சாக்கிய நாயனார் – சிவனை கல்லெறிந்து வழிபட்டு முக்தி பெற்றவர்

சாக்கிய நாயனார் சிவபெருமானின் மீது கொண்ட அன்பினால், தம்முடைய சூழ்நிலையால் கல்லெறிந்து வழிபட்டு முக்தி பெற்ற வேளாளர்.

சாக்கிய நாயனார் திருசங்கமங்கை என்னும் ஊரில் வேளாளராக அவதரித்து வாழ்ந்து வந்தார். சாக்கியர் உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்தும் பேரன்பு கொண்டவராக விளங்கினார்.

திருசங்கமங்கை காஞ்சிபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது.

மேலும் அவருக்கு பிறப்பற்ற நிலையான இன்பத்தை அளிக்கக்கூடிய வீடுபேற்றினை அடைய வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஆதலால் அவர் காஞ்சிபுரம் சென்று அங்கிருந்த சாக்கியர்களுடன் இணைந்தார்.

சாக்கியர்கள் என்பவர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள். அவருடைய காலத்தில் சாக்கியர்கள் காஞ்சியிலும் அதனுடைய சுற்றுப்புறங்களிலும் அதிகளவு வாழ்ந்தனர்.

காஞ்சி சென்ற சாக்கிய நாயனார் சாக்கிய மதநூல்களைக் கற்றதோடு, தன்னுடைய உடை மற்றும் பாவனைகளை சாக்கியராகவே மாற்றிக் கொண்டார்.

சாக்கிய நூல்களை முற்றிலும் கற்ற போதிலும், அவருக்கு நிலைத்த வீடுபேற்றினை அளிக்கும் மார்க்கம் சாக்கியம் அல்ல‌ என்பது தோன்றியது.

ஆதலால் அவர் சைவ நூல்களைக் கற்றதோடு, நிலைத்த வீடுபேற்றினை கிடைக்கச் செய்யும் திருவருள் சிவனாரே என்பதை உணர்ந்தார்.

எனவே அவர் வெளித்தோற்றத்தில் சாக்கியராக இருந்தாலும், உள்ளத்தால் சிவபெருமானை வழிபட்டு வரலானார்.

சிவ வழிபாடு

நாள்தோறும் சிவலிங்கத்தை வழிபாடு செய்த பின்னரே உணவு அருந்த வேண்டும் என்ற கொள்கை அவருள் உண்டானது.

‘தாமே வெளிப்புறத்தில் சாக்கிய வேடத்தில் இருக்கின்றோம். ஆதலால் கோவிலுக்குச் சென்று எவ்வாறு சிவலிங்கத்தை வழிபாடு செய்வது?’ என்று எண்ணியபடி நடந்து கொண்டிருந்தார்.

அப்போது வெட்ட வெளியில் வழிபாடு ஏதுமின்றி சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. அதனைக் கண்டதும் சாக்கிய நாயனாருக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

அச்சிவலிங்கத்திற்கு அபிசேகித்து, இலை மற்றும் பூக்களால் போற்றி வழிபாடு செய்ய சாக்கியர் எண்ணினார்.

அதுவோ வெட்டவெளி. ஆதலால் அங்கு தண்ணீரோ இலையோ பூக்களோ இருக்கவில்லை. ‘எவ்வாறு வழிபாடு செய்வது?’ என்று எண்ணிய சாக்கியருக்கு திடீரென ஓர் திட்டம் உதித்தது.

அருகில் கிடந்த கற்களை எடுத்து திருவைந்தெழுத்தான ‘நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்தபடி சிவலிங்கத்தின் மேல் கற்களை எறிந்து வழிபாடு நடத்தினார்.

சாக்கிய நாயனாரின் தூய பக்தியால், இறைவனார் கற்களை மலர்களாகவே ஏற்று அருளினார்.

வழிபாடு முடித்து வீட்டிற்கு வந்த சாக்கியர் உணவருந்தினார். நடந்தவைகளை நினைத்துப் பார்த்தார்.

‘கற்களால் ஏன் சிவலிங்கத் திருமேனியில் எறிந்தேன்?’ என்று சிந்தித்தார்.

‘சாக்கிய உருவத்தில் இருக்கும் என்னால் கோவிலுக்கும் செல்ல இயலாது. அதே சமயத்தில் வெட்டவெளியில் இருக்கும் சிவனாரை மலர்களால் அருச்சிக்கவும் இயலாது. ஆதலாலே கற்களால் சிவலிங்கத் திருமேனியை எறிந்து வழிபட்டேன். வெளிப்புறமாக என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் சிவலிங்கத்திருமேனியை கல்லால் அடிப்பதாகவே எண்ணுவர். எல்லாம் பரம்பொருளின் திருவருள்.’ என்று நினைந்து உருகினார்.

மறுநாளும் வெட்டவெளியில் இருந்த சிவனாரை கற்களால் அருச்சித்து வழிபட்டு விட்டு உணவருந்தினார்.

இவ்வாறாக நாள்தோறும் சிவனாரை கற்களால் வழிபட்டு உணவருந்துவதைக் கடமையாகக் கொண்டார்.

ஒருநாள் சிவ சிந்தனையில் மூழ்கியபடி நித்திய கருமமான சிவலிங்கத்தை கற்களால் வழிபடும் முறையை மறந்து உணவருந்த அமர்ந்தார்.

திடீரென நினைவு பெற்றவராக துள்ளி எழுந்து வெட்டவெளி சிவலிங்கத்தை அடைந்தார். கற்களை எடுத்து சிவனாரின் திருமேனியில் எறிய முற்பட்டார்.

அப்போது இறைவனார் உமையொரு பாகனாக சாக்கிய நாயனாருக்கு இடப வாகனத்தில் காட்சி அருளினார்.

இறைவனைக் கண்ட சாக்கியர் தரையில் வீழ்ந்து வணங்கி எழுந்தார்; இறைவனைப் போற்றி நின்றார்.

அப்போது இறைவனார் சாக்கிய நாயனாருக்கு அவர் விரும்பிய நிலைத்த இன்பமான வீடுபேறான சிவபதத்தை தந்தருளினார்.

சாக்கிய நாயனார் குருபூஜை மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிவபெருமானை கல்லெறிந்து வழிபட்டு முக்தி பெற்ற பௌத்தரான சாக்கிய நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில்மறவாது கல்லெறிந்த சாக்கியருக்கும் அடியேன்‘ என்று போற்றுகிறார்.

சாக்கிய நாயனார் வழிபட்ட வெட்டவெளி சிவலிங்கம் தற்போது கோனேரி குப்பம் என்ற இடத்தில் உள்ளது. சாக்கியரால் கல்லெறியப்பட்ட சிவனார் வீரட்டானேஸ்வரர் என்ற அழைக்கப்படுகிறார்.

அவருக்கு எதிரே சாக்கிய நாயனார் திருமேனி கையில் கல்லுடன் காணப்படுகிறது. வீரட்டானேஸ்வரர் திருமேனி மீது சாக்கியர் கல்லால் எறிந்ததால் ஏற்றபட்ட வடுவும் காணப்படுகிறது.

One Reply to “சாக்கிய நாயனார் – சிவனை கல்லெறிந்து வழிபட்டு முக்தி பெற்றவர்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.