சுப்பிரமணியன் சந்திரசேகர்

தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகர் 19.10.1910 அன்று முழு நிலவு நாளில் லாகூரில் பிறந்தார். ஓர் ஆண்டிற்குப் பின் சந்திரசேகரின் தாய், தந்தையர், தங்களது முன்னோர்கள் வாழும் தஞ்சை மாவட்டத்திற்குத் திரும்பினர். சந்திரசேகரரின் ஆறாம் வயதில் இவரது குடும்பம் சென்னைக்குக் குடியேறியது.

சந்திரசேகர் குடும்பத்தில் எல்லோருமே நல்ல கல்வி பயின்றவர்களாக இருந்துள்ளனர்.
சந்திரசேகர் பள்ளிக் கல்வியைச் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் 1921-1925 வரை பயின்றார். இயற்பியல் பட்டப்படிப்பை, சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார்.

1930இல் சந்திரசேகர் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் ஆராய்ச்சியை மேற்கொண்டார். பின்னர், சிகாகோவிலுள்ள யெர்ஸ் வான் ஆய்வுக் கூடத்தில் 27 ஆண்டுகள் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். இதனிடையில் உலகப் போரின் போது ஜான் வான் நியூமான் ஆல் அழைக்கப்பட்டு மேரிலாண்டிலுள்ள ஆய்வுக் கூடத்தில் மூன்றாண்டுகள் வேலை பார்த்தார். 1951 முதல் 1971 வரை வானியல் இதழ் ஒன்றின் மேலாய்வாளராகவும் இருந்துள்ளார்.

சந்திரசேகர் தமது கணக்கீட்டு ஆய்வைக் கொண்டு, ஒரு விண்மீன் தனது அணு எரிபொருள் தீர்ந்து போன பின்னர், ஓர் அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஒரு வெள்ளைக்குள்ள விண்மீனின் நிறை, சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருந்தால் அது தன் நிலைத் தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இக்குறிப்பிட்ட நிறை அளவுக்கு ‘சந்திரசேகர் வரையறை’ என்று பெயர்.

இவரது இந்த ஆய்வுக்கு 30 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு 1983 இல் அளிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டு ஆகஸ்டு 21ஆம் நாள் இவர் இயற்கை எய்தினார்.