நான் கிருஷ்ணன். ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் 35 வருடம் பணிபுரிந்து மேலாளராக ஓய்வு பெற்று, மாதம் அரை லட்சத்திற்கும் அதிகமாக ஓய்வூதிய நிதி பெற்று வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
என் மனைவி மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். 10 மாதத்தில் ஒய்வு பெற உள்ளார்.
ஆகவே எங்களுக்கு எந்த ஒரு பணப் பிரச்சனையோ , உடல் உபாதையோ இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
மேலும் கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் மகனை கொடுத்து உள்ளார். அவன் பெயர் ராஜு. அவன் +2 வகுப்பில் தேறிய போது எங்களுக்கு ஒரு தர்மசங்கடத்தை கொடுத்து விட்டான்.
காரணம் அவனுடைய மொத்த விழுக்காடு 50% மட்டுமே!
ஆகவே நான் என் மகனை வெகு தொலைவில் டார்ஜிலிங் கோடை வாசஸ்தலத்தில் அமைந்து உள்ள பொறியியல் படிப்பிற்கு அனுமதி பெற்று சேர்த்து விட்டேன்.
அவனுக்கு அதில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை; ஆனால் அதை எங்களிடம் காட்டிக் கொள்ளவும் இல்லை; எல்லாம் நன்றாக நடப்பதாகவே நினைத்தோம்.
காலங்கள் கடந்தன. மகன் இறுதியாண்டை முடிக்கும் தருவாயில் இருந்தான்.
என்னுடைய மைத்துனர் மேற்கு வங்காள அரசின், முதன்மை செயலாளராக பணிபுரிந்தார். அவரே எங்கள் மகனுக்கு பாதுகாவலர் மற்றும் ஆலோசகர் என்று சொன்னால் அது மிகை இல்லை.
ஆனால் கடந்து வந்த 3&1/2 வருட காலத்தில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே பல சண்டைகள், சச்சரவுகள் இருக்கத்தான் செய்தன.
“நாம் சமுதாய பயந்தாங்கொள்ளிகள் ” என்பது அவளுடைய குற்றச்சாட்டு.
உண்மை சற்று சுடவே செய்தது. நான் அதைப் பற்றி கவலைப்படாமல் என் மனைவியை எதிர் கொண்டேன்.
“ஷீலா , இதோ பார்; கல்வி மட்டும் தான் முக்கியம்; சமுதாயம் ‘நம்மை’ மதிக்க கல்வி ஒரு அளவு கோல். – அதுவே முதன்மையான ஒன்று” என்று சொல்லிச் சமாளித்தேன்.
எப்படியோ, எங்களை சமாதானப்படுத்த எங்கள் மகன் ராஜீ வருடத்திற்கு இரண்டு முறை வந்து போவான்.
வாழ்கையில் எந்த உரசலும் இல்லை; சலிப்பும் இல்லை; ஆனால் அர்த்தம் வேண்டும். அதுவும் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும்.
“அவனுடைய கிரேட் முதல் வருடத்தில் ‘பி’ ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து இப்போது ‘ஏ+’ ஆக வளர்ச்சி அடைந்தது எங்களுக்கு பெருமிதத்தை தந்தது என்றால் அது உண்மைதான்.
இதை கொண்டாடும் பொருட்டு நாங்கள் இருவரும் எங்கள் மகன், மற்றும் மைத்துனர் ஆகியோருக்கு ஒரு விசித்திர அதிர்ச்சியை ஏற்படுத்த யாருக்கும் சொல்லாமல் ‘டார்ஜிலிங்’ புறப்பட்டோம்.
கல்கத்தாவில் இறங்கி ஞாயிறு இரவு தங்கினோம். எங்களுக்கு திங்கள் கிழமை 3 மணி அளவில் டிரெயின் என்பதால் காலை முதல் மதியம் வரை ‘சாப்பிங் ‘செய்து இருவரும் களைப்பாற மதிய உணவை ருசிக்க தொடங்கினோம்.
வங்க மொழியில் நீயூஸ் ஒடிக் கொண்டு இருந்தது. நடுவிலே டி.வி.ல் பிரேக்கிங் நீயூஸ் ஒன்று வந்து ஒடியது.
அந்த நீயூஸ் எங்களை திசை திருப்பியது. நிலைகுலையச் செய்தது. இதோ எங்கள் மகன் பேசுகிறான் – கேளுங்கள்.
(ஆங்கில உரையின் தமிழாக்கம்)
“எல்லோருக்கும் வணக்கம். நான் ராஜூ – ராஜூ செல்வம். நான் தமிழன். நான் இதழியல் 4-ம் ஆண்டு படித்து வருகிறேன்.
நான் உண்மையில் கொடுத்து வைத்தவன்; கொடுத்தவர்கள் என் ஆசிரியர்கள். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.
இரண்டாவது என் மாமா.
இந்த வருடத்திற்கான ‘யுவ புரஷ்கார்’ விருது (இளம் எழுத்தாளர் விருது) எனக்கு கிடைத்து இருப்பது அளவிலா மகிழ்ச்சி அளிக்கிறது.
கோண்டுகளின் பழங்குடி வாழ்வு பற்றிய எனது ஆராய்ச்சிக்காக இந்த மதிப்புமிக்க விருதை வழங்கியதற்காக சாகித்ய அகாடமிக்கு நன்றி.
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகள் வரையிலான பரந்த நிலப்பரப்பில் கோண்டுகள் வாழ்கின்றனர்.
அவர்கள் இணைந்து வாழ்வது காடுகளில். இந்த பகுதிகளில் அவர்களின் உணர்வுபூர்வமான இருப்பு உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அதிக அளவில் பயனளிக்கிறது; மிகவும் அரிதான விலங்குகள் மற்றும் தாவரங்கள் அவர்களின் காரணமாக உயிர் வாழ்கின்றன.
அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார்கள். மேலும் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட இயற்கையுடன் ஒத்திசைந்த வாழ்க்கையைப் பார்த்து நாம் நம் நடத்தையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனது மாமாவும் கல்லூரியின் முதல்வரும் எனது ஆர்வத்தை புரிந்து கொண்டு, எனது ஆய்வறிக்கையை சுதந்திரமாக தயார் செய்ய அனுமதித்தனர்.
அவர்களுக்கு முதன்மையான எனது வணக்கங்கள்.
எழுதுவதில் என் ஆர்வம் இருப்பதால், என் பெற்றோர் என்னை மன்னிக்கவும்.
மீண்டும் ஒருமுறை நன்றி.
எங்கள் மகன் தெளிவாகப் பேசி முடித்ததைப் பார்த்தோம்.
மகனுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம் என்று நாங்கள் விரும்பினால் அவன் எங்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்து விட்டான்.
பொறியியல் படிக்க அனுப்பிய பையன் இதழியல் படிப்பதைப் பார்த்து நாங்கள் தடுமாறினோம்; தத்தளித்தோம்.
நாங்கள் திணித்த படிப்பை உதறி விட்டுத் தனக்குப் பிடித்த படிப்பை எடுத்து அதில் சாதனை படைத்தவனை நினைத்துக் கண்ணீர் விட்டோம்.
எங்கள் கண்ணீரைப் பார்த்து ஹோட்டலில் இருந்த மற்றவர்கள் என்ன என்று கேட்டார்கள்.
ஆனந்தக் கண்ணீர் என்று பதில் சொன்னோம்.
சபாஷ் ராஜு!
செல்வராஜ் ராமன்
18/33, நெல்லு கடைத்தெரு
கும்பகோணம் – 612001
கைபேசி: 9095522841