மாலை அணிந்த பக்தர்கள் சபரிமலை வழிபாடு நடத்தும் போது முதலில் பதினெட்டுப்படிகளின் இருபுறமும் உள்ள கருத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு, வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, அளவில்லா ஆனந்தமடைந்து, தேங்காய் உடைத்து சரண கோஷத்துடன் பதினெட்டு படிகளில் ஏறுகின்றனர்.
அகலம் குறைந்ததும், உயரமான படிகளில் கூட்டம் கூட்டமாக ஏறும்போது எவ்வித தீங்குகளும் ஏற்படுவதில்லை. தற்போது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டிலிருந்து பதினெட்டு படிகளின் புனிதம் கெடாமல இருக்க பஞ்சலோகத்தினால் படிகளை அழகுற மூடி, பக்தர்கள் சிரமமின்றி ஏறி இறங்க வசதி செய்திருக்கிறார்கள்.
பக்தர்கள் பின் ஆலயத்தை வலம்வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவைத் தரிசித்து பேரின்படைகின்றனர். அடுத்து கன்னிமூல கணபதியை தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்குகின்றனர்.
இருமுடிகட்டு இல்லாத பக்தர்கள் புனிதமான 18 படிகளில் ஏறுவதில்லை. வடக்கு முகமாக உள்ள படிகளில் ஏறி சுவாமியைத் தரிசிக்கிறார்கள். பந்தள இராஜ பரம்பரையினர் தவிர இருமுடிகட்டாமல் 18 படிகளில் ஏற யாருக்கும் அனுமதியில்லை.
பின் வாவர் சன்னதியிலும் நாகர் சன்னதியிலும் வணங்கி, மாளிகைப் புறத்தமன் கோவிலை அடைகின்றனர். அங்கு மஞ்சள் பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர்.
மறுநாள் அதிகாலை எழுந்து நீராடி, குருசாமியுடன் இருமுடிக்கட்டுகளை பூஜித்து, பூஜை பொருட்கள் அடக்கிய முடியினை திறந்து நெய்தேங்காய் உடைத்து, அந்த நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து, அந்த நெய்யையும் தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசதாமாக வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். மற்றொரு முடியை 18 படிகளின் முன்னுள்ள அக்னி குண்டத்தில் எறிந்துவிடுகின்றனர்.
தர்மசாஸ்தாவுக்கும், மாளிகை புறத்தம்மனுக்கும் அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகளை பந்தளம் அரண்மனையிலிருந்து தலைச் சுமையில், பக்தர்கள் புடைசூழ நடந்தே கொண்டு வந்த மகரசங்கராந்தியன்று (தை 1ம் நாள்) மாலையில் சன்னிதானத்தில் சேர்ப்பிக்கின்றனர்.
திருவாபரணப் பெட்டிகளுக்கு மேலே இரண்டு கருடன்கள் பறந்து வந்து பின் கோவிலை வலம் வந்து மறைந்து விடுகின்றன. இது ஓர் அபூர்வ காட்சியாகும். ஆபரணங்களை ஐயப்பனுக்கு அணிவித்து பூஜை ஆரம்பமானவுடன் கீழ்வானில் ஓர் நட்சத்திரம் தோன்றுகிறது.இதனை அடுத்து பொன்னம்பலமேடு என்ற இடத்தில் தர்மசாஸ்தா சன்னிதானத்தில் கூடியிருக்கும் பக்தர்களுக்கு ஜோதி உருவில் காட்சியளிக்கிறார்.
மணிகண்டனால் வதம் செய்யப்பட்ட மகிஷி சாபம் நீங்கி அழகிய பெண்ணாக மாறி, அவளை மன்னித்தருளி, மணந்து கொள்ளும் படியாக வற்புறுத்த அதற்கு மணிகண்டன் பூலோகத்தில் அவதரித்தன் நோக்கம் ஈடேறி விட்டதால், அவன் கோவில் கொள்ளவிருக்கும் சபரிமலையில் மாளிகை புறத்தம்மனாக் காத்திருக்கும் படியும், எந்த ஒரு ஆண்டில் கன்னி ஐயப்பன் ஒருவரும் அவனைத் தரிசிக்க சபரிமலைக்கு வரவில்லையே அப்போது அவளை மணந்து கொள்வதாகக் கூறினார்.
அதன்படி மாளிகைப் புறத்தம்மனும் ஒவ்வொரு வருடமும் மகரசங்கராந்திக்கு மறுநாள் பக்தர்கள் புடைசூழ, மேளதாளத்துடன் சரங்குத்திக்கு வருகிறார். சரங்குத்தியில் கன்னிசாமிமார்களால் செருகப்பட்ட அம்புகளை கண்டு ஏமாற்றடைந்து தன்னிடம் திரும்பி இன்று வரை கன்னியாகவே காத்திருக்கிறார்.
பக்தர்கள் தங்கள் ஐம்புலன்களையும் அடக்கி, களங்கமின்றி செயல்பட்டு இறைவனிடம் தங்களைச் சரணடையச் செய்வதே சபரிமலை வழிபாடு மற்றும் சபரிமலை யாத்திரையின் நோக்கமாகும். இங்கு தோன்றும் மகரஜோதியும் ஒலிக்கும் சரண கோஷங்களும் பக்தர்களை சாதி, மதம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகிய வேறுபாடுகளை மறந்து இறைவனுடைய திருவடிகளை அடைகின்ற மந்திரங்களாகும். இத்திருத்தலம் மனிதகுல ஒருமைப்பாட்டில் தனிப்பெரும் சின்னமாகும்.