சப்தமும் இரைச்சலும் – ஓர் பார்வை

சப்தமும் இரைச்சலும்

மனிதன் இன்று இரைச்சலும் சப்தமும் சூழ்ந்த சூழ்நிலைக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கு காணினும் சப்தம், இரைச்சல்.

பொழுது புலர்ந்தது முதல் தலைதூக்கும் இந்த பிரச்சனை, நாள் முழுக்கத் தொடர்ந்து இரவு ஆகியும் தீராமல் மனித வர்க்கத்தை ஆட்டிப் படைக்கிறது.

இரண்டு சக்கர வாகனங்ககள் முதல் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், பேருந்து, ரேடியோ, டி.வி., தொழிற்சாலை யந்திரங்கள், ரயில், மைக் மூலம் ஏற்படுத்தப்படும் சப்தம் என பல்வேறு வகைகள் மூலம் சப்தத்தின் இம்சை தாங்க முடியாமல் நாம் அன்றாடம் தவித்து வருகிறோம். இதுவே ஒலி மாசுபாடு ஆகும்.

ஒரு நகரத்தை எடுத்துக் கொண்டால் அதிகபட்சம் 45 டெசிபல்தான் சப்தம் மற்றும் இரைசலின் அளவு இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டிருக்கிறது.

மும்பை, டெல்லி, கல்கத்தா, சென்னை போன்ற நகரங்களின் சப்த அளவு 90 டெசிபலுக்கு மேல் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உலகிலேயே மும்பை சப்தமும் இரைச்சலும் மிக்க நகரங்களிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கிறதாம். மும்பையைத் தொடர்ந்து டெல்லி இவ்விஷயத்தில் அடுத்த இடத்தை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது.

உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிப்படி நாம் பொறுத்துக் கொள்ளக்கூடிய சப்தம் மற்றும் இரைசலின் அளவு 65 டெசிபல் ஆகும். மருத்துவமனை அதிகமுள்ள பகுதிகளில் 35-லிருந்து 50 டெசிபல் அளவு வரை இருக்கலாம் என்கிறார்கள்.

தொழில்துறை நிறுவனங்கள் அதிக அளவில் காணப்படும் நாடுகளில் இந்த சப்தம்-இரைச்சல் பிரச்சனையைக் கட்டுப்படுத்த சப்தம் ஏற்படுத்தாத வாகனங்களை (Noise-Proof) அறிமுகம் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி போக்குவரத்து அதிகம் காணப்படும் சாலைகளில் ஒலி அளவைக் கட்டுப்படுத்தும் தடுப்புச் சுவர்களை அமைக்கிறார்கள்.

உலகில் ஒருசில நகரங்களில் கூடுமானவரை இரவு விமானப் போக்குவரத்தைத் தடை செய்திருக்கின்றனர்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்த இரைச்சல்-சப்தத்தைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியும், நடவடிக்கையும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியே உள்ளன.

சுற்றுப்புறச் சூழ்நிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, இந்தியா இப்பிரச்சனையை ஒரு பொருட்டாகவே மதிக்க‌வில்லை என்பதும், தவிர்க்க முடியாத வழக்கமான ஓர் நிகழ்வுதான் இப்பிரச்சனை என நினைப்பதும் முக்கிய காரணங்கள்.

இந்திய மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனமும் பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards) நிறுவனமும், சுற்றுப்புறச் சூழ்நிலை ஆராய்ச்சியாளர்களும் இந்தியாவில் இரைச்சல் மற்றும் சப்தத்தின் அளவினை வெகுவாகக் குறைக்க, அதிக ஒலி அளவு ஏற்படா வண்ணம் புதிய யுக்திகளைக் கையாள தொழிற்சாலைகளிலும் சாலைகளிலும் மாற்று வழிகளுக்கான வழிகளைப் பற்றி தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒலி அலைகளை ஈர்த்து, சப்தத்தின் அளவைக் குறைக்கப் பசுமையான மரங்களும், செடி, கொடிகளும் பெரிதும் துணை புரிவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

எனவே சாலையோர மரங்களை வெட்டி சாய்க்காமல் அவைகளைப் போற்றிப் பாதுகாத்தல் இப்பிரச்சனைக்கு ஓர் நல்ல தீர்வாக அமையும்!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998