சாதனைப் பெண்ணே, சரித்திரம் படைக்க வா!

சாதனைப் பெண்ணே

சரித்திரம் படைக்க வா

பதக்கங்கள் பல சுமக்க

பாரினில் துணிந்து வா

எட்டுத் திசை முட்டும் வரை

தொடரட்டும் உன் புரட்சி அலை

தூசி அல்ல தூண்கள் என எழுந்து வா

பேதை என்பது கவிஞரின் எழுத்துப் பிழை

அதை மேதை என எழுதிடலாம் வா

சுமைகளை உதறி

சரித்திரம் படைக்க வா

சிலுவையை உடைத்து

சிகரத்தை தொட்டிட வா

வன்மையை விரட்டி

பெண்மையைக் காக்க வா

சிங்கம்போல் எழுந்து

சிரமத்தின் வேரை அறுக்க வா

கண்ணியம் நீ கொண்டு

காமனைக் கால் நுனியில் நசுக்க வா

அடுப்பூதும் வேலையைத் தொடர்ந்து

அதோடு அறிவியல் பயில வா

வீறுநடை நீ போட்டு

விண்வெளியை அளக்க வா

கைவிலங்கை நீ கழட்டி

கடிவாளம் தான் போட்டு

சத்தியத்தை நீ அடைய

லட்சியத்தை ஏந்தி வா

சங்கிலியை நீ உடைத்து

சாதனையை எழுதி விட

சடுதியிலே ஏறி வா

சரித்திரம் உனை ஏந்த வா

ஆட்டி வைத்த கரம் உன்னை

ஆளச் சொல்லி தான் அழைக்கும்

பூட்டி வைத்த பூவுலகம்

உன் பொற்பாதம் ஏந்தி நிற்கும்

பல பட்டங்கள் நீ சுமந்து

பாரினில் ஜெயிக்க வா

இங்கு ஆணுக்கு நிகராய் வா

அகிலத்தை ஆள்வோம் வா

சரித்திரக் காற்று உன்னை

சுமக்கும் காலம் வெகுதூரமில்லை

உன்னருமை புரிந்துவிட்டால்

இங்கு

பெண்ணடிமை முடிந்துவிடும்!

சி.பபினா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.