சத்து மாவு

சத்து மாவு

சத்து மாவு என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆரோக்கியத்திற்காக உண்ணக் கூடிய உணவு வகை.

குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பாலில் கலந்து குடிப்பதற்கு என ஏராளமான மாவுப் பொருட்கள் இன்றைக்கு சந்தையில் குவிந்துள்ளன.

குழந்தைகள் மட்டுமில்லாமல் பெண்கள், முதியோர்களின் ஆரோக்கியத்திற்கு என்று பிரத்தியோகமான மாவுப் பொருட்கள் என்று விளம்பரம் செய்யப்படுகின்றன. இவைகளின் விலையோ அதிகமாக உள்ளது.

குழந்தைக்கு உணவு முறை மாற்றம் தொடங்கும் போது பொதுவாக சத்து மாவிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் திரவ நிலையிலும், பின் கூழ் போல செய்தும் குழந்தைக்கு தரப்படுகிறது.

நாம் நம் வீட்டில் உள்ளப் பொருட்களை வைத்தே எளிய முறையில் சத்தான சத்து மாவு தயாரிக்கலாம். அதே நேரத்தில் இந்த சத்து மாவை தயாரிப்பதற்கான விலையும் குறைவு. இனி சத்து மாவு தயாரிப்பு முறை பற்றி பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

பாசிப் பயறு – 100 கிராம்

மொச்சை – 100 கிராம்

கேழ்வரகு – 100 கிராம்

மக்காச் சோளம் – 100 கிராம்

கோதுமை – 100 கிராம்

உளுந்து – 50 கிராம்

பொட்டுக் கடலை – 50 கிராம்

சீமை அமுக்கரா – 50 கிராம்

நெல்லி வற்றல் – 50 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

கிராம்பு – 10 கிராம்

சுக்கு – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

பாதாம் பருப்பு – 25 கிராம்

முந்திரிப் பருப்பு – 25 கிராம்

பிஸ்தாப் பருப்பு – 25 கிராம்

 

செய்முறை

வெறும் கடாயில் பாசிப் பயறு, மொச்சை, கேழ்வரகு, மக்காச் சோளம், கோதுமை, உளுந்து ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

சீமை அமுக்கரா, நெல்லி வற்றல், ஏலக்காய், கிராம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பிஸ்தாப் பருப்பு ஆகியவற்றை நன்கு வெயில் காய வைத்து எடுக்கவும்.

வறுத்த பொருட்கள், காய வைத்தப் பொருட்களுடன் பொட்டுக் கடலை சேர்த்து மிசினில் கொடுத்து அரைக்கவும். சூடு ஆறியவுடன் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும்.

1 முதல் 2 தேக்கரண்டி பாலில் கலந்து பருக உடல் வன்மை பெறும்.

 

குறிப்பு

முதலில் சத்து மாவினை சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரில் நன்கு கட்டி விழாதவாறு கரைத்துக் கொள்ளவும். பின் அதனுடன் காய்ச்சிய பால், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகவும்.

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.