சாதி ஒழிப்பே சமூக விடுதலை!

சாதிகள் என்பது ஒவ்வொரு மக்களும் அவர்கள் செய்யக்கூடிய வேலையை வைத்து உருவாக்கப்பட்டதாகும்.

சாதிகள் என்பது வருணாசிரமக் கொள்கையின்படி நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அவை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகும்.

நமது இந்தியாவில் மட்டுமே சாதி ஓங்கி நின்று கொண்டிருக்கிறது.

மற்ற நாடுகளில் சாதிகளும் சாதிய கொடுமைகளும் அதிகமாக இல்லை என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

நமது இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் கடந்து விட்டன. நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது உண்மை இல்லை!

நமது நாட்டில் சாதிகள் ஒழிந்தால் மட்டுமே இந்த சமூகத்திற்கும் சமூகத்தில் உள்ள மக்களுக்கும் விடுதலைக் கிடைக்கும்.

சாதிகளை எந்த முறையில் ஒழித்தால் சமூகம் விடுதலை அடையும் என்பதனை பற்றி விரிவாய்க் காண்போம்.

சாதிச் சான்றிதழ் எதற்கு?

இன்று நம் நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் கூட மாணவர்களை நாம் சேர்க்கப் போகும் பொழுது விண்ணப்பப் படிவத்தில் சாதிக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை முழுவதுமாக நிரப்பினால் மட்டுமே மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் இடமும் இதர சலுகைகளும் கிடைக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் சலுகைகளை கொடுத்து விட்டு மற்ற மாணவர்களுக்குச் சலுகைகள் இல்லை என்னும் பட்சத்தில் அவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடுகள் உருவாகிறது.

சாதிய மோகம் இளமை வயதிலேயே தூண்டப்படுகிறது. சாதிச் சான்றிதழ் பள்ளி, கல்லூரிகளில் சேரும்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சாதிச் சான்றிதழ் எதற்காக என்று தெரியவில்லை.

“சாதிகள் இல்லையடி பாப்பா!
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!”

என்று மகாகவி பாரதியார் பாப்பா பாடலில் பாடியுள்ளார்.

பள்ளிகளில் பாடப்புத்தகத்தில் இந்த வரிகள் உள்ளது. சாதிச் சான்றிதழை வாங்கிவிட்டு அவர்களுக்கு இந்த பாடத்தினை நடத்திக் கொண்டிருப்பது முற்றிலும் முரண்பாடாக உள்ளது.

இந்தச் சாதிச் சான்றிதழை ஒழித்தால் மட்டுமே நமது சமூகம் விடுதலை அடையும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

சாதிப் பெயர்களுடன் பள்ளி, கல்லூரிகள்

இன்று நமது நாட்டில் பல்வேறு வகையான பள்ளி, கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சாதிப் பெயர்களுடன் சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி இருக்கக் கூடாது என அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.

சாதியக் கொடிகள் வேண்டாம்!

ஒவ்வொரு ஊர்களிலும் சாதிய அடிப்படையிலான சில கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் மற்ற சாதி அமைப்பினர் அவர்களை உயர்த்தியும் தாழ்த்தியும் பார்க்க நேரிடும்.

“தவளை தன் வாயால் கெடும்” என்பது பழமொழி. அதைப் போல நாமே எதற்காக சாதிய கொடிகளை பறக்கவிட்டு நம்முடைய சாதியை காட்ட வேண்டும்.

அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நாம் தான் சந்திக்க நேரிடும். இதனால் என்ன கிடைக்கப் போகிறது? ஆகையால் சாதியக் கொடிகளைப் பறக்க விட வேண்டாம்.

“சாதியக் கொடிகளை இறக்க வேண்டும்!

சமத்துவக் கொடிகளே பறக்க வேண்டும்!”

என்பது பொன்மொழி.

சாதிய அடிப்படையிலான கொடிகளை இறக்கிவிட்டு ஒருவருக்கொருவர் சமத்துவம் என்னும் கொடிகளை பறக்க விட்டால் நமது நாடு சமூக விடுதலை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைப் போராட்டத்தின் மாமனிதர்!

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தின் மையமாக அமைந்திருந்தது மகாதேவர் ஆலயம். அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட ஈழவர், புலையர்,தீயர் ஆகியோர் நடக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த சமூக அநீதிக்கு எதிராக டி.கே.மாதவன் முதன் முதலாக குரல் கொடுத்தார். 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது.

பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய வைக்கம் போராட்டம் வெகுவேகமாக ஒடுக்கப்பட்டும் வந்தது. அப்போதுதான் தமிழ்நாட்டு காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த தந்தைப் பெரியார் வைக்கம் சென்று போராட்டத்துக்குத் தலைமை ஏற்று போராட்டத்தை சிறப்பாக நடத்தி அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் தெருக்களில் நடந்து செல்ல வழிவகை செய்தார்.

இவ்வாறு நம் நாட்டில் இன்னும் சில இடங்களில் இந்த மாதிரியான ஒரு சில நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

அதனை தட்டி கேட்பதற்கும் இங்கு எதிர்த்து போராடுவதற்கும் மக்கள் தயங்குகின்றனர்.ஆகையால் நாமும் பெரியாரின் வழி இவ்வாறு போராடினால் நமது சமூகம் விடுதலை அடையும் என்பது முக்கியமான ஒரு செய்தியாகும்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்!

1923-ல் வா.வே.சுப்பிமணிய ஐயர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தமிழ் குருகுலம், பாரத்வாஜ ஆசிரமம் ஆகிய அமைப்புகளை தொடங்கினார்.

இந்த அமைப்புகள் 1924-ல் சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டன. சேரன்மாதேவி ஆசிரமத்தில் உள்ள குருகுலத்தில் எல்லா சாதி மாணவர்களும் கல்வி பயின்றார்கள்.

ஐயரின் மகன் வவேசு.கிருஷ்ணமூர்த்தியும் பிற மாணவர்களும் இணைந்து ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்கள்.

ஆனால் இரு பிராமண மாணவர்களுக்குத் தனியாக அங்கே உணவு பரிமாறப்பட்டது.

‘வாவில்லா குடும்பம்’ என்ற பிரபலமான வைதிக குடும்பத்தின் இரு மாணவர்கள் அவர்கள்.

ஆசிரமத்துக்கு நிதியுதவி செய்தவர்கள். ஆசாரம் கெட்டுப் போகலாகாது என்று அந்தக் குடும்பத்தினர் இட்ட நிபந்தனையை ஏற்றுத்தான் வ.வே.சு.ஐயர் அவர்களை சேர்த்துக்கொண்டார்.

அதற்கேற்ப அவர்களை மட்டும் தனியாக உணவருந்தச் செய்தார். ஆனால் அக்குருகுலத்தை நடத்த காங்கிரஸ் கட்சி நிதியுதவி செய்தது.

இச்சூழலில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருடைய மகன் சுந்தரம் சேரன்மாதேவி ஆசிரமத்தில் இரு பிராமண மாணவர்களுக்குத் தனிப்பந்தி போடப்படுவதாக ஈ.வே.ராமசாமிப் பெரியாரிடம் கூறினார். அப்போது

அதனை பெரியார் வா.வே.சு ஐயரிடம் “எல்லா மாணவர்களும் ஒற்றுமையாக அமர்ந்து உணவு அருந்த வேண்டும். எந்த ஒரு சாதிய பாகுபாடும் இருத்தல் கூடாது!” என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்.

அதற்கு அவர் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. ஆகையால் இந்த சம்பவத்தை பெரியார் பல கட்சி மேடைகளில் பேசினார். பின்பு சிறிது காலத்திற்குப் பிறகு மக்களால் சேரன்மாதேவி குருகுலம் மூடப்பட்டது.

இப்படி சாதிய பாகுபாடுகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அதனை நாமும் பெரியாரின் வழி நின்று ஒழித்தால் மட்டுமே நமது சமூகம் விடுதலை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னல்களைத் தாண்டி இறைவனைப் பார்த்தனர்!

பட்டியலின மக்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற ஒருநிலை ஒருகாலத்தில் இருந்தது. இதனை வழக்கறிஞர் வைத்தியநாத ஐயர் தலைமையில், நடைபெற்ற ஆலய பிரவேசத்துக்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறு அப்போது இருந்த முதலமைச்சர் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் கேட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட முத்துராமலிங்கத் தேவர் மதுரை முழுவதும் துண்டு பிரசுரங்கள் மூலம், “தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதர மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்வதைத் தடுத்தால், மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தில் அபிஷேகம் நடைபெறும்!” என்று எதிர்ப்பை காட்டி வந்த மேல் ஜாதியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதாவது எக்காரணம் கொண்டும் பட்டியலின மக்களின் ஆலய பிரவேசத்திற்கு பிரச்சனை கொடுக்காமல் ஒதுங்கி இருக்குமாறு துண்டு பிரசுரங்களில் தெரிவித்திருந்தார்.

மேலும், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்ய வரும் மக்களை, என்னுடைய சமுதாயத்து மக்கள் தூண்களாக நின்று பாதுகாப்பார்கள். அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை எனது சமுதாயம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்!”

என்று முத்துராமலிங்கத் தேவர் கூறினார். இப்படிப்பட்ட பல இன்னல்களைத் தாண்டி இறைவனைப் பார்க்கச் சென்றனர்.

“சாதி பார்க்கின்றவன் சண்டாளன்” என்கிறார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இப்படி சாதிய பாகுபாடு இல்லாத ஒரு தலைவரைச் சாதித் தலைவராக மாற்றி விட்டார்கள் மக்கள்.

இந்த மாதிரியான தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் செல்ல விடாமல் பல கொடுமைகள் நமது நாட்டில் இன்னும் ஒரு சில இடங்களில் நடந்து. கொண்டு தான் இருக்கிறது.

அந்த கொடுமைகளை நாம் முற்றிலுமாக களைந்தால் மட்டுமே நமது சமூகம் விடுதலை அடையும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகும்.

தீண்டாமைச் சுவர்

நமது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தீண்டாமைச் சுவர் என்பது இருந்தது. இது போன்று ஒரு சில ஊர்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

உயர் சாதி வகுப்பினர் இந்த சுவரை எழுப்பி தாழ்த்தப்பட்ட மக்களை அவர்கள் இருக்கும் வீட்டின் அருகில் கூட வரவிடாமல், பொதுப் பாதையில் நடக்க விடாமல் இப்படி ஒரு சுவரைக் கட்டி தீண்டாமைச் சுவர் என்னும் முறை அங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதனை முற்றிலுமாக உடைத்தால் மட்டுமே நமது சமூகம் விடுதலை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முடி வெட்டுவதில் கூட முரண்பாடு!

நமது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி ஊராட்சியின் அருகில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் உள்ள காலனியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி திருத்தம் செய்யப்படுவதில்லை என்னும் நிலை இருந்தது.

இதுபோன்று ஒரு சில இடங்களில் கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

முடி திருத்தம் செய்த பிறகு மற்றவர்களைப் போன்று இந்த தாழ்த்தப்பட்ட மக்களும் பணத்தைத் தான் கொடுக்கப் போகிறார்கள்.

அதில் என்ன சாதிப் பாகுபாடு இருக்கிறது என்பது ஒன்றும் புரியவில்லை? இப்படி முடி வெட்டுவதில் கூட முரண்பாடாகவே இருக்கின்றது.

இதனை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே நமது சமூகம் விடுதலை அடையும்.

தண்ணீர் எடுக்கத் தடை!

1927 ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி பம்பாய் மாகாணத்தில் உள்ள ரய்காட் மாவட்டத்தில் ‘மகத்’ என்னும் நகரில் அண்ணல் அம்பேத்கார் மகத் சத்தியாகிரகத்தை ஏற்படுத்தினார்.

ஏனென்றால் அங்குள்ள மகத் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு உயர் சாதி வகுப்பினர் இடையூறு செய்து தண்ணீரை எடுக்க விடாமல் செய்தனர்.

இதனை அறிந்த அம்பேத்கார் பல போராட்டங்களுக்குப் பிறகு அந்த குளத்தில் நீரை எடுத்து அருந்தினார். பின்பு தாழ்த்தப்பட்ட மக்களும் நீர் எடுப்பதற்கு உள்ள தடையை உடைத்தெறிந்தார்.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் மகத் குளத்தில் நீர் எடுத்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டது என்று அந்த உயர் சாதி வகுப்பினர் 1008 குடங்களில் நீரை எடுத்து வெளியே ஊற்றி தண்ணீரை வீணாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்’ என்று கூறியவர் நமது சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் ஆவார்.

இதுபோன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுப்பதற்கு சில இடங்களில் இன்றும் தடை இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இது போன்ற தடைகளை உடைத்தெறிந்தால் மட்டுமே நமது சமூகம் விடுதலை அடையும் என்பது முக்கியமான நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தனிச்சுடுகாடு பொதுச்சுடுகாடு ஆகவேண்டும்!

நமது நாட்டில் பல கிராமங்களிலும் நகரங்களிலும் கூட உயர் சாதி வகுப்பினர்களுக்கு என்று ஒரு சுடுகாடும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று தனிச்சுடுகாடும் இருக்கிறது.

இப்படி தனிச் சுடுகாடு இல்லாமல் எல்லா இன மக்களுக்கும் ஒரு பொதுச் சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்தால் மட்டுமே நமது சமூகம் விடுதலை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதியை ஒழித்த சரியான திட்டம்!

நமது நாட்டில் முன்பு பிராமணர்கள் மட்டுமே கோவிலில் அர்ச்சகர்களாக பணி செய்து வந்தார்கள்.

இதனால் உயர்ந்த சாதி வகுப்பினர் மட்டுமே அர்ச்சகராக பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தது.

‘நபடேல் சமஸ்கிருதம் வாணீம்’ சூத்திரன் சமஸ்கிருதம் படிக்க கூடாது! என்பது இதன் பொருள்.

ஆனால் இப்பொழுது அனைத்து இனமக்களும் “அனைவரும் அர்ச்சகராகலாம்” என்ற திட்டத்தின் கீழ் சமஸ்கிருதங்களில் மட்டுமல்லாமல், தமிழிலும் அர்ச்சனைகள் செய்வதற்கு தகுந்த படிப்பினை படித்துவிட்டு கோயில்களில் அர்ச்சகராக பணியாற்றி வருகின்றனர்.

இப்போது “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்”என்ற திட்டத்தினை நமது தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

இதுவே சாதியை ஒழிப்பதற்குச் சரியான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட திட்டங்கள் இருந்தால் மட்டுமே சாதியை ஒழித்து, நமது சமூகம் விடுதலை அடையும் என்பது நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்வேண்டும்.

நமது நாட்டில் சாதிகளால் மட்டுமே மனிதர்கள் மனிதர்களாக இல்லாமல் மிருகங்களாக மாறிவிடுகின்றனர்.

“சாகப் பிறந்த உனக்கு

சாதி எதற்கு?”

என்பது பொன்மொழியாகும்.

நாம் அனைவரும் ஆறறிவு படைத்த மனிதர்கள். நாம் சாதி பார்க்கின்றோம்.

ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் சாதி பார்ப்பதில்லை. ஒற்றுமையாக வாழ்கின்றன.

விலங்குகளிடம் ஜாதி இல்லை. ஆனால் மனிதர்களிடம் மட்டுமே சாதி இருக்கிறது.

சாதி சான்றிதழ்களை தடை செய்வதாலும், சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிப்பதாலும், ஜாதி பெயருடன் விளங்கும் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாலும், தீண்டாமைச் சுவர் இடிக்கப்படுவதாலும், பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுப்பதை ஆதரிப்பதாலும், எல்லா இனமக்களுக்கும் முடி திருத்தம் செய்வதை ஆதரிப்பதாலும், அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை ஆதரிப்பதாலும், ஆணவக் கொலைகள் செய்பவன் சட்டத்தின் முன் அழிக்கப்படுவதாலும் மட்டுமே நமது சமூகம் விடுதலை அடையும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று ஒரு அநீதி ஏற்பட்டால் அதனை எதிர்த்து ஈ.வே.ரா.பெரியார், பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர், அண்ணல் அம்பேத்கர், மகாகவி பாரதியார் போன்ற எத்தனையோ தலைவர்கள் சாதியை எதிர்த்து போராடினார்கள்.

சாதியை ஒழிக்க வந்த சரித்திர நாயகர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களின் மறைவிற்குப் பிறகு சாதி என்பது முற்றிலுமாக ஒழியாமல் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.

நாம் இவர்களை நம் வாழ்வில் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு சாதி இல்லாமலும் சாதிய பாகுபாடு இல்லாமலும் வாழ்வோம்!

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) இரண்டாமாண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி:  9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.