அறிஞர் ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளினைச் சந்திக்க விரும்பினார். 1931 ஆம் ஆண்டு, சிட்டி லைட்ஸ் திரைப்படக் காட்சி அறிமுக நிகழ்ச்சியில், ஐன்ஸ்டீன் அவர்கள் சாப்ளினைச் சந்தித்தார்.
“சாப்ளின், நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஆனால், மக்கள் உங்கள் கலையைப் புரிந்து கொண்டு பாராட்டி மகிழ்கிறார்கள். உங்கள் புகழ் மகத்தானது.”
“சார், உங்கள் புகழ், நான் அடைந்த புகழை விட மேலும் மகத்தானது. நீங்கள் பேசும் ஒருவார்த்தை கூட உலக மக்களுக்குப் புரிவதில்லை. ஆனால், அவர்கள் உங்களைக் கொண்டாடுகிறார்கள்.”
பேச்சாளர் /எழுத்தாளர் சின்ன அண்ணாமலை அவர்கள், மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்தித்த போது, பதிப்பகம் தொடங்கப் போவதாகக் கூறினார்.
“அப்படியானால் சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்விதான் ராஜாஜியிடமிருந்து உடனடியாக வந்தது.
பதிப்பகங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. ஆனாலும் கூட அந்தத் துறையில் செயல்பட்ட பலர் சேவை நோக்கத்துடன் இயங்கினர்.
ராஜாஜி நாட்டின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த நேரம். இன்றைக்கு மியூசிக் அகாதெமி இருக்கும் இடத்தில் சக்தி பதிப்பகம் செயல்பட்டு வந்தது. அப்போது ராஜாஜி அங்கு வந்தார்.
நாட்டின் உயரிய பொறுப்பை வகித்த அவர் நேரில் வந்ததால் அனைவரும் மிகுந்த பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர்.
ஆனால், ராஜாஜியோ சக்தி பதிப்பக உரிமையாளர் சக்தி வை.கோவிந்தனிடம் எப்போதும் போல் பேசி விட்டுச் சென்றார்.
பெருந்தலைவர் காமராஜரும் அது போலவே பதிப்பகங்களைத் தேடி நேரடியாக வருவார். ( விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களின் உரையிலிருந்து) (தினமணி, சென்னை – 11-06-2016)
கவியரசர் கண்ணதாசன் அவர்கள், அறிஞர் அண்ணாவின் அரசியல் இயக்கத்திலிருந்து வெளியேற முடிவு செய்த தருணத்தில் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து விடைபெற்ற வேளையில், அறிஞர் அண்ணா “எங்கிருந்தாலும் வாழ்க” என்று கூறி வாழ்த்தினார்.
கவியரசர், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற சொற்களையே பயன்படுத்தி பல்லவியாக அமைத்து, வேறொருவருடன் திருமணமாகிச் சென்ற தன் காதலியைப் பார்த்து காதலன் பாடும் திரைப்பாடலாக வடித்தார்.
அந்தப் பாடல், நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் இடம் பெற்று சுவைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றும் ஒலி, ஒளி ஊடகங்களில் வலம் வருகிறது.
எழுத்தாளர் சார்வாகன் கூறியது :
“முதுபெரும் எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் அவர்களைச் சந்தித்த போது “இப்ப என்ன எழுதிக் கொண்டிருககிறீர்கள்?’ என்று கேட்டார்.
“தற்போதைக்கு ஒண்ணுமில்லை” என்று சொன்னேன்.
அவர், “எழுத்துன்னா காகிதத்தில் மசியால் எழுதினால் தானா? கை எழுதாமல் போனால் கூட மனசு எழுதிக் கொண்டே இருக்குமே” என்றார்.
மகாகவி பாரதியார், கொல்கத்தாவில் நடைபெற்ற தேசபக்தர்கள் மாநாட்டுக்குச் சென்றபோது, அங்கு ‘டம்டம்’ என்ற இடத்தில் தங்கி ஆன்மிக பணிகளை ஆற்றி வந்த சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா தேவியை சந்தித்தார்.
நிவேதிதா தேவியார், பாரதியாருக்கு உணர்த்தியது என்ன என்பதை பாரதியார், ” சுதேச கீதங்கள்” என்னும் தம்முடைய கவிதை நூலின் காணிக்கை குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்
“எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தரின் தர்மபுத்திரியுமாகிய நிவேதிதா தேவிக்கு இந் நூலைச் சமர்பபிக்கின்றேன்.” ( கடிகை = நாழிகை. நாழிகை =24 நிமிடங்கள்)
பேசாமல் பேசுவதே பெரியோரின் இயல்பு. அதனை உணர்ந்து கொண்டது பாரதியின் ஆளுமைச் சிறப்பு.
மக்கள் தலைவர் ஜீவா அவர்கள், அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த தருணத்தில் உரையாடலின் நடுவே காந்தியடிகள், “உங்களுக்கு சொத்து உள்ளதா?” என்று வினவினார்.
அதற்கு ஜீவா அவர்கள், “இந்தியா தான் என் சொத்து!” என்று பதிலளித்தார்.
காந்திஜி, “நீங்கள் தான் இந்தியாவின் சொத்து!” என்று கூறினார்.
தகவல் தொகுப்பு: எஸ். மதுரகவி
கைபேசி :9841376382
மின் அஞ்சல் :mkavi62@gmail.com