சாதனை ஆச்சி நடிகை திலகம் மனோரமா

சாதனை ஆச்சி நடிகை திலகம் மனோரமா சுமார் 1500-க்கும் மேலான திரைப்படங்கள், 5000-க்கும் மேற்பட்ட மேடைநாடகங்கள், பல தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றில் நடித்ததோடு பாடல்களையும் பாடியுள்ளார்.

ஆச்சி மனோரமா 1000-ம் படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவ‌ர்.

தமிழ் திரைபடத்துறையில் நகைச்சுவை நடிகை என்றவுடன் நம் அனைவர் நினைவிற்கும் வருபவர் மனோரமா. சுமார் 50 ஆண்டுகாலம் திரைபடத்துறையில் பணியாற்றி தனக்கென தனி இடம் பிடித்தவர் இவர்.

1990-2000 ஆண்டுகளில் வெளி வந்த தமிழ்திரைப்படங்களில் மனோரமா இல்லாத படங்களே இல்லை என்றே கூறலாம். இவர் நகைச்சுவை மட்டுமின்றி குணசித்திர வேடங்களிலும் தனது நடிப்பாற்றலை திறம்பட வெளிப்படுத்தினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரைஉலகம் தந்த ஐந்து முதல்வர்களான திரு. சி.என்.அண்ணாதுரை, திரு. மு.கருணாநிதி, திரு. எம்.ஜி.ராமசந்திரன், திரு.என்.டி.ராமாராவ் மற்றும் செல்வி.ஜெ.ஜெயலலிதா ஆகியோர்களுடன் நடித்த பெருமை இவரைச் சாரும்.

மேலும் பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா-வில் தொடங்கி இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை சுமார் ஐந்து தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுடன் நடித்து விட்டார்.

இவர் தனது சாதனைக்காக பத்ம ஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

தில்லானா மேகனாம்பாள் படத்தின் ஜில் ஜில் ரமாமணி, சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கண்ணம்மா, நடிகன் படத்தின் பேபி அம்மா, சின்னகண்டர் படத்தின் சின்ன கவுண்டரின் தாய் போன்ற இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் என்றைக்கும் மக்கள் மனதில் நீங்காதிருப்பவை.

பாப்பா, பள்ளத்தூர் பாப்பா, ஆச்சி என்று எல்லோரும் இவரை ஆசையுடன் அழைத்தனர். இவ்வாறு சாதனை செய்த மனோரமாவைப் பற்றி பார்ப்போம்.

 

இளமைக்காலம்

மனோரமா திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் வசதிமிக்க குடும்பத்தில் 26.05.1937 அன்று பிறந்தார். காசி கிளாக் உடையார் மற்றும் இராமாமிர்தம் ஆகியோர் இவருடைய பெற்றோர் ஆவர்.

இவருடைய இயற்பெயர் கோபிசாந்தா ஆகும். இவருடைய தந்தையார் சாலை ஒப்பந்தக்காரராக இருந்துள்ளார். இவருடைய தந்தையார் இவருடைய தாயின் தங்கையையே இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதனால் இவரும், இவருடைய தாயாரும் இவருடைய தந்தையால் புறக்கணிக்கப்பட்டனர்.

மனோரமாவும் அவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காரைக்குடிக்கு அருகே பள்ளத்தூரில் குடியேறினர். அங்யே தொடக்கக் கல்வியைக் கற்றார்.

 

கோபிசாந்தா மனோரமாவானது

இவர் இளம்வயதிலேயே பாடுவதிலும், ஆடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவருடைய தாயாருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் படிப்பினைக் கைவிட்டார். பின் பள்ளத்தூரில் ஒரு செட்டியார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்.

அப்பொழுது அவர்கள் ஊரில் ஏகாதசிக்கு அந்தமான் காதலி என்ற நாடகத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். அந்த நாடகத்தில் பெண் வேடமிட்டு நடிக்க வந்தவருக்கு சரியாக பாடவரவில்லை.

இந்நிலையில் மனோரமாவை நடிக்க வைத்தனர். அந்த நாடத்தில் இவருடைய பாட்டையும், நடனத்தையும் அனைவரும் பாராட்டினர். இவ்வாறே இவருடைய கலைஉலகப்பயண‌ம் ஆரம்பமானது.

இந்நாடகத்தின் உதவி இயக்குநர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் கோபிசாந்தா என்ற இவருடைய பெயரை மனோரமா என்று மாற்றினர். மனோரமா என்ற பெயராலே இவர் நடிப்பாற்றல் மூலம் சாதனை சிகரத்தைத் தொட்டார்.

 

திரைப்படத்தில் மனோரமா

நாடகத்துறையில் நடிக்கத் தொடங்கிய மனோரமா நடிப்பாற்றல், பாடும்திறன், வசனஉச்சரிப்பு ஆகியவற்றின் காரணமாக அதில் வெற்றி பெறத் தொடங்கினார். வைரம் நாடக சபா, எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றம் ஆகியவைகளில் நடித்தார்.

முதன் முதலில் சிங்கள‌ மொழி படம் ஒன்றில் கதாநாயகிக்கு தோழியாக அறிமுகமானார். இந்நிலையில் இன்பவாழ்வு என்னும் படத்தில் நடிக்க ஜானகிராமன் என்பவரால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

பின் கவிஞர் கண்ணதாசனின் ஊமையன்கோட்டை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படமும் பாதியிலேயே நின்று போனது. இதனால் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளானார்.

பின் 1958-ல் கண்ணதாசன் இவரை மாலையிட்ட மங்கை படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகம் செய்தார். ஆனால் இதுவரை நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடித்திருக்காத நிலையில் அதனையும் சிறப்பாகவே செய்தார். பின் வெளிவந்த கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பாலும் பழமும், பார் மகளே பார், அன்பே வா, தில்லானா மோனாம்பாள், கலாட்டா கல்யாணம், பட்டிக்காடா பட்டணமா, எதிர்நீச்சல், காசேதான் கடவுளடா, நடிகன், சம்சாரம் அது மின்சாரம், வாழ்வே மாயம், அருணாச்சலம், திருமலை தென்குமரி, சின்னத்தம்பி, பாட்டி சொல்லைத் தட்டாதே, உன்னால் முடியும் தம்பி, அபூர்வ சகோதரர்கள், மன்னன், பங்காளி, ஜென்டில்மேன் போன்ற படங்கள் இவரின் வெற்றிப்படங்களாகும்.

 

பாடகியாக மனோரமா

இவர் பாடிய ‘வா வாத்தியாரே ஊட்டாண்ட’, ‘மெட்ராச‌ சுத்திப்பாக்கப் போறேன்’, ‘டில்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ போன்றவை என்றைக்கும் மறக்கமுடியாத பாடல்கள் ஆகும்.

இவர் முதன்முதலில் மகளே உன் சமத்து படத்தில் ‘தாத்தா தாத்தா பொடி கொடு’ என்ற திரைப்படப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுடன் இணைந்து முதலில் பாடினார்.

‘தங்கை யெனும் பாசக்கிளி’, ‘தெரியாதோ நோக்கு தெரியாதோ நோக்கு’ ‘பார்த்தாலே தெரியாதா’ ‘போடச் சொன்னா போட்டுக்கிறேன்’, ‘குத்துற குத்துல மொத்துற மொத்துல’ போன்றவை இவர் பாடிய மற்ற சில திரைப்படப்பாடல்கள் ஆகும். இவ்வாறாக இவர் மொத்தம் 90 பாடல்கள் பாடியுள்ளார்.

 

சொந்த வாழ்க்கை

இவர் 1964-ல் வைரம் நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ்.எம்.இராமநாதன் என்பவரை திருமணம் செய்தார். இத்தம்பதியினருக்கு பூபதி என்னும் மகன் உள்ளார். 1966-ல் தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று தனியாக மகனுடன் வசித்து வந்தார்.

 

மறைவு

மனோரமா தனது 78-வது வயதில் 10.10.2015 அன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

 

விருதுகளும் பெருமைகளும்

இவரின் கலைத்திறமையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதுதான பத்மஸ்ரீ விருதினை 2002-ல் வழங்கியது.

புதிய பாதை படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகை தேசிய விருது 1989-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

தென்னிந்திய பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பலவிருதுகளை இவர் வாங்கியுள்ளார்.

தனது நடிப்பாற்றலால் தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட மனோரமா அவர்கள் என்றும் நிலைத்து நிற்பார் என்று கூறினால் அது மிகையாகாது.

“நமது தமிழ்த் திரையுலகில் மற்ற மொழிகளில் இல்லாத வகையில் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றார்கள். இன்றைய அவசர உலகில் நாம் மன அழுத்தத்திலிருந்து விடுபட அவர்களை நல்ல வகையில் பயன்படுத்துவது அவசியம். நம் வாழ்வில் என்றும் நகைச்சுவை நீங்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.”

– ஒரு பேட்டியில் ஆச்சி மனோரமா சொன்னது

– வ.முனீஸ்வரன்