ஓநாய் ஒன்று காட்டில் தீவிரமாக உணவினைத் தேடி அலைந்தது. அப்போது முயல் ஒன்று எதிர்படவே அதனை வேட்டையாடியது.
ஓநாய் முயலினை ருசித்துத் தின்றபோது, அதன் தொண்டையில் ஒரு எலும்புத் துண்டு சிக்கிக் கொண்டது.
ஓநாய்க்கு வலி ஏற்பட்டது. அது எலும்புத் துண்டினை எடுக்க எவ்வளவோ முயற்சித்தது. அதனால் முடியவில்லை.
எனவே யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று எண்ணியது. திணறியபடி “யாராவது எனக்கு உதவி செய்யுங்களேன்” என்று கத்தியது.
யாரும் முன்வரவில்லை. உடனே ஓநாய், “என்னைக் காப்பாற்றுபவருக்கு உரிய சன்மானம் உண்டு” என்று கத்தியது.
ஓநாய் கூறியதை நாரை ஒன்று கேட்டது. ஓநாய்க்கு உதவ முடிவு செய்தது.
ஓநாயிடம் வந்த நாரை “உனக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டது.
“முயலினை சாப்பிடும் போது அதனுடைய எலும்பு என்னுடைய தொண்டையில் சிக்கி அதிகமாக வலிக்கிறது. தொண்டையில் சிக்கியுள்ள எலும்பினை எடுத்து விடேன்” என்றது ஓநாய்.
“சரி, உன்னுடைய வாயினை அகலத் திற” என்று நாரை கூறியது.
ஓநாயும் வாயை அகலமாகத் திறந்தது.
அகன்ற வாயினுள் தன் நீண்ட அலகை நுழைத்து எலும்பை வெளியே எடுத்தது நாரை.
பின் ஓநாயிடம் “நீ சொன்னபடி எனக்கு உரிய சன்மானத்தை கொடுத்தால் சந்தோஷம்!” என்றது நாரை.
“என்ன சன்மானமா? நீ என் வாய்க்குள் உன் தலையை நுழைத்த போது, உன்னுடைய கழுத்தை வாயால் கவ்வி கொல்லாமல் விட்டேனே, அதுவே சன்மானம்தான். ஓடிப்போ பறவையே!” என்று கூறியது ஓநாய்.
“சன்மானம் கிடைக்கும்னு பார்த்தா ஏமாற்றமே கிடைச்சிருக்கு!” என்றபடி அங்கிருந்து பறந்தது நாரை.
எதையாவது எதிர்பார்த்து உதவி செய்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதை இக்கதை மூலம் அறிந்து கொண்டீர்களா!