குன்றத்தூரில் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுப் பலகைகளில் தொங்கியபடி பயணம் செய்தார்கள்.
“ஏன்டா இப்படி ஃபுட்போர்டுல தொங்கிகிட்டு பயணம் பண்றீங்களே! பஸ்ஸுலிருந்து தவறி விழுந்து, கால், கை இழந்தாலோ, ஏன் செத்தே போனாலோ எல்லாம் திரும்ப வருமா? உங்க அம்மா அப்பா பத்தி யோசிச்சீங்களா?
ஏங்க நீங்க போலீஸ்தானே ரெண்டு சாத்து சாத்தி உள்ளே ஏறச் சொல்லுங்க!” இருக்கையில் இருந்த பெரியவர், அருகிலிருந்த போலீஸ்காரர் அன்பரசுவைப் பார்த்துச் சொன்னார்.
“எதுக்கு நமக்கு வம்பு?
நாம எதையாவது கேட்கப்போனா, அத வீடியோவா எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ ட்யூப், வாட்சப்னு சமூக வலைத்தளங்களில பரப்பி விடுவானுங்க.
இதையெல்லாம் கண்டும் காணாம இருந்திடனும்” அன்பரசுவின் பேச்சைக் கேட்டு ஆடிப்போனார் பெரியவர்.
பஸ் வடபழனி வர எல்லோரும் இறங்கினார்கள்.
“சார், குன்றத்தூர் டூ வடபழனிக்கு காலையில எட்டு மணி முதல் பத்து மணி வர மொத்தம் அஞ்சு பஸ்கள் ஓடுது. அந்த பஸ்கள் எல்லாத்திலயும் ஸ்கூல், காலேஜ் படிக்கிற பசங்க படிக்கட்டுல தொங்கிகிட்டு போறாங்க.
யாரு சொன்னாலும் கேக்க மாட்டானுங்க. அதனால, அந்த அஞ்சு பஸ்சும் முன்பக்க பின்பக்க டோர் இருக்கிற பஸ்சா விட்டீங்கன்னா, எவனும் படிக்கட்டுல தொங்க மாட்டானுங்க!” போக்குவரத்து அலுவலரிடம் மனு கொடுத்தார் அன்பரசு.
“இது நல்ல ஐடியாதான்!
பசங்கள அவங்க போக்கில போய் மாத்துனாத்தான் உண்டு. உடனே ஏற்பாடு பண்றேன்” புன்னகைத்தபடியே சொன்ன அதிகாரியிடமிருந்து நன்றிப் பெருக்கோடு விடை பெற்றார் அன்பரசு.

எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!