில் புற்கள் மிகுந்த இடத்துக்குப் பசுக்களை அழைத்துச் சென்று மேய விடுவான்; தானே புற்களைப் பறித்தும் கொடுப்பான்; தூய நீர் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று நீரருந்தச் செய்து கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாப்பான்.
இதனால் பசுக்கள் விசாராசருமாவிடம் பேரன்பு கொண்டன. அவை வழக்கத்தைவிட அதிகமான பாலைக் கறந்தன. அவை அவ்வப்போது மண்ணில் பாலைச் சொரிந்தன. இதனைக் கண்டதும் விசாரசருமா இறைவனின் அபிசேகத்திற்கு இந்த பால் உதவுமல்லவா? என்று எண்ணினான்.
மண்ணியாற்றங் கரையிலேயே மண்ணால் கோவில் கட்டி அதில் மண்ணால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கினான். புதிய பாண்டங்களைக் கொண்டு வந்து பசுக்களிடமிருந்து பாலைக் கறந்தான். ஆற்றங்கரையில் இருந்த பூக்களையும், இலைகளையும் பறித்து வந்தான்.
பின்னர் பசுக்களின் பாலினைக் கொண்டு மணல் லிங்கத்திற்கு வேதமந்திரங்களைக் கூறி அபிசேகம் செய்தான். பூக்களையும், இலைகளையும் கொண்டு வேதத்தால் அர்ச்சனை செய்தான்; தன்னை மறந்து சிவலிங்க வழிபாட்டில் ஈடுபட்டான்.
இவ்வாறு நாள்தோறும் ஆத்மார்த்தமான சிவலிங்க வழிபாட்டினை விசாரசருமா மேற்கொண்டு வந்தான்.
ஒருநாள் விசாரசருமாவின் செயலினை சேய்ஞலூரைச் சேர்ந்த அறிவிலி ஒருவன் கண்டான். பசுக்களின் பாலினை வீண் செய்கிறானே என்று எண்ணினான்.
ஊருக்குள் சென்று நடந்தவைகளைக் கூறி பசுக்களின் பாலினை எல்லாம் மணலில் ஊற்றி விசாரசருமா வீணாக்குவதாகக் கூறினான்.
அதனைக் கேட்ட ஊர்மக்கள் எச்சதத்தனிடம் சென்று நடந்தவைகளைக் கூறி விசாரசருமாவிடம் பாலை வீணாக்காமல் இருக்கும்படி செய் என எச்சரித்தார்கள்.
எச்சதத்தனும் நடந்தவைகள் ஏதம் தனக்கு தெரியாது எனவும், இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான்.
தந்தையை தண்டித்த தனயன்
மறுநாள் விசாரசருமாவின் நடவடிக்கைகளைக் கவனிக்கும் பொருட்டு எச்சதத்தன் பகல் வேளையில் மண்ணியாற்றங்கரைக்குச் சென்று மரத்தில் மறைந்து கொண்டான்.
அங்கே விசாரசருமா புதிய மணல் லிங்கத்தை அமைத்தான். பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து பாண்டங்களில் வைத்தான். பச்சிலைகளையும், பூக்களையும் பறித்து வந்தான்.
பின்னர் அவன் சிவவழிபாட்டைத் தொடங்கினான். கறந்த பசுவின் பாலைக் கொண்டு அபிசேகத்தைத் தொடங்கினான். அதனைக் கண்டதும் எச்சதத்தன் கோபம் கொண்டான். கம்பு ஒன்றை எடுத்து வந்து விசாரசருமாவை முதுகில் அடித்தான். கடுமையான சொற்களால் திட்டினான்.
விசாரசருமன் ஆத்மார்ந்தமாக சிவபூசையில் ஈடுபட்டிருந்ததால் எச்சதத்தன் அடித்ததோ, திட்டியதோ உணரவில்லை. எச்சதத்தனின் கோபம் தலைக்கு ஏறியது. உடனே தன்னுடைய கால்களால் பால் இருந்த பாண்டங்களை உதைத்தான்.
அபிசேகப் பால் முழுவதும் சிந்தியது. அதனைக் கண்டதும் விசாரசருமன் தன்னிலை உணர்வு வந்து தன்னருகில் இருந்த கழியை (கம்பு) எடுத்து, அபிசேகப் பாலை உதைத்த எச்சதத்தனின் கால்களை நோக்கி வீசினான்.
கழியானது கோடாரியாக மாறி எச்சதத்தனின் கால்களை துண்டாக, அவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.
அப்போது வானத்தில் விடைவாகனத்தில் இறைவனார் உமையம்மையுடன் அம்மையப்பராகத் தோன்றினார்.
அவரை பலவாறு போற்றி வழிபட்டான் விசாரசருமன்.
இறைவனார் “அபிசேகப் பாலை உதைத்தது பெற்ற தந்தை என்றும் பாராமல், தண்டித்த உனக்கு இனி யாமே தந்தை.” என்று அருளினார்.
மேலும் “உனக்கு இன்று முதல் சண்டீசப் பதவியை வழங்கினோம். எம்முடைய வழிபாட்டில் படைக்கப்படும் பொருட்கள் யாவையும் இனி உனக்கே உரித்தாகும். நீ இனி சிவனடியார்களாகிய மகேசுவர்களுக்கெல்லாம் தலைவனாக முதன்மை மகேசுவரான விளங்குவாய்” என்று அருளி தன்னுடைய திருமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமாவுக்கு அணிவித்தார்.
இறைவனின் திருவாக்கின்படி, விசாரசருமர் அன்று முதல் சண்டேசுவரர் ஆனார்.
கால்களை இழந்த எச்சதத்தன் இறையருளால் சிவலோகத்தை அடைந்தான்.
இறைவனின் அருள்வாக்கின்படி, இன்றும் இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களை சண்டேசுவருக்கு படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.
சண்டேசுவர நாயனார் குருபூஜை தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
சிவவழிபாட்டிற்கான பாலை எட்டி உதைத்த தந்தையின் காலை துண்டித்த சண்டேசுவர நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மெய்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதையாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டி பெருமானுக்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.
என் உள்ளமெல்லாம் உருகி போயிற்று அடியாரின் வாழ்வை படித்தபோது தமிழர்கள் அனைவரும் மறவாமல் அறுபத்து மூவரின் வாழ்விலும் இறைவன் இடைபட்டு ஆட்கொண்ட காரியங்களை படித்து அறிந்திட வேண்டுகிறேன்.