வாழ்த்துக்கள் சந்திரசேகரன்

டாடா குழுமத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும்  தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் சந்திரசேகரன் அவர்கள் தொழில்நுட்ப அறிவும் நிர்வாகத்திறனும் மிகுந்தவர்.

அவரது தலைமையில் டிசிஎஸ் நிறுவனம் அபார வளர்ச்சி கண்டது. அதைப் போலவே டாடா குழுமமும் சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்புகிறோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்புக்களில் ஒன்றான டாடா குழும தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கும் சந்திரசேகரன் தனது ஆரம்பக் கல்வியைத் தமிழ் வழியிலேயே கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு கோயம்புத்தூர் தொழில்நுட்ப கல்லூரியில் அப்ளைடு சயன்சஸ் பிரிவில் பட்டமும், திருச்சி ஆர்.இ.சி.யில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் நண்பர்களால் சந்திரா என்று அழைக்கப்படுகிறார்.

1987ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அன்று முதல் டாடா குழுமத்தின் உயர்வுக்குத் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வரும் அவர் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி ஆவார்.

சந்திரா மென்பொருள் துறையின் ஜாம்பவான்களில் ஒருவரான திரு.இராமதுரை அவர்களால் வழிநடத்தப்பட்டவர்.

2009ம் ஆண்டு இவர் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தைவிட டிசிஎஸ் நிறுவனத்தைப் பெரியதாக்கினார். மேலும் இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனமாகவும் அதனை உருவாக்கினார்.

இவர் டிசிஎஸ் நிறுவனத்தை டாடா குழும நிறுவனங்களிலேயே அதிக லாபமீட்டும் நிறுவனமாக வழிநடத்தியுள்ளார். ஏறக்குறைய 100 நிறுவனங்கள் இருக்கும் டாடா குழுமத்தில் டிசிஎஸ் நிறுவனத்தை முதல் நிலைக்கு உயர்த்தியுள்ளார்.

டாடா குடும்பத்தைச் சேராத, பெரிய பங்குதாரராக இல்லாத ஒருவர் டாடா குழுமத்தின் தலைவராக வருவது இதுவே முதன்முறை.

டாடா குழுமத்தின் தற்போதைய சவால்கள் பெரியவை என்றாலும் சந்திரா அவற்றை நல்வாய்ப்புக்களாகப் பயன்படுத்திச் சிறப்பாகச் செயல்படுவார் என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.

முப்பது வருடங்கள் டாடா குழுமத்தில் பணியாற்றி தற்போது அதன் தலைவராக உயர்ந்திருக்கும் சந்திரசேகரன் அவர்கள் டாடா குழுமத்தை புதிய உயரங்கள் தொட வைப்பார் என்று நம்புகிறோம்.

தமிழினம் பெருமை கொள்ளத்தக்க முன்னேற்றம் கண்ட சந்திரசேகரன் அவர்கள் டாடா குழுமமும் நமது நாடும் பெருமை கொள்ளும் வகையில் சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.