சபரிமலை என்பது கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள தர்மசாஸ்தாவாகிய ஐயப்பனை 41 நாட்கள் விரதமிருந்து மலையின் மீது ஏறி தரிசிக்க யாத்திரை மேற்கொள்வதையே சபரிமலை யாத்திரை என்று அழைக்கின்றனர்.
சபரிமலை யாத்திரை செல்வதற்கு 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதியில்லை. 10 வயதுக்கு கீழே, 50 வயதுக்கு மேலே உள்ள பெண்களுக்கும், எல்லா ஆண்களுக்கும் அனுமதி உண்டு.
பொதுவாக சபரிமலையில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில்நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5வது நாளன்று நடைசாத்தப்படும்.
வருடந்தோறும் மண்டல பூஜை முதல் நாளான கார்த்திகை மாதம் முதல் தேதியில் நடை திறக்கப்பட்டு நாற்பத்திரண்டு நாட்கள் கழித்து நடைசாத்தப்படும். பின் ஜனவரி முதல் தேதியில் நடை திறக்கப்பட்டு , தை மாதம் முதல் நாள் நடைபெறும் மகரஜோதி மற்றும் படி பூஜை விழா முடிந்ததும் நடைசாத்தப்படும்.
பொதுவாக சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து செல்பவர்கள் கறுப்பு அல்லது காவி உடை அணிகின்றனர். பலமுறை மாலை அணிந்து சபரிமலை யாத்திரை சென்றவர்கள் குருசாமி என்று அழைக்கப்படுகின்றனர்.
சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிபவர்கள் துளசி மாலை (அல்லது) ருத்திராட்ச மாலையை பயன்படுத்துகின்றனர். முதன்முதலாக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலை யாத்திரை செல்பவர்கள் கன்னிச்சாமி என்றழைக்கப்படுகின்றனர்.
மாலையணிந்து சபரிமலை யாத்திரை மேற்கொள்பவர்கள் பலமுறை மாலையணிந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டவரான குருசாமியின் மூலம் கார்த்திகை முதல் தேதியிலோ (அல்லது) சனிக்கிழமையிலோ அல்லது தர்மசாஸ்தா பிறந்த நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தன்றோ மாலையை அணிந்து கொள்கின்றனர்.
பின் 41 நாட்கள் எளிய சைவ உணவினை உண்டு தினமும் இரு நேரமும் குளிர்ந்த நீரில் குளித்து, வெறும் தரையில் தூங்கி, இருநேரமும் பஜனை பாடல்கள் பாடி ஐயப்பனை வழிபட்டு கடுமையான பிரம்மசாரிய விரதம் மேற்கொள்கின்றனர்.
முதன்முறை மாலை அணிந்து சபரிமலை யாத்திரை செல்லும் கன்னிச்சாமி அவர் வீட்டிலோ அல்லது கோவிலிலோ 41 நாட்கள் விரதத்தின் நடுவில் கன்னி பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை தமது குழுவினர் மற்றும் குருசாமியுடன் மேற்கொள்கின்றார்.
கன்னி பூஜையின் போது குருசாமி மற்றும் குழுவிலுள்ள மற்ற மாலையணிந்த சாமிமார்கள் கன்னி பூஜை நடைபெறும் இடத்திற்கு குழுவாகச் சென்று ஐயப்பனைப் பற்றிய பஜனைப் பாடல்கள் பாடி கூட்டு வழிபாட்டினை நடத்துகின்றனர்.
கன்னி பூஜையின்போது ஐயப்பனுக்கான சரணம் சொல்வது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
மாலை அணிந்து சபரிமலை யாத்திரை செல்வோர் இருமுடி எடுத்துச் செல்கின்றனர்.
இருமுடி என்பது இரண்டு முடிகள் என பொருள்படும். இதில் முன்முடியில் இறைவனுக்காக முத்திரையிடப்பட்ட நெய்தேங்காய், பூஜை பொருட்கள் உடையதாகவும், பின்முடியில் சபரிமலை யாத்திரை செல்வோர் தங்களுக்கான உணவுப் பொருட்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
காவடியாக போல் தண்டின் இருமுனைகளிலும் பொருட்களை கட்டித் தொங்க விடாமல் ஏன் தலையில் சுமக்க வேண்டும்? இருமுடிகளை தலைக்குப் பதில் ஏன் தோளில் கொண்டு செல்லக்கூடாது?
கடினமான மலைப்பாதையில் ஏறும் போது, தடுமாறாமல் ஏறுவதற்கு ஏதுவாகவும், யாத்திரையின் போது சுலபமாக நடக்கவும், இருமுடியை தலையில் வைத்து முன்முடி தலைக்கு முன்புறமும், பின்முடி தலைக்கு பின்புறமும் இருக்குமாறு வைத்து யாத்திரையை தொடங்குகின்றார்கள்.
அறிவியல் ரீதியாக விளக்க வேண்டுமானால் இருமுடியை தலையில் வைத்து முன்முடி தலைக்கு முன்புறமும், பின்முடி தலைக்கு பின்புறமும் வைக்கும் போது இருமுடியின் புவிஈர்ப்பு மையமும் நமது உடலின் புவிஈர்ப்பு மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.
எனவே நடப்பது, செங்குத்தான மலைப்பாதையில் ஏறுவதும் எளிது. எனவே தான் இருமுடியை மேற்கூறிய முறையில் தலையில் வைத்து யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இருமுடியில் வைப்பதற்கான நெய்தேங்காயை தயார் செய்வதற்கு முதலில் நல்ல முற்றிய தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே உள்ள நீரை எடுத்துவிட்டு உருக்கிய நெய்யை ஊற்றி பின் தக்கையால் (கார்க்) துளையை அடைத்து. பின் அரக்கினை உருக்கி துளையை முத்திரையிட்டு இருமுடியில் கட்டுகின்றனர்.
சபரிமலை ஏறி இருமுடியுடன், ஐயப்பனைத் தரிசனம் செய்த பின்னர் குருசாமியானவர் தனது குழுவில் உள்ளோர் எல்லோருடைய முத்திரையிடப்பட்ட தேங்காய்களையும் உடைத்து உள்ளே இருக்கும் நெய்யினை எல்லாம் ஒரே பாத்திரத்தில் ஊற்றுகின்றார்.
முத்திரைகாயை உடைத்து நெய்யை வெளியே எடுக்கும்போது, நெய் நன்கு கெட்டியாகி, திரண்டு விழுந்தால் சபரிமலை யாத்திரை சென்றவர் விரதமுறைகளை சரிவரக் கடைப்பிடித்துள்ளார் என்று நம்பப்படுகிறது.
பின் நெய் அபிஷேகத்திற்கு என்று தனி டிக்கெட் வாங்கி வரிசையில் நின்று நெய்யை அபிஷேகத்திற்கு கொடுக்கின்றனர். சன்னதியில் சாமிக்கு நெய்யை அபிஷேகம் செய்து பின் நெய்யை அபிஷேகத்திற்கு தந்தவரிடம் திருப்பிக் கொடுக்கின்றனர்.
பின் குருசாமி அபிஷேகத்திற்கு கொடுத்தது போக மீதியுள்ள நெய்யை தன் குழுவிலுள்ள மாலை அணிந்த சபரிமலை யாத்திரை சென்றோர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றார்.
சபரிமலை யாத்திரை முடிந்து திரும்பும் பக்தர்கள் தங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நெய் மற்றும் பின் முடியிலுள்ள அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்களுக்கு வழங்குகின்றனர்.
சபரிமலை புனித யாத்திரை செல்வோர் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை மறந்து ‘சாமியோ, ஐயப்பா’, ‘சாமி சரணம், ஐயப்ப சரணம்’ என்னும் சரண கோசங்களை எழுப்பி சுவாமியை வழிபடுகின்றனர்.