சபரிமலை பெருவழிப்பாதை

எருமேலியிலிருந்து சன்னிதானம் வரை சுமார் 40 மைல்கள் நடந்து இறுதியில் சன்னிதானத்தை அடையும் வழியையே பெருவழிப்பாதை என்று அழைக்கின்றனர்.

சபரிமலை யாத்திரை செல்பவர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதமிருந்து அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப் புழா, பந்தளம் ஆகிய இடங்களிலுள்ள தர்மசாஸ்தாவை வணங்கி பின் எருமேலி என்ற இடத்தை வந்தடைகின்றனர்.

முதலில் எருமேலியில் உள்ள தர்மசாஸ்தாவை வணங்கி பின் அருகில் இருக்கும் வாவரை வழிபட்டு விபூதியை பிரசாதமாக பெற்றுக் கொள்கின்றனர்.

 

பேட்டை துள்ளல்

மணிகண்டன் மகிஷியை வதைத்து அவளின் பூத உடல் மீது நர்த்தனம் புரிந்ததை நினைவு கூறும் வகையில் பேட்டை துள்ளல் நடைபெறுகின்றது.

பக்தர்கள் ஏழை பணக்காரன் என்கின்ற வேறுபாடு மறந்து தங்கள் மீது வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டு, இலை தழைகளைக் கட்டிக் கொண்டு மரத்தாலான ஆயுதங்களுடன் காய், கனி, கிழங்குகளை தொட்டிலிட்டு இருவர் அதனை சுமந்து வர மேளதாளத்துடன் ‘சுவாமி திந்தக்கத்தோம்’, ‘ஐயப்ப திந்தக்கத்தோம்’ என்று கூறிக்கொண்டு ஆடிப்பாடி வாவர் சன்னதியை வலம்வந்து, பின் பேட்டை சாஸ்தா கோவிலிருந்து எருமேலி தர்மசாஸ்தாவின் சன்னதி வந்து சிதறுகாய் உடைத்து. கற்பூரம் ஏற்றி வழிபடுவதே பேட்டை துள்ளல் எனப்படுகிறது.

பக்தர்கள் தங்களது கர்வம், ஆணவம், அகங்காரம் முதலிய தீய குணங்களை அகற்றி தங்களை பரிசுத்தமாக்குவதே இச்சடங்கின் நோக்கமாகும்.

பக்தர்கள் எருமேலியில் பேட்டை துள்ளி சுவாமியை வணங்கி தங்கள் யாத்திரையை துவங்குகின்றனர். இதில் சிறப்பானதும், கடைசியானதும் ஆலங்காடு, அம்புலப்புழை என்னுமிடங்களிலிருந்து வரும் பக்தர்கள் யானை மீது சுவாமியை அலங்கரித்து வலம் வந்து நடத்தும் பேட்டை துள்ளல் ஆகும்.

எருமேலியிலிருந்து கோட்டைப்படி என்ற இடம் வந்து, இரண்டு இலைகளை பறித்து போட்டு சுவாமியை வணங்கி ஐயப்பனின் பூங்காவனத்தை அடைகின்றனர்.

பின் சுமார் இரண்டு மைல்கள் கிழக்கே பேரூர்தோடு என்ற ஓர் சிறு ஆறு உள்ளது. இங்கு நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டு தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்.

பின் காடு, மலை மீது ஏறி இறங்கி ஆறுமைல்கள் நடந்து, காளைகட்டி என்ற இடத்தை அடைகின்றனர். மகிஷியை மணிகண்டன் வதம் செய்ததைக் காண கைலாயத்திலிருந்து வந்த சிவபெருமான் தனது வாகனமான காளையை கட்டிய இடமே காளைகட்டி என்று புராணங்கள் கூறுகின்றன.

காளைகட்டியிலிருந்து சுமார் ஒன்றை மைல்கள் கிழக்கே நடந்து அழுதா நதிக் கரையை வந்தடைகின்றனர். மணிகண்டனால் தூக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இங்கு இரவு பகல் முழுவதும் பக்தர்களின் பஜனைகளும் சரணகோஷங்களும், வெடி ஓசையும் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இங்கு ஒரு நாள் இரவு தங்குகின்றனர்.

மறுநாள் அதிகாலை எழுந்து அழுதா நதியில் நீராடி ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்கின்றனர். பின் அங்கிருந்து இரண்டு மைல்கள் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறி ‘இஞ்சிப்பாறைக்கோட்டை’ என்ற‌ இடத்தை அடைகின்றனர். அங்கு ‘கல்லிடும் குன்று’ என்ற‌ இடத்தில் அழுதா நதியிலிருந்து எடுத்துவந்த கல்லைபோட்டு வணங்குகின்றனர். சுவாமி ஐயப்பன் மகிஷியின் பூத உடலை போட்டு கல், மண்ணால் மூடிய இடமே கல்லிடும் குன்று என்று கூறப்படுகிறது.

பின் யாத்திரையைத் தொடர்ந்து வரும் பாறைக் கோட்டை, இலவந்தோடு ஆகிய இடங்களை கடந்து கிரிவலந்தோடு என்ற இடத்தை அடைகின்றனர். பின் அங்கிருந்து புதுச்சேரி என்ற ஆற்றைக் கடக்கின்றனர்.

பின் பக்தர்கள் கரிமலை அடிவாரத்தை அடைகின்றனர். இந்த மலையின் மண் கருப்பாக இருப்பதனால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் இம்மலையின் மீது சரண கோஷமிட்டு மிகுந்த சிரமத்துடன் ஏறுகின்றனர். இங்கு யானை மற்றும் கொடிய மிருகங்களின் தொல்லையும் அதிகம்.

இந்த மலையின் உச்சியில் நீர்வற்றாத கிணறு ஒன்று உள்ளது. ஐயப்பன் தன் அம்பை எய்து இக்கிணற்றை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. பின் அங்கிருந்து செங்குத்தான வழியில் இறங்குகின்றனர். சிறியானை வட்டம், பெரியானை வட்டம் என்ற யானைகள் தங்குமிடம் கடந்து காட்டில் நெடிய பயணம் செய்து பம்பை நதியை அடைகின்றனர்.

எருமேலியில் பெரும்பாதை வழியாக வரும் பக்தர்களும், சாயக்காலம் வழியாக வரும் பக்தர்களும் பம்பை நதியில் ஒன்று சேர்கின்றனர். சிறிது தூரத்தில் வேறு ஒரு நதி கலக்குகிறது. இந்த இடம் திரிவேணி என்றழைக்கப்படுகிறது.

பம்பையாற்றின் கரையில் ஓர் இரவு தங்கி பம்பா விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டுப் பின் உணவு தயார் செய்து சுவாமிக்கு படைத்து மற்ற கூட்டத்திலுள்ளோருடன் சேர்ந்து உணவருந்துகின்றனர்.

பம்பை நதியில் நீராடுவது கங்கை நதியில் நீராடுவதற்கு சமமாகக் கருதப்படுகிறது. பின் அங்கிருந்து நீலிமலை ஏறுகின்றனர். கரிமலையைப் போலவே இதில் ஏறுவது சற்று சிரமமாக உள்ளது.

பின் அங்கிருந்து அப்பாச்சி மேடு வந்தடைகின்றனர்.இங்கு கன்னி சாமிமார்கள் பள்ளத்தாக்கில் அரிசி மாவுருண்டை எறிந்து துர்தேவதையை திருப்தி அடைய செய்கிறார்கள்.

மேலும் சிறிது தூரம் நடந்து சபரி பீடத்தை அடைகின்றனர். இது ஓர் சமதள இடமாகும். இங்குதான் சபரி என்னும் பக்தை தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. பின் அங்கிருந்து காட்டினுள் நடந்து மரக் கூட்டம் என்ற இடத்தை வந்தடைகின்றனர். இங்கும் யானைகளை அதிகமாகக் காணலாம்.

பின் அங்கிருந்து சரங்குத்தி என்ற இடத்தை அடைகின்றனர். இங்குதான் கன்னி சாமிமார்கள் தாங்கள் கொண்டு வந்த அம்பினை செருகின்றனர். அதன்பின் தான் 18 படிகளில் ஏறும் தகுதி பெறுகின்றனர். பின் அங்கிருந்து நேரே சன்னிதானம் வந்தடைகின்றனர்.

எருமேலியிலிருந்து பெருவழிப்பாதை வழியாகவும், சாலக்காயம் வழியாக பம்பை வந்து பின் சன்னிதானம் செல்லலாம். குமுளி, வண்டிப்பெரியார் வழியாக நேராகவும் சன்னிதானம் வரலாம்.