சமவெளி என்பது பரந்து விரிந்து உயரத்தில் மாற்றங்கள் இல்லாத சமதளமாகக் காணப்படும் நிலப்பகுதி ஆகும்.இது உலகில் காணப்படும் முக்கிய நில வடிவங்களில் ஒன்றாகும்.
சமவெளிகள் உலகின் எல்லாக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகில் உள்ள நிலப்பரப்பில் 55 சதவீதம் சமவெளிகளால் ஆனது. உலகில் 80 சதவீத மக்கள் சமவெளிகளில் வாழ்கின்றனர்.
சமவெளிகள் மலைகளின் அடிவாரத்தில், கடற்கரையின் ஓரங்களில், பள்ளதாக்குகளில் மற்றும் பீடபூமிகளின் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன.
சமவெளிகளின் சராசரி உயரமானது 200 மீட்டருக்கும் குறைவாக இருக்கும். உலகில் உள்ள சமவெளிகளில் பெரும்பாலானவை ஆற்றின் படிவுகளால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
சமவெளிகள் ஆற்றின் படிவுகளாலும், நீர், காற்று, பனி ஆகியவற்றின் செயல்பாட்டினாலும், லாவாக்களினாலும் உருவாக்கப்படுகின்றன.
உலகில் பெரும்பாலான ஆறுகள் சமவெளிகளால் சூழப்பட்டுள்ளன. தூந்திரா, புல்வெளிகள், பாலைவனங்கள், மழைக்காடுகள் ஆகியவை சமவெளிகள் ஆகும்.
சமவெளி வகைகள்
சமவெளிகள் அவை உருவாகும் விதத்தைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை அரிப்பினால் உண்டாகுபவை, படிவுகளால் உண்டாகுபவை, உயர்த்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வடிநிலங்கள் ஆகும்.
அரிப்பினால் உண்டாகுபவை
இயற்கை நிகழ்வுகளான மழை, ஆறு, கடல் அலைகள், பனிக்கட்டிகள், பனியாறுகள், காற்று ஆகியவை நிலத்தின் மேற்பரப்பினை அரித்து சமவெளிகளை உருவாக்குகின்றன.
அரிப்பினால் உயரமான பகுதிகளில் இருந்து சமவெளிகளானது தோன்றி இருக்கலாம். இவ்வகையில் தோன்றும் சமவெளிகள் சீரான சமதளப்பரப்பைக் கொண்டிருப்பதில்லை. இவை பெனிபிளைன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

மேற்கு சைபீரிய சமவெளி, ஃபின்லாந்து சமவெளிப் பகுதி, ஐக்கிய அமெரிக்காவின் ஹட்சன் பே ஆகியவற்றை இவ்வகைக்கு எடுத்துக்காட்டாகும்.
படிவுகளால் உண்டாகுபவை
ஆறுகள், பனியாறுகள் மற்றும் காற்று ஆகியவற்றால் கடல் மற்றும் ஏரிகளில் படிவங்களால் இவ்வகை சமவெளியானது உருவாக்கப்படுகிறது.
ஆறுகளின் படிவுகளால் உருவாக்கப்படுபவை ஆற்றுச் சமவெளிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள கங்கை பிரம்மபுத்திரா சமவெளிப் பகுதி, இத்தாலியின் போ பள்ளத்தாக்கு, நைல் சமவெளிப் பகுதி ஆகியவை ஆற்று சமவெளிக்கு எடுத்துக்காட்டாகும்.
உறை பனியாற்றின் படிவுகளால் உருவானவை உறை பனியாற்று சமவெளிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் வடமேற்குப் பகுதிகள் மற்றும் கனடிய சமவெளிப் பகுதி ஆகியவை உறை பனியாற்று சமவெளிகளுக்கு உதாரணங்களாகும்.
காற்றின் படிவுகளால் உருவாக்கப்படுபவை காற்று சமவெளிகள் என்று அழைக்கப்படுகின்றன.

சீனாவில் உள்ள கோபி பாலைவனம் காற்றின் படிவுகளால் உருவாக்கப்பட்டது ஆகும்.
ஆற்றின் படிவுகள் ஏரிகளில் படிய வைக்கப்பட்டு உருவாகும் சமவெளி ஏரிபடுவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்தியாவின் மணிப்பூர் சமவெளிப் பகுதி மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகியவை இவ்வகையைச் சார்ந்தவை.
லாவாக் குழம்புகள் படிவதால் உண்டானவை லாவாச் சமவெளிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பாம்பு ஆற்று சமவெளிப் பகுதி இவ்வகைக்கு எடுத்துக்காட்டாகும்.
உயர்த்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமவெளிகள்
சில நேரங்களில் பூமியின் இயக்கத்தின் காரணமாக கடலின் ஆழம் குறைந்த பகுதியானது உயர்த்தப்பட்டு சமவெளியை உருவாக்குகிறது. இவை உயர்த்தப்பட்ட சமவெளிகள் என்று அழைக்கப்படுகின்றன.

ரஷ்யாவில் உள்ள ஸ்டெப்பி புல்வெளி இவ்வகைக்கு எடுத்துக்காட்டாகும்.
புவியின் இயக்கத்தினால் நிலத்தின் ஒரு பகுதியானது தாழ்த்தப்பட்டு உருவாகும் சமவெளிகள், தாழ்ப்பட்ட சமவெளிகள் அல்லது வடிநிலச் சமவெளிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய ஆசியாவின் தரிம் சமவெளி மற்றும் காஸ்பியன் கடலுக்கு அருகில் உள்ள டுரன் தாழ்நிலம் ஆகியவை இவ்வகைக்கு எடுத்துக்காட்டாகும்.
சமவெளிகளின் முக்கியத்துவம்
சமவெளிகளில் வளமான மண் மிக ஆழத்திலும் காணப்படுகிறது. இதனை பரப்பு சமதளமாகவும், பரந்து விரிந்தும் உள்ளதால் இவை வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளன.
வேளாண்மை இங்கு செழித்து இருப்பதால் இவை உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகின்றன.
வேளாண்மை செழித்து இப்பகுதியில் காணப்படுவதால் இங்கு வேளாண்மை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுகின்றன.
வேலை வாய்ப்புகளின் காரணமாக இப்பகுதியில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது.
இவை சமதளமாகக் காணப்படுவதால் சாலைகள், இருப்புப் பாதைகள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் நிறைந்து காணப்படுகின்றன.
சமவெளிப் பகுதிகளில் போக்குவரத்து, வேளாண்மை, தொழிற்சாலைகள் ஆகியவை அதிகம் காணப்படுவதால் ஏனைய நிலப்பகுதிகளைவிட இங்கு நகரங்கள் மற்றும் மாநகரங்கள் நாள்தோறும் வளர்ந்து வருகின்றன.
சவெளிப்பகுதிகளில் மக்கள் அதிகளவு குவிந்து காணப்படுகின்றனர். உலகில் 80 சதவீத மக்கள் சமவெளிகளில் வாழ்கின்றனர்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!