சாத்தூர் திருநெல்வேலி மதுரை நெடுஞ்சாலையில் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. கி.பி. 825-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘இருஞ்சோழ நாட்டுச் சாத்தனூர்’ என்று குறிப்பிடக் காணலாம். சாத்தன் கோயிலை மையாக வைத்து ஊர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும் எனலாம்.
மேலும் இக்கால கட்டத்தில் களக்குடி நாட்டைச் சேர்ந்த பாண்டிய அதிகாரி சாத்தன் மாறன், சாத்தன் எயினன், சாத்தன் கணபதி, சாத்தன் கொற்றி, சாத்தன்காரி, எட்டி சாத்தன் போன்றவர்கள் இருந்துள்ளார்கள். இவர்கள் காலத்தில் இவ்வூர் உருவாக்கப் பெற்று சாத்தனூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.
சாத்தூர் மடைக்கல்வெட்டு இவ்வூரின் பழமையை எடுத்துக்கபட்டுகிறது. நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சாத்தூர் குளத்தில் மடைகள் அமைக்கப்பட்டு நீர் நிருவாகம் முறையாகச் செய்யப்பட்டிருந்தது. அவை காலப்போக்கில் தொடர் பராமரிப்பின்மையால் அழிவுற்றன. இதனைக் கண்ணுற்ற இருப்பைக்குடிக்கிழவன் கி.பி.825-இல் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் காலத்தில் சிதைந்த மடைகளை அகற்றிவிட்டு கல்மடைகளை அமைத்து குளத்தைச் சீர்திருத்தினான். இச்செய்தியினை சடையன்மாறனின் வட்டெழுத்துக் கல்வெட்டுடொன்று தெரிவிக்கின்றது.
இருக்கண்குடியிலுள்ள சடையன்மாறனின் 18-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இருப்பைக்குடிகிழவன் செய்த பணியினைப் பாடல் வடிவில் தெரிவிக்கின்றது. அதில் இவன் சாத்தனூரில் செய்த பணியை:
‘சாத்தனூர் பெருங்குளத்து வேப்பமடை
கற்படுத்தும் பொன்னான்மடை தன்னொடும்
பூங்குறி மடையமைத்து…………’ என
விவரித்துச் சொல்கின்றது.
இங்கு வெங்கடாசலபதி கோயில், பிள்ளையார் கோயில், சிவன் கோயில், சுப்பிரமணியர் கோயில், அய்யனார் கோயில், அனுமார் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், நொண்டிக்கருப்பசாமிக் கோயில் எனப் பல கோயில்கள் உள்ளன. இவற்றுள் வரலாற்றுச் சிறப்புடைய வெங்கடாசலபதி கோயிலும், சிவன் கோயிலும் முக்கிய இடம் பெறுகின்றன.
சாத்தூர் சிவன் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் நாயக்கர்காலத் திருப்பணியால் பழம்பெருமையை இழந்து காட்சி அளிக்கின்றது. இக்கோயிலில் இரண்டு நந்தி சிலைகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று கி.பி.10-ஆம் நூற்றாண்டினது. மற்றொன்று கி.பி.13-ஆம் நூற்றாண்டினது.
சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் பிற்காலப் பாண்டியர் கட்டடக் கலையையும், கல்வெட்டுகளையும் கொண்டு விளங்குகின்றது. மாமண்டபம் பிற்காலக் கட்டட அமைப்புடன் விளங்குகின்றது. தூண்மண்டபம் பாளையக்காரர்களின் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு தூணில் சமீன் ஒருவரின் உருவச்சிலை இடம்பெற்றுள்ளது.
இக்கோயிலில் கி.பி.13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, ‘இருஞ்சோழ நாட்டு வானவன்’ மாதேவிபுரத்து நகரத்தைச் சேர்ந்த நகரத்தார்கள் இக்கோயிலுக்கு இறையிலியாக நிலத்தானம் வழங்கிய செய்தியைத் தருகின்றது. மற்றொரு கல்வெட்டு, இறைவனுக்கு உணவு படைப்பதற்காகவும், கோயிலின் பிற பணிகளுக்காகவும் இறையிலி தேவதானமாக நிலம் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றது.
இக்கோயிலிலுள்ள குதிரை வாகனம் அழகிய வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டுப் பித்தளைத் தகடு கொண்டு போர்த்தப்பட்டுள்ளது. குதிரையின் பின்பகுதியில் உள்ள கல்வெட்டு இக்குதிரை லாகனம் செய்யப்பட்ட வரலாற்றைத் தெரிவிக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும்போது சாத்தூர் வெங்கடாசலபதிப் பெருமாளும் வைப்பாற்றில் இறங்குவார். இவர் ‘சாத்தூரப்பன்’ என்று இப்போது அழைக்கப்படுகின்றார். ஆற்றில் இறங்கி முடித்தவுடன் மூன்று நாட்கள் கொல்லப்பட்டிக்கு எடுத்துச்சென்று அங்குள்ள எழுந்திருத்து மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்வது சமீன் காலத்தில் வழக்கமாக இருந்தது. இவ்வாறு நடைபெறும் திருவிழாவினைப் ‘பாறைக் காட்டுத் திருவிழா’ என்பர். உற்சவரான சாத்தூரப்பனைச் சுமந்து வரும் இக்குதிரை வாகனத்தைப் பித்தளையால் கி.பி.1823-இல் சுந்தர பாண்டிய இராமசாமி கெக்சிலப்ப நாயக்கர் என்ற கொல்லப்பட்டி சமீன் செய்தளித்துள்ளார்.
சாத்தூர் சமீன் புகழ்பெற்ற சமீன்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. அப்போது ஷாஜகான் (1627-1658) தன்னுடைய அதிகாரிகள் மூலமாக தெற்கேயுள்ள மன்னர்களோடு தொடர்பு கொண்டிருந்தான். அவ்வதிகாரிகளில் ஒருவன் சாத்தூரில் ஒரு சத்திரம் ஒன்றைக் கட்டித் தன்னுடைய மன்னன் ஷாஜகான் பெயரையே அதற்குச் சூட்டினான்.
இவ்வாறு கட்டப்பட்ட சத்திரத்தின் நிருவாகத்தைச் செவ்வனே நடத்துவதற்காக ஒரு சிற்றூரையே தானமாக அளித்தான். அச்சிற்றூர் ‘சத்திரப்பட்டி’ என்று அழைக்கப்பட்டது. இவ்வூரின் வருவாய் சத்திரத்திற்கும், பிற கோயில்களுக்கும் செலவிடப்பட்டு வந்துள்ளது.
சாத்தூரில் ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. இச்செப்பேடு இடங்கை வலங்கைப் பிரிவினரிடையே ஏற்பட்ட சண்டையைப் பற்றியும் அதன் முடிவைப் பற்றியும் தெரிவிக்கின்றது. இடங்கைப் பிரிவைச் சார்ந்த தனிப்புலியுடையான் என்பவன் வலங்கைப் பிரிவைச் சார்ந்த தலைவன் ‘ஒருக்கப் புலியுடையான்’ என்பவனை வெற்றி கொள்கின்றான். இவ்வெற்றியைப் பாராட்டும் விதமாக மதுரையைச் சேர்ந்த கம்மாள இனத்தவர்கள் இவனைப் புகழ்ந்து சில சிறப்புகளைச் செய்தனர் என்று அச்செப்பேடு தெரிவிக்கின்றது.