சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சத்தான, ஏழைகளின் உணவாகும். இக்கிழங்கு இனிப்பு சுவையுடன் அதிகச் சத்துக்களையும் கொண்டுள்ளது.  

இக்கிழங்கு உலக மக்களால் பயன்படுத்தப்படும் ஏழாவது முக்கிய உணவுப்பொருள் என்ற சிறப்பினைப் பெறுகிறது. இது பரவலாக உலகெங்கும் பயிர் செய்யப்படுகிறது.

இக்காயின் தாயகம் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் ஆகும். இது படந்து வளரும் கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

இக்கிழங்கானது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்ததை பெரு நாட்டு குகைகளில் காணப்படும் அடையாளங்களின் மூலம் அறிய முடிகிறது.

கொலம்பஸின் மூலம் இக்காய் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

16-ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் மூலம் பிலிபைன்ஸிலும், போர்த்துக்கீசியர்கள் மூலம் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, தெற்காசியப் பகுதிகளிலும் இக்காய் பரவியது.

அமெரிக்க புரட்சியின் போது இக்காயானது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாகத் தரப்பட்டது.

சீனா உலகில் 80 மில்லியன் டன் சர்க்கரை வள்ளிக்கிழங்கினை உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது.

ஆப்ரிக்கா 14 மில்லியன் டன் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் 2 மில்லியன் டன் சர்க்கரை வள்ளிக்கிழங்கினை உற்பத்தி செய்து இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கானது படர்ந்து வளரும் கொடிவகைத் தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இக்கொடியில் இலைகள் இதய வடிவில் காணப்படுகின்றன.

 

சர்க்கரை வள்ளிக்கிழங்குக் கொடி
சர்க்கரை வள்ளிக்கிழங்குக் கொடி

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பூ
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பூ

 

இத்தாவரம் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் இயல்பினைப் பெற்றுள்ளது. போதுமான தண்ணீரும், சிறிதளவு கவனமும் இருந்தால் இத்தாவரத்திலிருந்து நல்ல பலனைப் பெறலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்பது கொடியின் வேர்ப்பகுதி ஆகும்.

 

மண்ணில் புதைந்திருக்கும் கிழங்கு
மண்ணில் புதைந்திருக்கும் கிழங்கு

 

கொடியின் வேரில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு
கொடியின் வேரில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கானது நீளமாகவோ, உருண்டையாவோ அல்லது ஒழுங்கற்ற வடிவிலோ காணப்படுகிறது.

இக்கிழங்கின் மேல்தோல் மெல்லிதாக இருக்கும். இக்கிழங்கின் மேல்தோல் வெள்ளை, கிரீம், மஞ்சள், ஆரஞ்சு, பழுப்பு, சிவப்பு, அடர் ஊதா நிறங்களில் காணப்படும்.

 

பலவண்ண‌ சர்க்கரை வள்ளிக்கிழங்குகள்
பலவண்ண‌ சர்க்கரை வள்ளிக்கிழங்குகள்

 

இக்கிழங்கின் உட்புறச் சதையானது வெள்ளை, இளச்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் உள்ளது.

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் உட்பகுதி
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் உட்பகுதி

 

சர்க்கரை வள்ளிக்கொடியானது கொன்வொல்யூலேசேவி என்ற மானிங் குளோரி தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் இபோமோயி பட்டடாஸ் என்பதாகும்.

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இக்கிழங்கானது மிக அதிகளவு விட்டமின் ஏ-வினைக் கொண்டுள்ளது. இதில் விட்டமின்கள் பி1 (தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்) அதிகளவு உள்ளன.

மேலும் இக்காயில் விட்டமின் சி, பி3(நியாசின்), இ, கே, போலேட்டுகள் ஆகியவையும் உள்ளன.

இக்கிழங்கில் தாதுஉப்புக்களான மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அதிகளவு உள்ளன. மேலும் இதில் துத்தநாகம், கால்சியம் போன்றவையும் உள்ளன.

இக்காயில் அதிகளவு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவையும் இருக்கின்றன.

இக்காயில் புரோடீன், ஆல்பா கரோடீன், பீட்டா கரோடீன்கள் ஆகியவையும் உள்ளன.

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் மருத்துவப் பண்புகள்

நோய் தடுப்பாற்றலைப் பெற

இக்காயானது அதிகளவு பீட்டா கரோடீனைக் கொண்டுள்ளது. பீட்டா கரோடீனான ஆன்டிஆக்ஸிஜென்டுடன் விட்டமின் பி தொகுப்புக்கள், சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் இக்காயில் காணப்படுகின்றன.

இவை உடலுக்கு நோய் தடுப்பாற்றலை வழங்குவதுடன் உடலினை பல்வேறு உபாதைகளிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றன. எனவே சர்க்கரை வள்ளிக்கிழங்கினை உண்டு நோய் தடுப்பாற்றலைப் பெறலாம்.

 

எதிர்ப்பு அழற்சிப் பண்பினைப் பெற

இக்கிழங்கில் உள்ள பீட்டா கரோடீன்கள், விட்டமின் சி மற்றும் மெக்னீசியம் போன்றவை எதிர்ப்பு அழற்சி பண்பினைத் தருகின்றன. இக்கிழங்கானது உட்புற மற்றும் வெளிப்புற அழற்சியைக் குணப்படுத்துகிறது.

 

சுவாசப்பிரச்சினைகள் தீர

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள தனிப்பட்ட வாசனை மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள் மூக்கு, மூச்சுக்குழாய் மற்றும் நுரையீல்களில் ஏற்படும் சுவாசப் பிரச்சினைகளை சரிசெய்கின்றன.இப்பண்பு ஆஸ்துமாவிற்கு தீர்வாக அமைகிறது.

மேலும் இதில் உள்ள விட்டமின் சி, இரும்புச்சத்து போன்றவை மூச்சுக்குழாய் அழற்சி நோயினை சரி செய்ய உதவுகின்றன. எனவே இக்கிழங்கினை உண்டு சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறலாம்.

 

கீல்வாத நோய்க்கு தீர்வு பெற

இக்கிழங்கில் உள்ள பீட்டா கரோடீன்கள், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் விட்டமின் பி தொகுப்புகள் கீல்வாத நோய்க்கு தீர்வாக விளங்குகின்றன.

கீல்வாதத்தால் ஏற்படும் வலியினைக் குறைக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கினை வேக வைத்த தண்ணீரானது மூட்டுகளில் ஊற்றப்படுகிறது.

 

எளிமையான செரிமானத்திற்கு

இக்கிழங்கில் காணப்படும் நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை செரிமானத்தை எளிதாக்குகின்றன. இக்கிழங்கில் செரிமானத்திற்கு எளிதான தனித்துவமான ஸ்டார்ச் உள்ளது.

இக்கிழங்கினை உண்பதால் உணவு எளிதாக செரிக்கப்படுவதுடன் இரைப்பை, குடல் போன்ற செரிமான உறுப்புகள் புத்துணர்வினைப் பெறுகின்றன. எனவே இக்கிழங்கினை உண்டு எளிமையான செரிமானத்தைப் பெறலாம்.

 

புற்றுநோய்க்கு

இக்காயின் தோலின் நிறத்திற்கு காரணமான பீட்டா கரோடீன் நிறமிகள் சிறந்த ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகளாகவும், புற்றுநோய் எதிர்ப்பு காரணியாகவும் செயல்படுகின்றன.

இக்காயில் உள்ள பீட்டா கரோடீன்கள், விட்டமின் சி போன்றவை பெருங்குடல், குடல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உள்உறுப்புகளில் உள்ள புற்றுநோயைச் சரிசெய்கின்றன.

 

அல்சர் நோயினை சரிசெய்ய

சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரைப்பை, குடல் உள்ளிட்ட செரிமான உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கிறது. இதில் உள்ள விட்டமின் பி தொகுப்புகள், சி, பீட்டா கரோடீன்கள், பொட்டாசியம், கால்சியம் போன்றவை அல்சர் நோயினை சரிசெய்கின்றன.

இக்காயில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கல் மற்றும் அமிலச் செயல்பாடுகளைக் குறைத்து அல்சர் நோய் வருவதைத் தடைசெய்கிறது. மேலும் அல்சர் நோயினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்திற்கு இது சிறந்த தீர்வாக அமைகிறது.

 

சர்க்கரை நோய்க்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கிழங்கு வகையைச் சேர்ந்ததாக இருப்பினும் சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

ஏனெனில் இக்காயானது இன்சுலின் சுரப்பினை ஊக்கப்படுத்தி சரிவர செயல்பட செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துகிறது.

எனவே கார்போஹைட்ரேட் அதிகம் உணவுகளான அசிரி உள்ளிடவைகளுக்கு பதிலாக இக்காயினை அளவோடு சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாம்.

 

உடலில் நீர்ச்சத்தினை சரிசெய்ய

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து உடலில் நீர்சத்தினை நிலைநிறுத்த உதவுகிறது. உடலில் நீர்ச்சத்து சமநிலைப்படுத்தப்படுவதால் உடல் செல்களின் இயக்கம் சீராக நடைபெறுகிறது. எனவே உடல் உற்சாகம் அடைய இக்கிழங்கினை உண்டு பயன்பெறலாம்.

 

போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

குடிப்பழக்கம், புகைத்தல், போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றால் தமனி மற்றும் சிரை இரத்த குழாய்களின் சுவர்கள் தடிமனாகி இதய நோய்களைத் தோற்றுவிக்கின்றன.

இக்காயினை உண்ணும்போது தமனி மற்றும் சிரை இரத்த குழாய்களின் சுவர்கள் தடிமனாவது தடுக்கப்படுகிறது. இக்காயில் உள்ள பீட்டா கரோடீன் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை கணுக்கால் மற்றும் இதயநலத்தினைப் பேணுகின்றன.

எனவே இக்காயினை உண்டு போதை பழக்கத்தால் பாதிப்பட்டு அப்பழக்கத்தினை கைவிட்டவர்கள் பலன் பெறலாம்.

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கினைப் பற்றிய எச்சரிக்கை

இக்காயானது ஆக்ஸாலிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. எனவே சிறுநீரகப்பிரச்சினை உள்ளவர்கள் இக்காயினை தவிர்ப்பது நலம்.

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கினை வாங்கி உபயோகிக்கும் முறை

சர்க்கரை வள்ளிக்கிழங்கினை வாங்கும்போது புதிதானதாக, கனமானதாக ஒரே சீரான நிறத்துடன் இருப்பதை வாங்க வேண்டும்.

வெட்டுக்காயங்கள் உடைய தோல் சுருங்கிய மென்மையான நிறம் வேற்றுமை உடையவற்றை நீக்கிவிட வேண்டும். முளைப்புகளுடன் உடையவற்றையும் நீக்கிவிட வேண்டும்.

இக்காயினை குளிர்ந்த இருட்டான இடத்தில் வைக்க வேண்டும்;. குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.

இக்காயினை உயோகிக்கும்போது மட்டுமே தண்ணீரில் அலசி உபயோகிக்க வேண்டும்.

இக்கிழங்கு பச்சையாக, வேகவைத்து, அவித்து, வறுத்து என பலவழிகளில் உண்ணப்படுகிறது. சூப்புகள், இனிப்புகள், சாலட்டுகள், சூஸ்கள், கேக்குகள், சிப்ஸ்கள், பொரியல்கள்; ஆகியவை தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

ஆவியில் வேக வைத்து உண்பதால் இக்காயில் உள்ள பெரும்பாலான சத்துக்களை நாம் பெற முடியும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலினை சமைப்பதற்கு முன்னர் அகற்றக் கூடாது. ஏனெனில் தோல் மற்றும் அதன் அடிப்பரப்பில் விட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் அதிகளவு உள்ளன. தோலினை நீக்கும்போது நுண்ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.

சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கினை உண்டு நலமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.