திருச்சி புறநகர்ப் பகுதியிலிருந்த அப்பெரிய நிறுவனத்தில் ஸ்டெனோ கிராபர் இன்டர்வியூக்காக காலை ஏழு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி பஸ்சில் சென்று கொண்டிருந்தான் தினேஷ்.
பத்து மணிக்கு இன்டர்வியூ. சத்திரம் போய் அங்கிருந்து வேறொரு பஸ்சில் செல்ல வேண்டும். இரண்டரை மணிநேரம் ஆகிவிடும். மனம் ஒருநிலையின்றி அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அவன் மனம் நான்கு நாட்களுக்க முன் நடந்து முடிந்தவைகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தது. தினேஷின் தந்தை மேகநாதனும், தயாளனும் ஒன்றாகப் படித்தவர்கள்.
தினேஷ் செல்லும் நிறுவனத்தில் மிகமுக்கிய அதிகாரி. இன்டர்வியூ போர்டில் அவரும் இருந்ததால் தினேஷூக்குக் கண்டிப்பாக உதவுவதாக சொல்லியிருந்தார்.
பால் திரண்டு வருகையில் தாழி உடைந்த கதையாக இருவருக்குள்ளும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக மனக்கசப்பு ஏற்பட்டு நட்பு முறிந்து விட்டது.
நடந்த வாக்கு வாதத்தில் பையனுக்கு எப்படி வேலை கிடைக்கிறதெனப் பார்க்கிறேன் என்று தயாளன் சவால் விட்டதை மேகநாதன் வீட்டில் அங்கலாய்த்துக் கொண்டு, இனி தினேஷின் வேலை அவ்வளவுதான் எனத் தீர்மானித்துக் கொண்டிருந்த வேளையில், நேற்று மாலை மாரடைப்பால் தயாளன் இறந்து போய் விட்டார் என்ற செய்தி அறிந்தும் பகை காரணமாக மேகநாதன் செல்லவில்லை.
தினேஷின் வேலைக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து மீண்டு விட்டதில் உள்ளுர் ஒருவித திருப்தி அவருக்கு. பஸ் திடீரென நின்றதும் தினேஷின் சிந்தனை அறுபட்டது.
அவன் சென்ற பஸ் முன் நிறைய வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருந்தன. மணியைப் பார்த்தான்.
பஸ் கிளம்பி பதினைந்து நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. சத்திரம் போய்ச் சேரவே ஒன்பது மணி ஆகிவிடும் போல் இருந்தது. வேறொரு பஸ் பிடித்து போய்ச் சேருவதற்குள் மணி பதினொன்றைத் தாண்டி இன்டர்வியூ முடிந்து விடும்.
டென்ஷன் மேலிட, பஸ்சிலிருந்து இறங்கி கொஞ்ச தூரம் முன்னே நடந்து சென்று என்ன ஆயிற்று என்று பார்த்தான்.
சாலையை அடைத்துக் கொண்டு தாரை, தப்பட்டை, வாண வேடிக்கைகளுடன் எறும்பு ஊர்வது போல் சென்று கொண்டிருந்தது தயாளனின் இறுதி ஊர்வலம்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998