சவடால் குறும்படம் ஒரு சாதனைப் படம்.
கிராமத்தின் பிடியில் வளர்ந்த பாசக்கார அப்பா, பக்கத்து ஊரிலிருக்கும் தன் மகளைக் காணச் செல்வதுதான் கதை.
அரை நூற்றாண்டாக நிலை மாறிப் போய்க் கிடக்கும் நகர்ப்புறத்தில், பணப் பைத்தியம் பிடித்துத் திரியும் மனிதர்களைத் தோலுரித்துக் காட்டும் மிகச் சிறப்பான காட்சிகள் நிறைந்திருக்கும் படமாக இப்படம் திகழ்கிறது.
தன் இயலாமையை, வாங்கப் பணம் இல்லாத ஏழ்மை நிலையைக் காட்டிக்கொள்ளாமல், வியாபாரத்தினுடைய ஏமாற்றுத் தனத்தை நக்கலடித்து, கிண்டலடித்து அந்தப் பொருள் எனக்கு வேண்டாம் என்று உதறித் தள்ளித் தன் மனதைத் தேற்றிக் கொள்ளுகின்ற ஏழ்மை அப்பாவின் உளவியல் வெளிப்பாடு மிக அற்புதம்.
கேவலமான வியாபாரிகள்
தன் ஊரில் இருந்து, தன் மகள் ஊர் வரையிலாகச் செல்லுகின்ற பேருந்து பயணத்தில் காண்கின்ற ஒவ்வொரு காட்சியிலும் சமூகத்தினுடைய மிகக் கேவலமான நடத்தைகளையும், பணம் சம்பாதிக்கும் முறைகளையும், மனிதர்களை மனிதர்கள் ஏமாற்றும் வியாபாரத் தந்திரங்களையும், உத்திகளையும், ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துச் சுழன்று சுழன்றுத் தாக்கிச் செல்கின்றார் இயக்குனர்.
அற்புதமான காட்சி அமைப்புகள். தொடர் நிகழ்வுகள் நிறைந்திருக்கிற இப்படத்தில், சமூகத்தினுடைய தாக்கத்தைச் சொல்லுகிற பொழுதுகூட, நகைச்சுவையையும் சிந்திக்கும் திறனையும் ஒவ்வொரு காட்சியிலும் உள் நுழைத்துச் சொல்லுகின்ற பாங்கு சிறப்பாக அமைந்திருக்கிறது.
அப்பாவாக நடிக்கும் அந்தக் கதாபாத்திரக்காரர் உண்மையில் பல விருதுகளை பெற வேண்டிய நடிப்புக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். மிகச்சிறந்த இயல்பான நடிப்பை அவர் தந்திருக்கிறார்.
இயக்குனர் சமூகத்தின் தாக்கத்தை, சமூகத்தில் நிகழுகின்ற பல்வேறு முரண்பாடுகளை வெளிப்படுத்துவதற்காகக் குறும்படத்தின் முதல் பாதியை எடுத்துக் கொள்கிறார். பிற்பகுதியில் ஒரு சிறந்த அப்பாவின் உடைய பாசப் பிணைப்பைக் காட்டி செல்கின்றார்.
பாசக்காரத் தந்தை
தன் மகளின் வீட்டிற்கு வரும் வழியில், பேரனுக்காகத் திண்பண்டத்தையும், வீதியில் விளையாண்டு கிடக்கின்ற கோலிக் குண்டுகளையும் எடுத்துக் கொண்டு தன் பேரனிடம் அலாதியான அன்பு பெருக்கோடு, அவற்றைக் கொடுத்துத் தன் அன்பைக் காட்டுகிறார்.
பணத்திற்கும் அதைத் தேடி வாழ்க்கையை ஓட்டுவதற்கும் அல்லாடித் தள்ளாடுகின்ற தன்னுடைய வாழ்வை நினைத்துக் கண்ணீர் விடுகிறார் தகப்பனார். தான் இவ்வளவு நாட்கள் விரயமாக்காமல் சேமித்து வைத்திருந்த பணத்தை தன் மகளிடம் கொடுத்து “இதைச் செலவுக்கு வைத்துக்கொள்” என்று அவர் கூறுகிறார்.
ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டு இருந்தால், தன் மகளுக்கு, அந்த வறுமையில் வாடுகிற அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய முடியாமல் போயிருக்கும்.
எனவே, தன் மகளின் குடும்பத்தை நினைத்து, அந்த வறுமைக்கு உதவுகிற பாங்கில், குறும்படத்தின் முதல் பாதியில் எந்தவிதமான பொருளையும் வாங்கி உண்ணாமல், அந்த ஆசைகளைக் கட்டுப்படுத்தி தன் மகளினுடையத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற ஒரு தகப்பனாராக அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
குறும்படத்தின் கருத்து
பேருந்துப் பயணம் தனியார் மயமானதிலிருந்து பணம் சம்பாதிப்பதை மட்டும் மனதில் கொண்டு, பயணிகளைக் கவனிக்காமல், அவர்களுக்கு எந்த வசதியும் செய்யாத, பேருந்து முதலாளிகளின் தன்மை இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாமல், பேருந்து நிறுத்தங்களில் சப்போட்டா, வாழைப்பழம் விற்பதும், முடிந்தவரைப் பயணிகளை ஏமாற்ற நினைப்பதும் காட்டப்படுகிறன. வாழ்வாதாரத்தைத் தந்து கல்வி புகட்டாத அரசின் கேவலம் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
தான் ஏமாற்றுவதுகூடத் தெரியாமல் ஏமாறும் பயணிகளின் வாழ்க்கை, இளைஞர்களின் வியாபாரம், பேருந்து நிறுத்தங்களில் விற்கப்படும் குளிர்பானங்களும், டீ வியாபாரமும் என அங்கு அவர்கள் செய்யும் பித்தலாட்டங்களை வசனங்கள் மூலமாகத் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குனர்.
பிண அறையில் கிடைக்கும் ஐஸ் கட்டிகள் சர்பத் போடுவதற்காக விற்கப்படுகின்றன. டீத்தூள் போடும் பொழுது அதோடு ரசாயன கலவைகளும் கலக்கப்படுகின்றன. இவையெல்லாம் இன்று சர்வ சாதாரணம்.
சவடால் குறும்படம் சாதனைப் படம்
இயக்குனர் நரேஷ் சிவாவின் சவடால் குறும்படம் பல நிலைகளில் சாதனை செய்திருக்கிறது. இப்படம் ”த மு எ க ச” வின் ( தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) 2018 க்கான சிறந்த குறும்படத்திற்கான விருதினைப் பெற்றிருக்கிறது. ராமச்சந்திரன் நினைவு விருதான அந்த விருது எல்லோராலும் பாராட்டப்படுவதாகும்.
குறும்படத்தை மிக அதிகமான வாசகர்கள் யூடியூபில் மிகவும் இரசித்து பார்த்து எந்தவித குறைபாடும் கூறாமல், விமர்சனங்களை அளித்திருப்பது, இந்த குறும்படத்திற்கு மட்டுமே என்று நான் நினைக்கின்றேன்.
அந்த விமர்சனங்களுக்கும் பலநூறு விமர்சனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான வாசகர்களை இக்குறும்படம் சென்றடைந்து இருக்கிறது. இது ஒரு சாதனையாகும்.
இக்குறும்படம், கவிஞர் கந்தர்வனின் சிறுகதையைத் தழுவியது. சிறுகதையில் காணப்பட்ட உணர்வை, இப்படம் பல மடங்கு அதிகமான முறையில் பாச உணர்வுகளை அள்ளித் தெளித்து இருக்கிறது எனலாம்.
அரூப நிலையில் உணரக்கூடிய மனிதர்களுக்கு இடையிலான பாசம், அன்பு ஆகியவை வெளியே எழுத்தில் எவ்வளவு முயற்சித்தாலும் கொண்டு வர முடியாது. ஆனால், அதைத் திரையில் நடிப்பின் மூலமாகக் கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு விருந்தாக்கி விட முடியும் என நிரூபித்திருக்கிறார்.
மகள் மீதும், பேரன் மீதும் அளவு கடந்த அன்பை, பாசத்தை, நேசத்தை வைத்திருக்கிற ஒரு கிராமத்துத் தகப்பனாருக்கு எவ்வித உணர்வுகள் எல்லாம் ஏற்படுமோ அதை எல்லாம் அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறது இந்தச் சவடால் குறும்படம்.
சமூகச் சாடலும் பாசமும் நிறைந்த சவடால்.
இயக்குனர்: SR.நரேஷ் குமார்
ஒளிப்பதிவாளர் : ஜலந்தர் வாசன்
இசை : சஜிசனா சேவியர்
எடிட்டிங்: SR.நரேஷ் குமார் & ராம்.K
வசனம்: அருள் CK.நிதிஷ்
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!