சாத்துக்குடி என்பது சிட்ரஸ் வகையைச் சேர்ந்த அமிலத் தன்மை இல்லாத பழமாகும். இது ஸ்வீட் லைம் என்று ஆங்கிலத்திலும் மொசாம்பி என்று இந்தியிலும் அழைக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு எலுமிச்சை போன்றே இருந்தாலும் சாத்துக்குடி தனித்துவமான இனிப்புச் சுவை எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.
கோடையில் சாத்துக்குடி பழத்தைச் சாப்பிட்டவுடன் தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றதை பலரும் உணர்ந்திருப்பீர்கள்.
இப்பழத்தினை தோல் நீக்கி மெதுவாக சுவைத்தோ அல்லது சாறு பிழிந்து பச்சை கலந்த மஞ்சள் நிறப் பழரசமாகவோ அருந்தலாம். நீங்கள் களைத்து சோர்வாக உணரும்போது இப்பழத்தினை உண்டு சுறுசுறுப்படையலாம்.
இப்பழவகை வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பழத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும்.
இப்பழமானது 25 அடி உயரம்வரை வளரும் மரத்தில் இருந்து பெறப்படுகிறது. மரமானது பயிர் செய்து 5 முதல் 7 வருடங்களில் பலன் கொடுக்கத் தொடங்கும். பயிர் செய்து 10 முதல் 20 வருடங்களில் அதிக அளவு மகசூலினைத் தருகிறது.
இப்பழத்தின் மேற்புறத்தோலானது பச்சை கலந்த மஞ்சள் வண்ணத்தில் காணப்படுகிறது. இப்பழமானது வட்ட அல்லது நீள்வட்ட வடிவில் காணப்படுகிறது.
உள்ளே வெள்ளை வடிவ நார்பகுதியால் போர்த்தப்பட்டிருக்கும். அதனுள்ளே பழமானது கூழ் வடிவ சதையுடன் சுளைகளாகக் காணப்படுகிறது.
இப்பழமானது இந்தியாவில் ஜுலை முதல் ஆகஸ்ட் வரையிலும் நவம்பர் முதல் மார்ச் வரையில் அதிக அளவு கிடைக்கிறது. இப்பழமானது நேரடியாக, பழரசமாக, ஜாம், ஊறுகாய், மிட்டாய் வடிவிலும் உண்ணப்படுகின்றது.
மருத்துவப் பண்புகள்
இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்துகள் மிகுந்துள்ளன. இப்பழத்தில் குளோரஃபில்கள், ஃபிளவனாய்டுகள், கரோடினாய்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.
கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புகள் அதிகளவு உள்ளன. இப்பழத்தில் நீர்சத்து மிகுந்து காணப்படுகிறது.
நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்சினைக்கு
நீர்க்கடுப்பினை சரிசெய்யத் தேவையான விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் சாத்துக்குடியில் அதிக அளவு உள்ளன. அவை நீர்க்கடுப்பினை சரிசெய்யவும், நீர்கடுப்பு வராமல் தடுக்கவும் செய்கின்றன.
சாத்துக்குடியில் அதிக அளவு உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் நச்சுப் பொருட்கள் உருவாகாமல் தடுக்கின்றது. மேலும் சிறுநீர்பையில் ஏற்படும் தொற்று நோயையும் சரிசெய்கிறது.
நோய்தடுப்பாற்றலை வழங்குதல்
சாத்துக்குடியில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதனால் இப்பழத்தினை உண்ணும் போது சளி மற்றும் புளு தொற்றுவிலிருந்து இப்பழம் நம்மைப் பாதுகாக்கிறது.
கீழ்வாதத்தைத் தடுத்தல்
விட்டமின் சி-யானது திசுக்களின் அழற்சியால் ஏற்படும் வீக்கம் மற்றும் சேதத்தினைச் சரிசெய்கிறது. சாத்துக்குடியை உண்ணும் போது அதில் உள்ள விட்டமின் சி திசுக்களின் அழற்சியால் ஏற்படும் கீழ்வாதம் மற்றும் முடக்கு வாதத்தினை தடுக்கிறது.
உடல் எடை குறைப்பிற்கு
சாத்துக்குடி உண்ணுபவரின் பசியைப் போக்குவதோடு உடலுக்கு ஆற்றலையும் கொடுக்கிறது. மீடியம் சைஸ் சாத்துக்குடி உண்பவருக்கு 86 கலோரிகளைத் தருகிறது.
அத்துடன் இப்பழத்தில் உள்ள கூழ்வடிவ நீர்சத்து வயிறு நிரம்பிய உணர்வினைத் தருகிறது. இப்பழத்தினை உண்ணுவதால் குறைவான கலோரியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுவதால் உடல் எடை குறைகிறது.
மஞ்சள் காமலைக்கு
கல்லீரலைப் பாதிக்கும் நோயான மஞ்சள் காமாலைக்கு மருத்துவர்கள் இப்பழத்தினை மட்டுமே உண்ண அனுமதிக்கிறார்கள்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பவர்கள் இப்பழத்தினை உண்ணும்போது செரிமானம் எளிதில் ஆவதுடன் புத்துணர்ச்சியுடன் சீரான கல்லீரல் செயல்பாட்டினையும் பெறுகிறார்கள். மேலும் இப்பழம் மஞ்சள் காமாலை நோயால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் வாந்தியைக் குணப்படுத்துகிறது.
ஸ்கர்வி நோயைக் குணமாக்க
ஸ்கர்வி என்பது விட்டமின்சி பற்றாக்குறையால் ஏற்படும் நோய் ஆகும். இந்நோய் ஏற்படும்போது பல் ஈறுகளில் வீக்கம், ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல், வாய் மற்றும் நாக்குகளில் புண்கள் உண்டாகுதல் போன்றவை ஏற்படுகின்றன.
இப்பழம் ஸ்கர்வி நோய்க்கு மிகச்சரியான மருந்தாகும். சாத்துக்குடி நம் அன்றாட விட்டமின் சி தேவையில் 60 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. மேலும் 100 மில்லி கிராம் சாத்துக்குடியில் 50 மில்லி கிராம் விட்டமின் சி உள்ளது.
செரிமான பிரச்சினைக்கு
செரிமானமின்மை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சாத்துக்குடியை அப்படியே சாப்பிட பிரச்சினைகள் சரியாகும். தனிப்பட்ட சுவையினை உடைய இப்பழத்தினை உண்ணும்போது செரிமானத்திற்கு காரணமான உமிழ்நீர் சுரப்பினை அதிகரித்து உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.
இப்பழத்தில் உள்ள பிளவனாய்டுகள் பித்தநீரை அதிகமாக சுரக்கத் தூண்டுகிறது. இப்பித்தநீர் இரைப்பை அமிலத்திற்கு சமமாகி செரிமானம் நன்கு நடைபெறுகிறது.
மேலும் இதில் உள்ள பிளவனாய்டுகள் அல்சர் நோயைக் குணப்படுத்துகின்றன. சாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் வயிற்றுப்போக்கினைச் சரிசெய்கிறது.
கான்சரை தடுக்க
இப்பழத்தில் உள்ள லிமோனாய்டுகள் பல்வேறு வகையான கான்சர்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. லிமோனாய்டுகள் எளிதில் செரிமானமாகக்கூடிய குளுக்கோசுடன் இணைந்து காணப்படுகின்றன.
கேசம் மற்றும் சருமப் பராமரிப்பிற்கு
கேசம் வலுப்பெற மற்றும் பொடுகு பிரச்சினைகளுக்கு தயார் செய்யப்படும் பொருட்களில் சாத்துக்குடி பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி சரும பளபளப்பிற்கு, சரும மேம்பாட்டிற்கு, முகப்பருப்பிரச்சினைக்கு, சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகிறது. எனவே சாத்துக்குடியை உண்டு சருமம் மற்றும் கேசத்தைப் பாதுகாக்கலாம்.
சாத்துக்குடியை வாங்கும் முறை
சாத்துக்குடியை மற்ற பழங்களைப் போல மரத்திலிருந்து பறித்து பழுக்க வைக்க இயலாது. மரத்திலேயே பழுத்த பின்பே இதனை பறிக்க வேண்டும்.
சாத்துக்குடியை வாங்கும் போது பழத்தின் மேற்புறத் தோலை நகத்தால் அழுத்தினால் எண்ணெய் போன்ற திரவம் நகத்தில்பட்டால் அப்பழம் நன்கு பழுத்துள்ளது என்பதனை அறியலாம்.
சாத்துக்குடியை அழுத்தும்போது மென்மையாகவும், கையில் எடுத்தால் கனமாக இருக்க வேண்டும். வெளிப்புறத்தோல் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். பழத்திலிருந்து வாசனை வர வேண்டும்.
சாத்துக்குடியை அறையின் வெப்பநிலையில் வைத்து இருவாரங்கள் வரை பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியில் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
பழச்சாற்றினை குளிர்பதனப் பெட்டியில் வைத்து ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் இப்பழம் மனித உடல் கால்சியத்தை உட்கிரகிப்பதை தடை செய்கிறது.
இப்பழத்தில் ஆக்ஸலேட் என்னும் பொருள் உள்ளதால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்பையில் பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு சாத்துக்குடியைப் பயன்படுத்தவும்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சாத்துக்குடியை உண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!