சமையலின் ராணி வெங்காயம்

சமையலின் ராணி வெங்காயம் என்பதை யாரும் மறுத்துக் கூறமுடியாது; ஏனெனில் வெங்காயமில்லாத சமையலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

வெங்காயத்தை சமையலில் சேர்க்கும்போது உணவிற்கு ருசியைத் தருவதோடு உடல்நலத்தினையும் மேம்படுத்துகிறது. இக்கட்டுரையில் வெங்காயம் எனக் குறிப்பிடப்படுவது பல்லாரி அல்லது பெரிய வெங்காயம் ஆகும்.

வெங்காயமானது காரம் மற்றும் இனிப்பு சுவை கலந்தோ, காரமாகவோ இருக்கும். இதனை வெட்டும்போது கண்களில் நீரினை வரவழைக்கும். இதற்கு காரணம் இக்காயில் உள்ள அல்லில் ப்ராபில் டைசல்பைடு என்ற வேதிச் சேர்மம் ஆகும்.

வெங்காயம் மட்டுமின்றி வெங்காயத்தாள்களும் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வெங்காயமானது அல்லியம் என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. பூண்டு, இக்லீசு, இனப்பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியோர் இதனுடைய உறவினர்கள் ஆவர். இதனுடைய அறிவியல் பெயர் அல்லியம் சீபா என்பதாகும்.

 

வெங்காயத்தின் அமைப்பு மற்றும் வளரியல்பு

வெங்காயமானது ஈராண்டு வாழும் குற்றுச்செடி வகைத் தாவரம் ஆகும். இது குளிர்ந்த சூழலில் நன்கு வளரும். நல்ல வளமான வடிகால் அமைப்புடைய களிமண் மற்றும் வண்டல் இத்தாவரம் வளர ஏற்றது. நன்கு விளைந்த வெங்காயத்தை பெற நல்ல சூரிய ஒளி தேவை.

பயிர் செய்த முதல் ஆண்டில் இத்தாவரத்திலிருந்து வெங்காயத்தை அறுவடை செய்யலாம். இத்தாவரம் தனது இரண்டாம் ஆண்டில் பூக்கள் மற்றும் விதைகளை உற்பத்தி செய்கிறது.

வெங்காயத் தாவரமானது சல்லி வேர்களைக் கொண்டுள்ளது. இதன் தண்டுப்பகுதியானது பூமிக்கு அடியில் வட்டவடிவமாக காணப்படுகிறது. இதன் தண்டினைச் சுற்றிலும் சூடோசெம் இலைகள் வட்ட வடிவமாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இத்தாவரத்தின் இலைகள் உருளைவடிவில் மஞ்சள் கலந்த பச்சை வண்ணத்தில் உள்ளன.

வெங்காயம் என்பது பலஅடுக்குகளாகச் சுற்றப்பட்டுள்ள இலைப்பகுதியே ஆகும். வெங்காயத்தின் வெளிப்புறம் மெல்லிய தோலால் மூடப்பட்டுள்ளது.

 

வெங்காயத் தோட்டம்
வெங்காயத் தோட்டம்

 

இத்தாவரமானது வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறப் பூக்களை கொத்துக்களாக உருவாக்குகிறது.

 

வெங்காயப் பூ
வெங்காயப் பூ

 

இத்தாவரம் பளபளப்பான முக்கோண வடிவ கருப்பு நிறவிதைகளைத் தோற்றுவிக்கிறது.

 

வெங்காய விதைகள்
வெங்காய விதைகள்

 

வெங்காயமானது மஞ்சள் கலந்த பழுப்பு, ஆரஞ்சு கலந்த பழுப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, அடர்சிவப்பு ஆகிய நிறங்களில் வெளித்தோலினைக் கொண்டுள்ளது.

 

பல வண்ண‌ வெங்காயம்
பல வண்ண‌ வெங்காயம்

 

வெங்காயத்தோலின் வெளிநிறத்திற்கு ஏற்ப வெங்காயத்தின் காரமும் வேறுபடுகிறது.

 

வெங்காயத்தின் வரலாறு

வெங்காயமானது 7000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யபட்டுள்ளது. வெங்காயத்தின் தாயகம் ஆசியாவாகும். இந்தியா மற்றும் சீனாவில் இக்காய் பன்னெடுங்காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எகிப்து, ரோம, கிரேக்க நாகரிகங்களிலும் வெங்காயம் பயன்படுத்தப்பட்டது.

தற்போது இந்தியா, சீனா, அமெரிக்கா, ஈரான், எகிப்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இக்காயினை அதிகளவு உற்பத்தி செய்கின்றன.

 

வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வெங்காயத்தில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்) போன்றவைகள் உள்ளன.

இக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன.

இக்காயானது குறிப்பிட்டளவு குரோமியத்தைக் கொண்டுள்ளது. இக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவை உள்ளன.

இக்காயானது 80 நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது.

 

வெங்காயத்தின் மருத்துவப்பண்புகள்

பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியத்திற்கு

வெங்காயமானது பாக்டீயா, பூஞ்சை, வைரஸ் மற்றும் தொற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இதனை பச்சையாக உண்ணும்போது பற்சிதைவிலிருந்தும், வாய்த்தொற்றிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. எனவே இக்காயினை பச்சையாக உண்டு பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

 

நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெற

வெங்காயத்தில் உள்ள பைட்டோவேதிச்சேர்மங்கள் உடலானது விட்டமின் சி உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கிறது. நோய்க்குக் காரணமான நச்சுப்பொருட்கள்களை எதிர்க்கத் தேவையான எதிர்ப்பு ஆற்றலை விட்டமின் சி வழங்குகிறது. எனவே வெங்காயத்தினை உண்டு நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை பெறலாம்.

 

இதய நலத்திற்கு

வெங்காயமானது உறைதல் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. இரத்தத்தின் அடர்த்தி அதிகமாக இருக்கும்போது இரத்தக்கட்டிகள் உருவாகி மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

வெங்காயத்தினை உண்ணும்போது அது இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து இரத்தச் சிவப்பணுக்கள் கட்டியாவதை தடைசெய்கிறது. எனவே வெங்காயத்தை உண்டு இதயநலத்தினைப் பாதுகாக்கலாம்.

 

நீரழிவு நோயினை சீராக்க

வேறுஎந்த உணவுப்பொருட்களிலும் காணாத குரோமியம் வெங்காயத்தில் காணப்படுகிறது. இக்குரோமியம் உடலின் இரத்த சர்க்கரையின் அளவினை சீராக வைக்கிறது.

மேலும் இது உடல் செல்கள் மற்றும் தசைகளுக்கு தேவையான சர்க்கரையின் அளவினை சீராகவும், மெதுவாகவும் இரத்தத்திலிருந்து அளிக்க உதவுகிறது.

 

புற்றுநோயினை குணமாக்க

வெங்காயத்தில் காணப்படும் குயர்செட்டின் என்ற வேதிப்பொருளானது ஆன்டிஆக்ஸிஜென்டாகச் செயல்பட்டு புற்றுச்செல்கள் உருவாவதையும், பரவுவதையும் தடைசெய்கிறது.

இக்காயில் காணப்படும் மற்றொரு ஆன்டிஆக்ஸிஜென்டான விட்டமின் சி-யானது உடல் வளர்ச்சிதை மாற்றதால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்கிறது.

ப்ரீரேடிக்கல்கள் புற்றுசெல்களைத் தோற்றுவிக்கும் பண்பினைக் கொண்டுள்ளன. எனவே வெங்காயத்தை உணவில் சேர்த்து புற்றுநோயினை குணமாக்கலாம்.

 

வயிற்றுவலியினை குணமாக்க

வெங்காயத்தில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் வாயுதொந்தரவால் உண்டாகும் வயிற்று வலியினைக் குணமாக்குகிறது.

வெங்காயத்தில் உள்ள சபோனோன்கள் வயிற்றினை சீராகச் செயல்படச் செய்து வயிற்று கோளாறுகளை நீக்குகின்றன. எனவே வெங்காயத்தை உண்டு வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யலாம்.

 

சிறுநீர் கடுப்பினை நீக்க

நீர்ச்சத்து குறைபாட்டால் சிறுநீர் கழிக்கும்போது கடுப்பு உண்டாகும். நீரில் வெங்காயத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கும்போது சிறுநீர் கடுப்பு நீங்கும்.

 

சருமப் பாதுகாப்பிற்கு

வெங்காயத்தில் காணப்படும் விட்டமின்-சியானது சருமத்தில் சுருக்கங்கள், பருக்கள், புண்கள் ஏற்படுவதைச் சரிசெய்கிறது.

தேனீக்கள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் கடிவாயில் வெங்காயச்சாற்றினை தடவும்போது விஷமானது நீக்கப்படுகிறது.

 

வெங்காயத்தினை வாங்கும் முறை

வெங்காயமானது ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. வெங்காயத்தை வாங்கும்போது மேற்தோல் உலர்ந்த புதிய கனமான ஒரே சீரான அளவு உடையவற்றை வாங்க வேண்டும்.

முளைவிட்ட கருநிற திட்டுக்கள் கொண்ட வெங்காயத்தினைத் தவிர்க்க வேண்டும். வெளிப்புறத்தில் வெட்டுக்காயங்கள், பிளவுபட்ட வெங்காயத்தைத் தவிர்க்கவும்.

வீடுகளில் குளிர்ந்த வெளிச்சம் குறைவான இடங்களில் வைக்கலாம்.

உருளைக்கிழங்கினையும், வெங்காயத்தையும் ஒருபோதும் சேர்த்து வைக்கக்கூடாது.

வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்பு அதனை குளிரூட்டி வெட்டினால் கண்களில் நீரினை வரவழைக்காது.

வெங்காயம் வெட்டும்போது உண்டாகும் கைகளில் உண்டாகும் நெடியினைப் போக்க கைகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின் கைகளில் உப்பினைத் தடவி வெந்நீரில் கழுவ வேண்டும்.

வெங்காயத்தை உண்ணும்போது உண்டாகும் வாய் நாற்றத்தைப் போக்க ஆப்பிளை உண்டு சரி செய்யலாம்.

வெங்கயமானது ஊறுகாய், சாலட், பீசா, பர்கர், சூப் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது.

சமையல் ராணியான வெங்காயத்தை உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.