சாதி – சில சிந்தனைகள்

சாதி - சில சிந்தனைகள்

சாதி என்பது ஓர் இந்தியனின் முக்கியமான அடையாளம். நம்முடைய சிந்தனையில் சாதி என்பது பிரிக்க முடியாதது. நாம் சாதியைக் கடந்து போக நினைத்தாலும், இந்த சமூகம் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு விடாது.

அடையாளம் என்பதைத் தாண்டி ஆதாரம் என்ற நிலையை நோக்கி சாதி நகர்கிறது. சாதியை நமக்கான ஒரு பலம் பொருந்திய பின்ணணியாக நாம் பார்க்கிறோம்; நம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதனை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

சாதியை விட்டு விட்டு நம்மால் யோசிக்க முடியவில்லை.

ஒருபுறம் நல்ல கல்வி பெற்ற, பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் சாதியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலை கொஞ்சம் தோன்றுகிறது.

மறுபுறம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் உருவாக்கும் சாதிப் பற்று, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள அதிகம் படிக்காத, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மிக எளிதாக சாதி வெறியர்களாக மாற்றி விடுகிறது.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ சாதி ஒரு மறுக்க முடியாத சக்தி. சாதி பற்றிய ஒரு தெளிவு இருந்தால்தான் இந்தியாவில் பொதுவாழ்வில் நாம் ஏதேனும் சிறிதளவு நல்ல வழியில் பங்காற்ற முடியும்.

அத்தகைய ஒரு தெளிவைத் தன் இலக்கிய ஆராய்ச்சியின் மூலம் நமக்கு வழங்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

சாதி எனும் நோய்

வாழும் மாந்தர்க்கு எத்தனையோ நோய்கள் வந்து வாட்டுகின்றன; சிகிச்சையின் பலனாய் தீர்வும் காணப்படுகின்றன. தீர்வே காண முடியாத நோய்களும் உண்டு.

அவற்றுள் தனி ஒருவனை மட்டும் தாக்காது, ஒட்டுமொத்த சமூகத்தையும் தாக்கும் பெரு நோய் ஒன்று உள்ளது என்றால், அது சாதி பற்றிய நோயாகும்.

மாந்தர்க்குள் ஏற்றத்தாழ்வு பிறப்பால், நிறத்தால், பணத்தால், ஞானத்தால் மற்றும் குணத்தால் உணரப்படுகின்றது.

இவற்றில் சிலவற்றை மனிதன் தன் சுயநலத்தின்பால் தனக்கு ஏற்றவாறு பயன்படுத்துகின்றான். இச்செயலுக்கு சாதகமாக தக்க வாதங்களை உருவாக்கிக் கொண்டான்.

விலங்கு என பொதுவாக நாம் குறிப்பிடுகின்றோம். ஆனால் அவற்றுள் விதவிதமான வகைகள் உண்டு.

அதுபோன்றே பறவைகள் என பொதுவில் சொன்னாலும் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால் பொதுவாகத்தான் இவைகளைக் குறிப்பிடுகின்றோம்.

மனிதர்கள் என்று நாம் குறிப்பிடும் போது ஆண், பெண் என இருவகையன்றி வேறில்லை.

இவர்களில் நல்லவன், கெட்டவன், கேட்பவன், கொடுப்பவன், உழைத்து உண்பவன், உழைக்காமல் உண்பவன், பிறர்க்கு உழைப்பவன், தனக்கு மட்டும் உழைப்பவன் என வித்தியாசமாக இருப்பார்கள்.

இவற்றையெல்லாம் யாரும் பிரிவுகளாகக் கொள்வார் இல்லை.

எல்லோரையும் போலவே தாயின் வயிற்றில் பிறந்தாலும், மனிதர்களை வெவ்வேறு விதங்களில் பிரித்துப் பார்க்கும் வழக்கம், எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

மனிதன் தன் சுயநலத்தின்பால் ஆசைக் கொண்ட போதுதான். தன் சுய நல‌ எண்ணங்களை புகுத்தி மெல்ல மெல்ல ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் கெடுத்தான்.

விலங்குகளும் பறவைகளும் தன் இயல்பினின்று நிலை பிறழாது வாழும். ஆனால் சிந்திக்கத் தெரிந்த மனிதன் பகுத்து உணராது, சிந்தனையை எதிர்மறையில் செலுத்துவதால் இச்சமூகத்திற்கு உண்டான தீமை அளவிட முடியாத‌து.

பறவைக்கும், விலங்கிற்கும் பொதுக் குணங்கள் இவை இவையென இருக்கும் என்று ஓரளவிற்கு உணரமுடியும். ஆனால் மனிதரைப்பற்றி ஊகிப்பது மிகமிகக் கடினம்.

தேளைக் கண்டால் அதன் கொடுக்கில் நஞ்சு என அறிவோம். நாகத்தைக் கண்டால் அதன் தலையில் நஞ்சு என்று அறிவோம். ஆனால் மனிதருக்கு உடம்பெல்லாம் நஞ்சிருக்கும்.

காரணம் அவன் செய்கைகள் அனைத்திலும் பெரும்பாலும் ஒரு காரணத்தை கொண்டிருப்பான்.

பிறப்பும் சாதியும்

சனாதன தர்மத்தில் முன் வினை நம்மைத் தொடரும்; அதற்கேற்ப நம் பிறப்பு அமையும் என்பது நம்பிக்கை.

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லாதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு

– நாலடியார்

(நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இப்பாடலின் பொருளைக் கீழே காண்போம்.)

பெரும் பசுக்கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் பசுவின் கன்றானது தன் தாயை தேடிக் கண்டறியும்.

அதுபோல் நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் இப்பிறவியிலேயே தீர்ந்துவிடும் என்று எண்ண வேண்டாம் . மறுபிறவியிலும் நாம் செய்த வினைகள் நம்மை கண்டறிந்து வந்தடையும்.

இவற்றையெல்லாம் நாம் சொல்லக் காரணம் அவரவர் செய்த வினையினால்தான் அதற்கேற்ப பிறப்பமையும். அவன் கொண்ட குணத்தினால் பிரிக்கப்படுகின்றான்.

எந்த குடியில் பிறந்தாலும், நல்ல கல்வியும் ஞானமும் உடையவர் போற்றத் தக்கவரே ஆவார்; மற்றவர் இகழத் தக்கவரே ஆவார்.

களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமிதக் கொள்வர்

கடைநிலத் தோராயினும் கற்றறிந் தோரைத்

தலை நிலத்து வைக்கப் படும்

– நாலடியார்

களர் நிலத்தில் உண்டாகும் உப்பை, சான்றோர் நன்செய் விளைநிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாகக் கொள்வர். அதுபோல் எக்குடியில் பிறந்தாலும், கற்றறிந்தோரை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைப்பார்கள்.

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்

சொல்லளவு அல்லால் பொருளில்லை ‍‍ தொல் சிறப்பின்

ஒண்பொருள் ஒன்றோதவம் கல்வி ஆள்வினை

என்றிவற்றான் ஆகும் குலம்

– நாலடியார்

நல்ல குலம், தீய குலம் என்று சொல்வதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் சொல்வதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான வினையினால் பெற்ற நற்பொருள், தவம், கல்வி மற்றும் முயற்சி இவற்றினால்தான் மனிதன் குறிக்கப்படுவான்.

இக்கருத்தையே திருவள்ளுவர் திருக்குறளில் சொல்கிறார்.

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

– திருக்குறள்

எல்லா மனிதர்களும் பிறப்பினால் ஒரே மாதிரியானவர்களே. ஆனால் அவரவர்கள் செய்யும் வேலைகள் வேறுபடுவதனால் சிறப்புகள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.

முதுமொழிக் காஞ்சி என்னும் பழைய நூல் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப

கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும் ஒருவன் சிறந்த குடியில் பிறந்தமையை, அவனுக்குள்ள அருள் இயல்பினாலேயே அறிந்து கொள்வர்.

மணியான கருத்துக்களைச் சொல்லும் நான்மணிக்கடிகை என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும் மான் வயிற்றின்

ஒள்ளரிதாரம் பிறக்கும் பெரிய கடலுள்

பல்விளைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

நல்லாள் பிறக்குங் குடி

– நான்மணிக்கடிகை

கள்ளிச்செடிகளின் நடுவே அகில் மரம் தோன்றும். மானின் வயிற்றில் பூசிக்கொள்ளும் வாசனையுள்ள கஸ்தூரி தோன்றும். கடலுள் முத்துத் தோன்றும்.

அதாவது ஒருவனுடைய மதிப்பிற்கும் மதிப்பின்மைக்கும் அவனவன் பெற்ற அறிவும் ஒழுக்கமுமே காரணமாகும். பிறப்பைக் கொண்டு உயர்வாகவோ தாழ்வாகவோ எண்ணுதல் கூடாது.

சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்குணகர்ம விபாக ச

தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்.

நான்கு வகைகளாக தத்தம் முன் வினைகளுக்கேற்ப அக்குணங்களுடன் மனிதர்கள் இறைவனால் படைக்கப்படுகின்றனர். அதாவது ஒரே மாதிரியாகப் படைக்கப்பட்டாலும் ஜீவர்கள் முன் வினைப் பயனை அனுபவிக்க வேண்டும் என்பதே விதி.

நான்கு பிரிவினராகக் கூறப்படும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் போன்றில் யாரும் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்பதில்லை.

இந்த பிரிவுகளில் ஒவ்வொருவரும் இன்றியமையாதவரே. இவர்களுள் ஏற்றத் தாழ்வு உண்டாக்கிக் கொண்டது நம் சுயநலத்தால்தான். உண்மை அதுவன்று.

பாரதியார் சாதிக் கொடுமை கண்டு பொங்குகிறார்.

வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதிநிலை தவறாமல் தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி, பிற

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்ட ரென்றோர் வகுப்பில்லை தொழில்

சோம்பலைப்போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த

நான்கில் ஒன்று குறைந்தால்

வேலைத் தவறிச் சிதைந்தே செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி

நாலுகுலங்கள் அமைத்தான் அதை

நாசமுறப் புரிந்தனர் மூடர்.

புறப்பொருள் வெண்பாமாலை என்ன சொல்கிறது?

மூவரு நெஞ்சமர முற்றி யவரவர்

ஏவலெதிர்கொண்டு மீண்டுரையான்- ஏவல்

வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்

உழுவான் உலகுக் குயிர்

அந்தணர்க்கும் அரசர்க்கும் வணிகனுக்கும் உணவளிக்கும் உழவரே உயிர் போன்றவராவார் என்று சொல்கிறது.

மாந்தர்கள் சத்வ குணம், இராஜச குணம் மற்றும் தாமஸ குணம் என்ற முக்க்குணங்களின் அடிப்படையில்தான் வேறுபடுகின்றார்கள்.

அடிப்படையில் ஆசிரியர், அரசர், வணிகர் ,வேளாளர் என நான்கு பிரிவுகள்தான் சொல்லப்பட்டதே தவிர, இங்கு உள்ளது போல் நூற்றுக்கணக்கான ஜாதிகள் நமக்கு நாமே உண்டாக்கிக் கொண்டதே ஆகும்.

அந்த நான்கு பிரிவுகளும் கட்டுக்கோப்பான நாகரீக சமூக அமைப்பாக இருந்ததே அல்லாது, வேற்றுமைக்காகவும் தகுதிக்காகவும் இல்லை. இதை உணராது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட சிக்கலான வலையே ஜாதிகள் என்பது.

மனு தர்ம சாத்திரம் சாதிகள் பற்றி என்ன சொல்கிறது?

சூத்ரோ ப்ராம்மனதாம்மேதி ப்ராம்மணஸ்சேதி சூத்ரதாம்

ஸ்த்ரியாஜ் ஜாதமேவந்து வித்யாத் வைஸ்யாத் ததைவச

சூத்திரன் அந்தணனாவான். அந்தணன் சூத்திரனாவான். மற்ற பிரிவினரும் அவ்வாறே தத்தம் செயலுக்கேற்ப மாறுபடுவர் என்றால், பிறப்பால் அனைவரும் ஒன்றே.

நவிஸேஷோஸ்தி வர்ணானாம் ஸர்வப்ராஹ்ம மிதம்ஜகத்

ப்ராஹ்மணா பூர்வஸ்ருஷ்டம் ஹி கர்மபிர் வர்ணதாம்கதம்

(சாந்திபர்வம் பாரதம் 188 அத்)

ஜாதியினால் ஒன்றுமில்லை, ஆதியில் இந்த உலகமெல்லாம் ப்ரம்ம்மாகவே இருந்தது. செயல்களினால் ஜாதி பேதம் உண்டாயிற்று என்று மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் மகாபாரதத்திலும் மஹேஸ்வரி சம்வாதத்திலும்

ஏபிஸ்து கர்நபிர்தேவிபைரா சரிதைஸ்ததா ஸூத்ரோ

ப்ரஹ்மணதாம யாதி வைஸ்ய க்ஷத்ரியதாம் வ்ரஜேத்………..

………..நயோநிர்ணாபி ஸம்ஸ்காரோ நஸ்ருதம் நச ஸந்த்தி கரணாநி

த்வஜத்வஸ்ய வ்ருத்தமேவது காரணம் ஸர்வோயம் ப்ராம்மணோ

லோகே வ்ருத்தேநச விதீயதே வ்ருத்தேஸ்திதஸ்து ஸுத்ரரபி

ப்ராம்மணத்வம் நிசஸ்யதி.)

வேதம் ஓதுவதோ உபநயணம் இருப்பதாலோ ஒருவன் அந்தணனாகன்; நல்ல செய்கைகளினால்தான் அந்தணனாவான்.

(எடுத்துக்காட்டு ஜீவப்ரம்மைக்ய வேதாந்த ரஹஸ்யம்)

புறநானூற்றில்

“ஆன்ற வேள்வி அடங்கிய கொள்கை

நான்மறை முதல்வர்”

என்று வேதம் ஓதுதல் ஐம்புலனையும் அடக்கியவரை அந்தணர் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

மகாபாரத்த்தில் தருமனுக்கு வைசம்பாயணர் சொல்லுகின்றார்.

தர்மராஜனே! ஜாதியினால் யாரும் அந்தணனாக ஆகமாட்டான். செயலினால் அந்தணனாவான். நல்ல செயலுள்ள ஒருவன் எங்கு பிறந்திருந்தாலும் அவன் அந்தணனாவான்.

இவ்வுலகெல்லாம் ஒரே ஜாதியாயிருந்தது. செயல்களினால் பேதங்கள் உருவாக்கப்பட்டது. மனிதர்கள் யாவரும் தாயின் கர்ப்பத்திலிருந்து பிறந்தவர்களேயாவர்.

நற்செயல் ஒழுக்கம் யாருக்கு உண்டோ அவன் எந்த பிரிவினில் பிறந்திருந்தலும் அவன் அந்தணன் ஆவான். அந்தணன் என்று சொல்லிக் கொள்பவன் ஒழுக்கம் இல்லாதவனாக இருந்தால் இழிந்தவனாவான். தருமனே! ஜாதியினால் ஒன்றுமில்லை; நல்ல குணங்களே மங்கல‌மானது.

மகாபாரதத்தில் கர்ணன் அரசனல்லன்; ஆகையால் அவன் சத்திரியன் இல்லை என்ற விவாதம் வந்தபோது துரியோதனன் கர்ணனை அங்க தேசத்திற்கு அரசனாக்கி சத்திரியனாக்கி விட்டான்.

இதிலிருந்து நாம் அறிவது என்ன? அவரவர் தத்தம் செயல்களினாலேயே பார்க்கப்பட்டார்கள். இதுபோன்றே அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டதுதான்.

“அரசனது குமாரனோடு தேர்பாகன் மகன் விவாதம் செய்வதற்கு தகாது” என்று கிருபர் சொல்லுகின்றார்.

அப்போது துரியோதனன் இவ்வாறு சொல்கிறான்.

கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை

உற்றவர்க்கும் வீரர் என்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக்

கொற்றவர்க்கும் உண்மையான கோதில் ஞான சரிதராம்

நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால்

படித்தவர்க்கும், அழகு நிறைந்த கன்னியர்க்கும், தரும குணம் உள்ளவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், தவம் செய்யும் முனிவர்களுக்கும் சாதி ஒன்றே. அதில் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு இல்லை என்று கூறுகின்றான்.

அரி பிறந்தது அன்று தூணில் அரணும் வேயில் ஆயினான்

பரவை உண்ட முனியும் இப்பரத்துவாசன் மைந்தனும்

ஒருவயின்கண் முன் பிந்த்து ஒண்சரத்தின் அல்லவோ

அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே

முற்காலத்தில் அரியும் அவதரித்தது தூணில்தான். அரனும் பிறந்தது மூங்கிலில். அகத்தியரும் துரோணரும் தோன்றியது கும்பத்தில்தான். முருகனும் கிருபரும் தோன்றியது நாணலில்தான் என்று பிறப்பினால் ஒன்றுமில்லை என்று உணர்த்துகின்றான்.

வேதத்தை தொகுத்தளித்து வேத வியாசர் என்று போற்றப்படும் வியாசர், பராசாரருக்கும் மீனவப் பெண்ணிற்கும் பிறந்தவர். ஆனாலும் தான் கற்ற கல்வியால் குருவானவர்க்கு எல்லாம் குருவாகப் போற்றப்படுகின்றார்.

விதுரரும் பணிப்பெண்ணிடம் பிறந்தவர். ஆனாலும், தான் கற்ற தர்ம நெறிகளால் அமைச்சரானார். அவர்தம் கொள்கைகள் விதுர நீதி என்று போற்றப்படுகின்றது.

சகோதரர்கள் ஐந்து பேரானோம்

இராமன் காட்டிற்கு செல்லும்போது கங்கையை கடக்க, குகனின் ஓடத்தில் செல்லுகின்றான். குகனுடைய பக்தியின்பால் ஆட்கொள்ளப்பட்டு, “தோழன் நீ எனக்கு; உன்னோடு சகோதரர்கள் ஐந்து பேரானோம்” என்று கூறுகின்றார்.

“முன்புளெ மொரு நால்வே முடிவுள தெனவுன்னா

அன்புள வினி நாமோ ரைவர்க ளுளரானோம்” என்கிறார் கம்பர்

” ஏழை ஏதலன் கீழ்மகனென்னாது இரங்கி மற்றவர்க்கு இன்னருள் சுரந்து

மாழைமான் மட நோக்கி உன்தோழி உம்பி எம்பினெறொழிந்திலை உகந்து

தோழன் நீ எனக்கு இங்கொழி என்ற சொற்கள் வந்து” என்கிறார் திருமங்கையாழ்வார்.

இங்கு குகன் பிறப்பால் யாராயிருந்தாலும் பக்தி குணத்தினால் இராமபிரானால் அருள் பெறுகின்றான்.

மனிதன் மட்டுமல்ல, அனுமனையும் விலங்கென நினையாது தன்னோடு ஒரே இலையில் உண்ண வைக்கின்றார் இராமபிரான்.

“வாதமாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி என்றொழிந்திலை உகந்து

காதலாதரம் கடலினும் பெருகச்செய் தகவினுக்கு இல்லை கைம்மாறென்று

கோதில் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நானென்ற ஒண்பொருள்”

இங்கு மனிதனுக்கும் விலங்கிற்கும் நற்குணமிருந்தால் வேறுபாடில்லையென உணர்த்துகின்றார் திருமங்கையாழ்வார்.

இவைகளினால் பிறப்பால் பேதமில்லை என நமக்கு உணர்த்தப்படுகின்றது.

ஆதிசங்கர‌ர் ஒருசமயம் எதிர்பட்ட ஒருவரை பிறப்பினைக் கொண்டு விலகிச் செல்லுமாறு கூறினார்.

அப்போது எதிர்ப்பட்டவர், “ஐயா! அன்ன விகாரமாகிய உன் சரீரத்தை விட்டு, அன்ன விகாரமாகிய என் சரீரத்தை விலகும் படி சொல்லுகின்றீரா?

உன்னுள் இருக்கும் ஆத்மாவை விட்டு என்னுள் இருக்கும் ஆத்மாவை விலகும்படி சொல்லுகின்றீரா? உன் உடல் எப்படியோ என் உடலும் அப்படியே.

இவ்வுலகிலெல்லாம் இறைவன் வியாபித்திருக்கின்றான். ஒரே மாதிரியான சரீரத்தை குறித்து அபிமானம் வைக்கலாகாது. உன் உடலிலும் என் உடலிலும் மற்ற யாவற்றிலும் இறைவன் ஒரே மாதிரியாக இருக்கின்றான்.” என்றார்.

சாதி பற்றிய உயர்ந்தோர் பலரின் சிந்தனைகளை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.

நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்!

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 94444104

Comments

“சாதி – சில சிந்தனைகள்” மீது ஒரு மறுமொழி

  1. பாரதிசந்திரன்

    ஆழ்மான கட்டுரை வடிவம். அற்புதம். ஆய்வு தொடர்க

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.