சத்தை ஏர் மூக்கையா ஓர் ஏழை விவசாயக் கூலியின் கதை.
நமது கிராமங்களில் பச்சைப் பசேலென பச்சைப் பாயை விரித்தாற்போல் எங்கும் பசுமையாக இருந்த பலவிளைநிலங்கள், இன்றைக்கு தரிசுக் காடாகவும், வீட்டு மனைகளாகவும் காட்சி தருகின்றன.
அப்படியாகத்தான் தஞ்சைத் தரணியின் சூரப்பள்ளம் எனும் அழகிய கிராமமும் காலத்தின் போக்கினால், மாறுபட்டு முற்றிலுமாக கலையிழந்து நிற்கிறது.
காலத்தின் மாற்றம், விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமை பீத்திக் கொள்ளும் சனங்களுக்கு மத்தியில் அகப்பட்டும், உட்பட்டும் போராடி தத்தளிக்கும் பாமர ஏழை விவசாயி சத்தை ஏர் மூக்கையா என்ற ஒருவரோடு சேர்ந்துதான் நாம் சிறிது நேரம் பயணிக்கப் போகிறோம்.
“ஏங்க; உங்களே! உங்களே!
கெவர்மண்டு ஆபிசர் வந்திருக்காவோ
போயிட்டு என்னானு பாருங்க”
என்று பொன்னம்மாள் மாட்டுக்குத் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த கணவரான சத்தை ஏர் மூக்கையாவை உசுப்பினாள்.
“வாங்க சாமி, கும்பிடுரோனுங்க”
“ஓட்டுப் போடுறதுக்கு பெயர், வயசு சரி பார்க்க வந்திருக்கோம் பெரியவரே”
“மொத்தம் எத்தனை பேர் வீட்டில?”
“நானும் என் பொஞ்சாதி பொன்னம்மா ரெண்டு பேரும்..ங்க சாமி.”
“வேறு யாரும் இல்லையா பெரியவரே”
“இல்ல சாமி.”
“உங்க பேரு மூக்கையா, அவங்க பேரு பொன்னம்மா சரி தானே?”
“சரி தான் சாமி”
“வயசு சொல்லுங்க, பெரியவரே”
“எம்புட்டு, ம்.. ஒரு 70 போட்டுக்கோங்கோ எனக்கு, அவளுக்கு 65 போட்டுக்கோங்கோ சாமி.”
“அதெல்லாம் போட முடியாது; சரியா, பொறந்த வருசம் சொல்லனும் தெரியுமுல?”
“வருசம் எல்லாம் தெரியாது சாமி”
“சரி, சரி 70 வயது 65 வயசா போட்டு வைக்கிறேன். அப்புறம் யார் வந்து கேட்டாலும் இதேதான் சொல்லணும். மாத்தி சொல்லக் கூடாது. என்ன புரியுதா?”
“அப்படியே, ஆகட்டும் சாமி; அப்படியே சொல்லிபுடுதே.”
வந்திருந்தவர்கள் இடம்பெயரவே, மாட்டை பூட்டிக்கிட்டு கழனிக்குப் புறப்பட்டார் மூக்கையா.
சுமார் 50 வருடத்திற்கு முன்னால், மூக்கையா ஓர் கூலி / பண்ணை ஆளாக மணியக்காரர் வீட்டுக்கு வேலைக்கு வந்தார்.
பின்னாளில் வேளாண்மைக்கு (ஓர் ஏக்கருக்கு இவ்வளவு பணம் என பேசிக்கொண்டு) விளைநிலங்களில் ஏர் ஓட்டித் தந்தார்.
ஊர்காரர்களுக்கு நல்ல ஆகச்சிறந்த உழைப்பாளி. அதனால்தான் ஒரு சிறுபகுதியை (ஒரு மா இருக்கும்) மணியக்காரர் வேளாண்மை செய்து கொள்ள குத்தகைக்கு மூக்கையாவிடம் கொடுத்தார்.
“யாருய்யா, இது, சின்னபுள்ள; ஆ, எப்ப பள்ளிக்கூடத்திலிருந்து வந்திய?”
“ஆமா தாத்தா, நான் இப்ப காலேஜ் போயிட்டேனே, திருவிழாவுக்கு வந்தேன்.
பிரண்ட்ஸ் எல்லாம் கூட வந்திருக்காங்க. பம்பு செட்ல குளிச்சுட்டு இருக்காங்க.
நான் உங்களைப் பார்த்திட்டு போக வந்தேன். வீட்டுக்கு போனேன். ஆயா வயலுக்குப் போனதா சொன்னாங்க. நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கே அய்யா, பெரிய அய்யா புண்ணியத்துல அப்படியே, மணியக்காரர் மனசு உங்களுக்கு சின்ன புள்ள.
கடவுள் அவுக எனக்கு. அவரு மனசுக்கு நீங்க எல்லாம் நல்லா இருப்பிய அய்யா.”
“சரி தாத்தா நேரம் ஆச்சு. ஆச்சி தேடும் வீட்டுல… நாளைக்கு தாத்தாவுக்கு தெவசம். மறக்காம வந்துடுங்க ஆயாவை கூட்டிட்டு.”
“சரிங்க சாமி, வந்திடுறேன்.”
மணியக்காரர் இறந்து பத்து வருடம் ஆகி போச்சு. அடைக்கலம் தந்து வாழ்வு தந்த அந்த பெரிய மனுசனை பற்றிய நினைவுகளோடு வரப்பில் சிறிது நேரம் கண் அயர்ந்தார் மூக்கையா.
“பொன்னம்மா கருக்கல்ல உசுப்பி விடு ஆத்தா. வெண்டகாய் கொஞ்சம் பறிச்சு வந்துருக்கே. நாளைக்கு சந்தைக்கு போய்ட்டு குடுத்து வரணும்…”
“சரி, சரி உசுப்பி விடுறேன்… கேப்பை கரைக்கட்டுமா”
“வேணாம் புள்ள; எனக்கு வசுரு மப்புசம் ஆ இருக்கு புள்ள.”
“மோர் கலக்கவா”
“வேணாம் புள்ள, தண்ணிய கொஞ்சம் காய வை.”
“என்ன ஆச்சு ஒரு மாதிரியா, பேசுரிய.”
“இல்ல புள்ள ஒன்னும் இல்ல. நாளைக்கு அய்யாவுக்கு தெவசமாம். அதா புள்ள மனசு கொஞ்சம் கரைசலா இருக்கு.”
“நல்ல மனுசன் அவுக. நல்லவுங்கள மட்டும்தான் ஆயுசு கொறஞ்சு எழுதிப்புடுறான் சாமி” என்று சொல்லிக் கொண்டே சிமிலி விளக்கை கையில் ஏந்தியபடி அடுப்பங்கரைக்கு விரைந்தாள்.
அதிகாலை எழுந்து பட்டுக்கோட்டை சந்தைக்குப் புறப்பட்டார் மூக்கையா.
“என்ன சாமி பாதி விலைக்கே கேட்குரியே, பத்தாது சாமி”
“பெரியவரே, எல்லாம் பூச்சியா இருக்கு. பாதிக்கு மேல மாட்டுகிட்டதான் கொட்டணும்.”
“இல்ல சாமி உடைச்சுப் பாருங்க நல்ல இளம் காய்ங்க சாமி”
ஒருவழியா, முன்னர் பேசிய விலையைவிடக் குறைந்த விலைக்கு (ரொம்பவும் குறைவாதான்) விற்று விட்டார் மூக்கையா வியாபாரியிடம்.
போயிட்டு வரும் போது வாங்கி வந்த செட்டியார் கடை மெது பக்கோடா பொட்டலத்தை பொன்னமாளிடம் தந்தபடியே, கொஞ்சம் அசதியில் உட்கார்ந்தார் மூக்கையா.
“இத ஏன் வாங்கி வந்திய, எனக்கு பல்லா மெல்ல முடியுது.”
“இல்ல புள்ள வரும்போது சூடா போட்டு, அப்பத்தான் தட்டுல போட்டாவ. சனம் அள்ளிக்கிட்டு போகுது. அதா நானும் ஒன்று வாங்கி வந்தேன்.”
“எந்திருங்க நாழி ஆச்சுல. மணியக்கார அய்யா வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம்.”
“நேத்து பெரிய ஆச்சி ஆளவிட்டு சொல்லிவிட்டாக. வெரசா போயிடணும்.” என சொல்லிக் கொண்டே தம்பதிகள் வீட்டை விட்டுப் புறப்பட்டனர். பொடி நடையாய் நடந்து மணியக்கார அய்யா வீடு போய் சேர்ந்தனர்.
“என்ன மூக்கையா, இங்னக்குள்ள இருக்கிறவ, வர இவ்வளவு நேரமா?” என ஆச்சி வினவினாள்.
“இல்ல பெரிய ஆச்சி, சந்தைக்கு போயிட்டு வந்தேன் ஆச்சி, அதான்!”
“சரி, சரி, அங்கிட்டு போய்ட்டு உட்காரு.
என்ன ஏடையில ஓடையில வந்துரவ பொன்னம்மா, என்ன இப்பல்லாம் வரதில்லை.”
“இல்ல பெரிய ஆச்சி, கண்ணுதான் சரியா தெரிய மாட்டுது ஆச்சி, ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கு ஆச்சி, அதான் வந்தாலும் ஏதோ தோதா முடியில ஆச்சி”
“பாத்து பத்திரமா இரு பொன்னம்மா, வெளியில, தெருவுல போறப்ப மூக்கையாவ கூட்டிட்டு போ, என்ன விளங்குதா?”
“என்னத்த ஆச்சி, அவுகளும் முன்ன மாதிரி வேலை செய்ய முடியறதில்லை ஆச்சி”
“ஆமா, ஆமா, வயசும் ஆச்சுல்ல” என சொன்னபடியே மணியக்காரர் அய்யா மகன் பாலு வந்தார்.
அவரைப் பார்த்தவுடனே மூக்கையா எழுந்து ஓடிவந்து அவரருகே நின்றார்.
“அய்யா, நல்லா இருக்கியலா, ரெண்டு மூணு தடவ வீட்டுக்கு வந்தேன். நீங்க மெட்ராசுக்கு போயிருக்கிறதா சொன்னாங்க ஆச்சி. என்ன சோலி அய்யா?”
“அது ஒண்ணுமில்ல மூக்கையா, நம்ப நிலத்தோட கேஸ் கோர்ட்ல நடந்துட்டு இருக்கில்ல. அதா அங்கேயே தங்க வேண்டியதா போச்சு.”
“யாரு அய்யா, அந்த மூர்த்தி பயதானே, அவனே சும்மா விடாதிய அய்யா; எவ்வளவோ எடஞ்சல் கொடுத்திட்டு இருக்கான்.”
ம்.. பாப்போம் அடுத்த மாதம் முடிவு என்னனு தெரிஞ்சுடும்.”
“சரி, சரி பார்த்து சூதானமா போயிட்டு வாங்க அய்யா. ஜாக்கிரதையா இருந்துகுடுங்க அய்யா.”
சாமி படையலும் முடிந்து பந்தி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூக்கையாவும், பொன்னமாளும் சாப்பிட்டுவிட்டு மணியக்காரர் அய்யா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்றனர்.
“நீ அப்படியே வீட்டுக்கு போ புள்ள. அந்த மீனாட்சி, மாட்ட அவுத்து விட்டு வயல்ல மேய விட்டுப்புடுவா. எல்லாத்தையும் அப்படியே ஆஞ்சுபுடும். எவ்வளவோ சொல்லியும் பார்த்துபுட்டேன். அவ மசியிற மாதிரி இல்ல.”
“சரி சரி பாத்துப் போங்க, அவ புருசன்கிட்ட சொல்லி கண்டிக்கனும்” என்றாள் பொன்னம்மாள்.
“ஆமா.. அவ யாருக்குத்தான் கட்டுப்படுறா? சாமியா பார்த்து ஏதும் கொடுத்தாதான் உண்டு.
சரி சரி நீ போ நா போய்ட்டு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுறேன்.” என சொல்லி கழனிக்குப் புறப்பட்டார் மூக்கையா.
அப்பாடா என பெருமூச்சு விட்டபடியே இன்னிக்கு மாடு ஓட்டிட்டு வரல. அவ என்ன மனசுக்குள் எண்ணிக் கொண்டு சுத்தியும் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
மறுநாள் காலையில் மணியக்காரர் வீட்டு வேலையாள் காத்தமுத்து மூக்கையா வீட்டுக்கு வந்தான்.
“பொன்னம்மா.. பொன்னம்மா”
“யாரு காத்த முத்தா, என்ன சங்கதி?”
“மூக்கையா எங்க?? கூப்பிடு.”
“ஏங்க காத்த முத்து வந்துருக்கான். என்னனு வந்து கேளுங்க” என்றாள் வைக்கோல் தலை கோரி விட்டிருந்த மூக்கையாவிடம்.
“என்னப்பா, காத்தா என்ன விசயம்?”
“பாலு அய்யா உன்ன அழைச்சுட்டுவர சொன்னாப்புல”
“சரிப்பா” என்று சொல்லியபடியே அவனோடு சைக்கிளில் பின்னாலே உட்கார்ந்து புறப்பட்டார் மூக்கையா.
“ஆமா, மூக்கையா, இப்ப நம்ம இடத்துல என்ன போட்டுருக்கே?”
“கல்லை போட்டுக்கே சாமி” (கடலை).
“எப்ப ஆயிரதுக்கு பருவம் வருது, மூக்கையா”
“இன்னும் 45 நாள் ஆயிடும் சாமி.
ஏன்? என்ன சாமி? என்னாச்சு திடுதிடுப்புன்னு கேட்குறியே?”
“ஒன்னுமில்லை மூக்கையா, கேஸ் நடத்துறதுக்கு பணம் பத்தாம இருக்கு; கொஞ்சம் தேவைப்படுது. அதான் இடத்தை கொடுத்திடலாமுன்னு இருக்கே.”
“என்ன சாமி சொல்றீக?
நா அந்த கழனியை கொண்டு தானே சாமி கஞ்சி குடிக்கிறே. இப்டி திடுதிப்புன்னு சொல்லிப்புட்டா ந எங்க சாமி போவே?
விளையிற பூமிய விக்காதியே சாமி.
தலைல இடி விழுந்த மாதிரி இருக்கு சாமி, அய்யோ” எனப் புலம்பினார் மூக்கையா.
“என்ன பண்றது மூக்கையா சொல்லு. அந்த மூர்த்தி நம்ம கிட்டேயே வம்படியா நிக்கிறான்.
அந்த கேஸ் விசயத்துல எப்படியாச்சும் ஜெயிக்கணும். அதான் மெட்ராசுக்கு கொண்டு போனே.
காசு பற்றாக்குறையா இருக்குனு இப்ப கேஸ் வாபஸ் வாங்கவும் முடியாது. அப்டியே வாங்கினா கூட அவனுக்கு குளிர்விட்டுப் போய்விடும்.”
செய்வது என்னவென்று தெரியாமல், அறியாது குழந்தை போல கண்கள் கலங்கியபடி மூக்கையா நின்றார்.
“என்ன நா பாட்டும் பேசிட்டே இருக்கே, நீ அப்பிடியே நிக்கிற மூக்கையா. ஏன் என்னாச்சு.”
“இல்ல ஒன்னும் இல்ல சாமி, சொல்லுங்க சாமி.
கோமணத்துண்டு மாதிரி தானே இருக்கு. அதுலேயும் ஒரு புண்ணியமும் இல்ல. ஏதோ நீ வெள்ளாமை போட்டுகிட்டு இருந்ததாலே நானும் அத விக்கிறதுக்கு யோசிக்கலே.
இப்ப என்ன பண்றது, வேற வழியில்லையே மூக்கையா.
நம்ம மாடி வீட்டுக்காரவங்க தான் வாங்குராங்க. பெட்ரோல் பங்க் திறக்கப் போறாங்கலாம்.
சிங்கப்பூர்ல இருந்து அந்த மாமா வந்துருக்காங்க. சீக்கிரம் பேசி முடிக்கச் சொல்லி இரண்டு மூன்று தடவை ஆள விட்டு பேசிட்டாரு.
பத்து நாள்ல திரும்பிப் போகணும்னு நினைக்கிராப்புல. அதுக்குள்ள கொஞ்சமாவது ஆரம்பிச்சு வச்சுட்டுப் போகணும்னு நினைக்கறாப்ல.
சரி வளவளன்னு பேசிட்டு இருக்கே நா வேர. நீ இப்போ அதுல போட்டு இருக்கிறத பத்தி யோசிக்காத. நா காசு கொடுத்துடுறே.
இன்னைக்கு சாயங்காலம் பேசி முடிச்சுடுவோம். நீ நாளைக்கு வந்து வெள்ளாமைக்கு உண்டான காச வாங்கிட்டு போ” என்று சொல்லியபடியே புல்லட்டில் உட்கார்ந்து வேகமாய் புறப்பட்டார் பாலு.
அத்தனையும் இழந்தது போல், பறிகொடுத்தாற்போல் இனி செய்யப்போறது என்ன என தெரியாது நடைப்பிணமாய் வீட்டுக்கு வந்தார் மூக்கையா.
“என்ன ஆச்சு.. என்ன ஆச்சு..” பதறிப் போனாள் பொன்னமாள்.
நடந்தவற்றைக் கூறினார் மூக்கையா.
இருவரும் இடிந்தபடி ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்தனர். அந்தி சாஞ்சு நிலவும் வந்துவிட்டது. அவர்கள் அப்படியே உட்கார்ந்து இருந்தனர்.
மாடு இரைக்காக ‘அம்மா.. அம்மா..’ எனக் கத்திக் கொண்டே இருந்தது. ஆனால் அவர்கள் காதில் வாங்கியதாகவே அறியவில்லை.
அவலத்தின் துக்கம் தொண்டையைக் கவ்வியது. செவிகளை மூடியது. கண்களை கலக்கமுறச் செய்தது.
சுவற்றில் சாய்ந்தபடியே எப்போ தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிவிட்டனர் இருவரும்..
பொழுதும் புலம் பெற்றது.
மாட்டுக்கு வைக்கோல் போட்டபடியே அதனருகே உட்கார்ந்து, எத்தனையோ சோக துக்கங்களை பகிர்ந்தார் மூக்கையா.
மாடுகளை தனது பெற்ற பிள்ளையாகவே பாவித்தார். நேற்று கைவிட்டுப் போன நிலத்தை தனது தாய்க்கு ஒப்பாக கருதினார் மூக்கையா.
“மூக்கையா, மூக்கையா” என்றபடி காத்தமுத்து வந்தான்.
“நேத்து சாயங்காலமே கிரயம் பண்ணிட்டாங்கலாம்.
நீ மறந்துட்டாப்ல அங்க போயிடாதே எதும் உன் சாமா செட்டு இருந்தா போயிட்டு எடுத்து வந்துடு” என்றான் காத்த முத்து.
“அய்யா, இந்த பணத்தை கொடுத்து வர சொன்னாங்க” என்று ஓர் குறிப்பிட்ட தொகையை அவரிடம் கொடுத்தான்.
“வேணாம் காத்தா.. பணத்த அய்யாகிட்டயே கொடுத்துடு..”
“அட போயா… இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் கொறச்ச இல்ல.. சும்மா மழுக்காம வாங்கிக அப்றம் அய்யா என்ன திட்டுவாரு” என்று சொல்லியபடியே பணத்தைக் கட்டாயமாக கையில் திணித்துவிட்டு விரைந்தான் காத்தமுத்து.
“ஒரு எட்டு கழனிக்கு போயி பாத்துபுட்டு வந்துடுறே, பொன்னம்மா.”
“இல்ல வேணாம் சாமி; போய்ட்டு பார்த்தா தாங்கமாட்டியே.”
“இல்ல புள்ள மனசு கேக்கல புள்ள. போயிட்டு வந்துடுறே புள்ள.” என்று பொன்னம்மாள் எவ்வளோ சொல்லியும் கேக்காம கழனிக்குப் புறப்பட்டார் மூக்கையா.
“யாரப்பா இது வெள்ளாமை காட்டுல மெசின இறக்கியது?”
“என்ன சத்தை ஏர் மறந்துட்டியா?
நேத்து மாடிவீட்டுக்காரங்க கிரயம் பன்னிட்டாங்க.
பொழுது சாயறதுக்குள்ள பூராத்தையும் கிளியர் பண்ணனும்.
அட ஓரமாப் போப்பா மெசின ஓட்டனும்.
உள்ள கிள்ள மாட்டிக்கிற போறே” என்றான் இயந்திரம் இயக்குபவன்.
சொன்ன மாத்திரம், அப்படியே சாய்ந்து உடைந்து போய், வரப்புல முட்டுக் கொடுத்தாற் போல் விழுந்தார் மூக்கையா.
தன் கண் முன்னே தாயென கருதிய மண் சிதைந்து, சீரழிவது கண்டு பொறுக்காது மனம் வெதும்பி கண்கள் குளமாயின.
சத்தம் போட்டு ஒப்பாரி ஓலம் போட்டார் அந்த ஏழை மனுசன்.
தாயின் மடியிலேயே துடிதுடித்து சுருண்டு விழுந்தார்.
அவர் கண்களின் நீர்த்துளிகளை பார்த்து வானமும் அழுது மழையாகப் பொழிந்தது. அழுது தீர்த்து சரியான பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது.
வானம் பார்த்து வேளாண்மை செஞ்ச விவசாயிக்கு, கேட்டபோதெல்லாம் உதவாத வானம்கூட, தாயின் மடியில் பெரும் துக்க வலியோடு நிம்மதியாக ஒரேயடியாக, உறங்கிக்கொண்டிருந்த சத்தை ஏர் மூக்கையாவிற்கு உதவிட கடைசியாகத்தான் முன்வந்தது; அவர் இந்த உலகத்தைவிட்டு பிரிந்த போது.
– கோபிநாத் மோகன்