சரியான உணவு, சரியான நேரம் மற்றும் சரியான அளவு!

ஆரோக்கிய வாழ்விற்கு சரியான உணவு, சரியான நேரம் மற்றும் சரியான அளவு என்ற மும்முனைகள் அவசியமானவை.

உணவு என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் தேவையான எரிபொருள். அது நமது உடல் கடிகாரத்தால் நேர்த்தியாக நேரப்படுத்தப்படுகிறது.

சரியான உணவு

சரியான உணவு என்பது ஆரோக்கியமான உணவு முறையின் அடிப்படைக் காரணியாகும். சரியான உணவிற்கு நாம் எப்பொழுதும் அதிகளவு காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள், பருவகால காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.

இளநீர், பதநீர், எலுமிச்சைச் சாறு உள்ளிட்ட இயற்கை பானங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொரித்த உணவுகள் மற்றும் சாக்கலேட்டுகளுக்குப் பதிலாக பழங்கள் மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் பயறு வகைகளை உண்ணலாம்.

காலை உணவாக கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய உணவுகள், முழு தானியங்கள் ஆகியவற்றை காலை உணவாகக் கொள்ளலாம்.

மதிய உணவில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புக்கள் கொண்ட உணவினை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரை வகைகள், பயறு வகைகள், மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை உண்ண ஏற்ற நேரம் இது.

இரவு உணவு எளிதில் செரிக்குமாறும் குறைந்த அளவு இருக்குமாறும் உட்கொள்ள வேண்டும்.

சரியான நேரம்

நம்முடைய உணவுப் பழக்கம் பொதுவாக காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளை உடையது. எனினும் காலை, மதியம் மற்றும் மதியம், இரவு வேளைகளுக்கு இடையில் ஏதேனும் சிற்றுண்டிகளை உண்ணலாம்.

ஒவ்வொரு உணவு இடைவெளிக்கும் இடையில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் இடைவெளி விடவேண்டும்.

காலை உணவினை தூங்கி எழுந்து ஒருமணி நேரத்திற்குள் கட்டாயம் உண்ண வேண்டும்.

இரவு உண்டு உறங்கிய பின் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உண்பதால் இது மிகவும் அவசியமானது. அதனைத் தவிர்க்கக் கூடாது.

காலை உணவினை அதிகபட்சம் காலை ஒன்பது மணிக்குள் உண்ண வேண்டும்.

காலை உணவு வேளை காலை 7-9 மணி

மதிய உணவினை அதிகபட்சம் நண்பகல் 2 மணிக்குள் உண்ண வேண்டும்.

மதிய உணவு வேளை மதியம் 12.30-2 மணி

இரவு உணவினை இரவு 9 மணிக்குள் உண்ண வேண்டும்.

இரவு உணவு வேளை இரவு 7-9 மணி

இரவு உறக்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவினை உண்ண வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டுமே நமது உடல் தூக்கத்திற்கான ஹார்மோனான மெலாட்டனினை சரியான அளவில் வெளியிட்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி வகுக்கும்.

சரியான அளவு

சரியான அளவு என்பது உணவின் அளவினைக் குறிப்பதல்ல. சரிவிகித உணவினைக் குறிப்பது. அதாவது உணவில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.

நாம் உண்ணும் ஒருவேளை உணவில் 50 சதவீதம் (பாதியளவு) காய்கறிகள் அல்லது பழங்கள், புரதச்சத்து 20 சதவீதம், 30 சதவீதம் தானியங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

நம்முடைய உடலானது பகலில் அதிகளவு வளர்ச்சிதை மாற்றத்தையும், இரவில் குறைந்தளவு வளர்ச்சிதை மாற்றத்தையும் கொண்டுள்ளது.

ஆகவே பகலில் அதிக கலோரிகள் கொண்ட உணவினையும், இரவில் குறைந்தளவு கலோரிகள் கொண்ட உணவினையும் உட்கொள்ள வேண்டும்.

சரியான உணவினை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

வ.முனீஸ்வரன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.