சத்தியவாணி முத்து அவர்கள் மத்திய அமைச்சர், ராஜ்ய சபை உறுப்பினர், தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளின் மூலம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்காக ஓயாது உழைத்தவர்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வாஞ்சையோடு ‘அன்னையே’ என்று அழைத்த பெருமைக்குரிய அவர், அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர்.
திராவிட முன்னேற்றக் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த அன்னை சத்தியவாணி முத்து, தமிழக அரசியலில் ஒரு சிறந்த தலைவர்.
பகுத்தறிவுக் கொள்கை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு எனும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த திராவிடக் கொள்கையின் ஈடுபாட்டால் சிறுவயது முதற்கொண்டு அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய சுதந்திர காலகட்டத்தில் தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக, 1949 ஆம் ஆண்டு சி.என்.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
தொடக்க காலம் முதல் அன்னை சத்தியவாணி முத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினராகவும், அதன் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து அக்கட்சியில் பணியாற்றி வந்தார்.
1953ல் திரு.ராஜகோபாலாச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.
அன்றைக்கு பெண்கள் பொதுவெளியில், அதிலும் குறிப்பாக அரசியலில் ஈடுபடுவது தவறானது என்ற எண்ணம் இருந்தது.
ஐம்பதுகளில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சிய காலகட்டத்தில் ஓர் அரசியல் தலைவராக, நாட்டையும், சமூகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதை உணர்ந்து, யார் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் கவலை இல்லை; தான் சார்ந்த கொள்கையிலிருந்து பின்வாங்குவதும் இல்லை என்ற நோக்கத்தில் உறுதியாக இருந்தார் சத்தியவாணி முத்து.
அன்னை சத்தியவாணி முத்து தன்னுடைய அளப்பரிய உழைப்பாலும், தியாகத்தாலும் மக்களை வெகுவாக கவர்ந்த தலைவராக உருவெடுத்தார் என்பதற்குச் சான்றாக 1957 ஆம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றதைக் குறிப்பிடலாம்.
பின்னர் 1959 ஆம் ஆண்டு முதல் 1968-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் கட்சியில் அன்னையாருக்கு கொள்கை விளக்க செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
1967 மற்றும் 1971 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய பொழுது அன்னை சத்தியவாணிமுத்துவிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் என இரு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
பொது வாழ்க்கையில் எந்த ஆணுக்கும், அரசியல்வாதிக்கும் தான் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார் சத்தியவாணி.
எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு உடல் பொருள், ஆவி அனைத்தையும் வெளிப்படுத்தி முழு ஆற்றலையும் பயன்படுத்தி தான் சார்ந்த இயக்கத்திற்கும், மக்களுக்கும் சமூக கடமையை ஆற்றுவதில் அவருக்கிருந்த ஆர்வம் அளவிட இயலாது.
அரசியல் பணியில் இருந்து கொண்டு அன்னை என்கின்ற மாத இதழையும் அவர் நடத்தினார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
சத்தியவாணி முத்து அவர்கள் 1974 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற புதுக் கட்சியை தொடங்கி மக்கள் பணியை தொடர்ந்து செய்து வந்தார். அக்கட்சிக்கு போதிய அளவிற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் 1977ம் ஆண்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தன்னுடைய கட்சியையும் இணைத்துக் கொண்டு சமூக பணி ஆற்றி வந்தார்.
இவரின் சமூகப் பணியை பார்த்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக 1978 ஏப்ரல் முதல் 1984 ஏப்ரல் வரை ராஜ்ய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்பொழுது மத்திய அமைச்சரவையின் பிரதம மந்திரியாக இருந்தவர் மாண்புமிகு சரண்சிங் அவர்கள்.
எந்த கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றி பெறுபவர் யார் வேண்டுமென்றாலும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும். ஆனால் அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது எல்லோராலும் முடியாது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சாராத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வந்த சத்தியவாணி முத்துவிற்கு அமைச்சர் பதவியை கொடுத்தது, இந்திய வரலாற்றிலும் காங்கிரஸ் பேரியக்கத்திலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் முன்மாதிரியாக விளங்கிய நிகழ்வாக இதைக் கூறமுடியும்.
அவருடைய தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்த பதவியாக தான் இதைக் கருத இடமுண்டு. காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக அங்கம் வகித்த போதும் தன்னுடைய கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.
அன்னையின் அரும்பணிகள்
சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் அமைச்சராக இருந்த போதும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின பெண்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் என எல்லோருக்கும் பல்வேறு நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மேலும் அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடைய அயராது உழைத்தார்.
அவர் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் கவனம் செலுத்தினார்;
தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பும், கல்வியும் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்தார்;
தமிழகம் முழுவதும் 200 குழந்தைகள் நல மையம், மாவட்ட சமூக நல மையங்கள் உருவாக்கினார்;
தமிழகம் முழுவதும் 508 மாணவர்கள் விடுதி தோன்றுவதற்கும் உறுதுணையாக இருந்தார்.
இப்படி அவர் அமைச்சராக இருந்தபோது எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டுவந்து, தன் முழு உழைப்பையும், ஆற்றலையும் பயன்படுத்தி தமிழ்நாடு முன்னேறுவதற்கு வழி கண்டார்.
டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் கல்லூரி தொடங்கிய பெருமை அன்னைக்கு உண்டு.
திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது டாக்டர் அம்பேத்கர் பெயரில் கல்லூரி தொடங்குவதற்கு ஒவ்வொருவரிடமும் உதவி கேட்டார்.
மக்கள் கொடுத்த பணத்தை அன்றைய முதலமைச்சரிடம் கொடுத்து கல்லூரி கட்டுவதற்கு அதிலும் குறிப்பாக தன்னுடைய தொகுதியான பெரம்பூர் பகுதியில் கட்ட வேண்டும் என்ற கொள்கையின் வெளிப்பாடு தான் வியாசர்பாடியில் இன்று டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி என உயர்ந்து நிற்கிறது.
இடர்பாடுகள் வந்த போதும் சோர்வடையாமல் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றினார் அவர்.
அதுமட்டுமல்ல பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை தமிழகத்தில் கொண்டு வந்து சேர்த்த பெருமை அவருக்கு உண்டு.
டாக்டர் அம்பேத்கர் என்பவர் யார்? அவர் பெருமை, அவருடைய கல்வியறிவு, அவரை உலக நாடுகள் கொண்டாடும் விதம், அவரின் புகழ், பட்டியலின மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு, அளப்பரிய தியாகம் இவை எல்லாவற்றையும் சிற்றூர்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்தார்.
எ.பாவலன்
drpavalan@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!