சரிக்குச் சரி

முன்னொரு காலத்தில் முகிலன் என்பவன் தனது ஊரான அழகாபுரியிலிருந்து தனது பாட்டியின் ஊரான நடையனேரிக்கு செல்ல விரும்பினான்.

அவன் அழகாபுரியிலிருந்து நடையனேரிக்குச் செல்லும்போது இருஊருக்கும் நடுவிலிருந்த புத்தூரில் உள்ள சத்திரத்தில் களைப்பாறிக் கொள்ளத் திட்டமிட்டான்.

அவன் பயணத்தின்போது உண்பதற்கான உணவினைத் தயார் செய்து தன்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினான்.

திட்டமிட்டபடி மறுநாள் காலையில் அழகாபுரியிலிருந்து முகிலன் பயணத்தைத் தொடங்கினான். மதியவேளையில் புத்தூரின் சத்திரத்தை அடைந்தான்.

சத்திரக்காரனிடம் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள மட்டும் பணம் செலுத்தி சத்திரத்தில் தங்கினான்.

சத்திரத்தில் ஏற்கனவே இருந்த திருமணக் கூட்டத்தினருக்காக சத்திரக்காரன் தடபுடலான விருந்தினைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

விருந்தின் வாசைன முகிலனின் மூக்கைத் துளைத்தது. விருந்தின் வாசனையை நுகர்ந்து கொண்டே தன்னுடைய மதிய வேளை உணவினை உண்டான்.

பின் சிறிது நேரம் களைப்பாறிய முகிலன் சத்திரக்காரனிடம் சென்று “ஐயா, உங்களின் சத்திரத்தில் தயார் செய்த விருந்தின் வாசனை நன்றாக இருந்தது. நான் அவ்வாசனையை முகர்ந்து கொண்டே என்னுடைய மதிய உணவினை உண்டேன். நான் வருகிறேன்” என்று கூறினான்.

முகிலன் கூறியதைக் கேட்ட சத்திரக்காரனுக்கு கோபம் வந்தது. அவன் முகிலனிடம் “நீங்கள் இங்கே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள மட்டுமே பணம் செலுத்தியுள்ளீர்கள். என்னுடைய விருந்தின் வாசனைக்கு பணம் தரவில்லை. ஆதலால் நீங்கள் முகர்ந்த விருந்தின் வாசனைக்கு பணம் தாருங்கள்” என்று கேட்டான்.

சத்திரக்காரனின் பேச்சைக் கேட்ட முகிலன் அதிர்ச்சியடைந்தான். இருவரும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிவடைந்தது.

இறுதியில் சத்திரக்காரன் முகிலனிடம் “இவ்வூரின் நீதிமன்றத்திற்கு சென்று நம் வழக்கைக் கூறுவோம். நீதிபதி கூறும் தீர்ப்பிற்கு இருவரும் கட்டுப்படுவோம்” என்று அழைத்தான்.

முகிலனும் அதற்கு சம்மதம் தெரிவித்து சத்திரக்காரனுடன் இணைந்து நீதிமன்றத்திற்குச் சென்றான்.

நீதிமன்றத்தில் இருவருடைய வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். பின்னர் அவர் முகிலனிடம் “ஐயா நீங்கள் இருபது நாணயங்களைத் தாருங்கள்” என்று கூறினார்.

நீதிபதி கூறியதும் சத்திரக்காரன் மிகவும் சந்தோசம் அடைந்தான். முகிலனோ வருத்தத்துடன் இருபது நாணங்களைக் கொடுத்தான்.

காசுகளை வாங்கிய நீதிபதி அதனை துணியில் போட்டு கட்டி முகிலனின் கையில் கொடுத்து சத்திரக்காரனின் காதின் அருகில் நன்கு சத்தம் வரும்படி குலுக்கச் சொன்னார். முகிலனும் நீதிபதி கூறியவாறே செய்தான்.

பின்னர் நீதிபதி சத்திரக்காரனிடம் “உன்னுடைய உணவினை முகர்ந்ததற்காக முகிலன் காசின் ஒலியை உனக்கு கேட்கச் செய்தான். இதுவே அவன் செய்த செயலுக்கு சரிக்குச் சரி. நீங்கள் இருவரும் இப்போது கிளம்பலாம்.” என்று கூறினார்.

நீதிபதி கூறியதைக் கேட்ட பேராசைக்கார சத்திரக்காரன் அமைதியாக வெளியேறினான். முகிலன் சந்தோசமாக தனது பயணத்தைத் தொடர்ந்தான்.

குழந்தைகளே, புதிய முறையில் ஏமாற்றுபவர்களிடம் நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரிக்குச் சரி கதை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.