பொதுவாகக் குடும்ப விழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அதுவும் திருமணம் தொடர்பாக முன்னும், பின்னும் நடைபெறும் நிகழ்ச்சிகள் இரு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பது. திருமணம் என்பது இரு குடும்பத்தினரின் சங்கமத் திருவிழா.
என் தங்கை மகள் திருமண நிச்சய விழாவும் அப்படித்தான். அவள் முதுகலைப் பட்டதாரி, கம்ப்யூட்டர் திறன் படைத்தவள். டைப்ரைட்டிங்கில் உயர் வகுப்பு தேறியவள். தையல் கலையில் நல்ல ஆர்வம், நல்ல உயரம், ஒல்லியான அழகான தோற்றம்.
அவளுக்கு ஆசிரியர் பணி என்றால் உயிர், மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது, பல்கலைக்கழகத் தொலை தூரப் பயிற்சி வகுப்பில் பாடம் நடத்துவது, தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது என மகிழ்ச்சியாகவே இருந்தாள்.
ஆனால் என் தங்கைக்கு மட்டும் அவள் திருமணம் தொடர்பான கவலை இருந்து கொண்டே இருக்கும்.
எப்பொழுது போனில் பேசினாலும் அண்ணே, என் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பார் என்று சொல்லித் தான் உரையாடலை முடிப்பாள்.
என் அம்மாவிற்குத் தன் அன்புப் பேத்திக்குத் திருமணம் ஆகவில்லையே என்ற கவலை. ஆனால் நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.
குமரி மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் தொழில்வளம் குறைந்த மாவட்டம், சொல்லிக் கொள்ளும் அளவில் பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. தென்னையும், வயலும், வாழையும் பயிர் செய்யப்படும் ஒரு விவசாய மாவட்டம். ஆனால் கல்வியில் சிறந்த மாவட்டம், எல்லோரும் படித்தவர்களாகவே இருப்பார்கள்.
சுய தொழில் பார்ப்பதைவிட அரசு வேலை பார்ப்பதையே பெரிதும் விரும்புவார்கள். திருமணச் சந்தையில் ஒரு தொழிலதிபரை விட அரசு அலுவலகப் பணியாளருக்கு மிகுந்த கிராக்கி இருக்கும். என்னுடைய உறவினர் மகன் ஒருவர் படித்துவிட்டு வேலை தேடித் கொண்டிருந்தார்.
நான் சுயமாகத் தொழில் செய்யலாம் என அவர்களின் குடும்பப் பின்னணிக்குத் தக்க ஒரு தொழில் தொடங்க ஆலோசனை கூறினேன். அவர்கள் என்மீது வருத்தம் கொண்டதாகப் பின்னர் அறிந்தேன்.
குமரி மாவட்ட இளைஞர்களுக்கு சுய தொழிலில் கிடைக்கும் சுதந்திரம், மனதிருப்தி, சிலருக்கு நாம் வேலை கொடுக்க முடியும் என்ற கௌரவத்தின் பெருமை என்பன தெரிவதில்லை.
இந்த மனநிலை குமரி மாவட்ட இளைஞர்களிடம் இருந்து மாற்றப்பட வேண்டும். பணியாளராக இருப்பதை விட, பணி கொடுப்பவராக இருப்பதே மேலானது. இதற்கும் என் தங்கை விதிவிலக்கல்ல, அரசுப் பணியில் உள்ள மணமகனைத் தேடிக் கொண்டிருந்தாள்.
குமரி மாவட்டத்தில் 17 சதவீதத்தினர் சி.எஸ்.ஐ. கிருஸ்தவர்கள். 15 சதவீதத்தினர் கத்தோலிக்கக் கிருஸ்தவர்கள். 5 சதவீதத்தினர் முஸ்லீம்கள். எஞ்சியவர்கள் இந்துக்கள்.
கத்தோலிக்கக் கிருஸ்தவர்களில் பெரும்பாலும் மீனவர்கள் அதிகம் இருப்பார்கள். இதை எல்லாம் கழித்துப் பார்த்தால் என் தங்கை விரும்பும் கத்தோலிக்கக் கிருஸ்தவ நாடார் மணமகன் கிடைப்பது சிரமம். கிராக்கியும் கூட.
இதனால் என் அம்மா தன் பேத்திக்குத் திருநெல்வேலி மாவட்டத்தில் மணமகன் அமைந்தாலும் நல்லது என்று கருதினார்கள். இப்பொழுதெல்லாம் தூரம் ஒரு பிரச்சனையே இல்லை. செல்போன் யுகமாக உலகமே உள்ளங்கையில் அல்லவா அடங்கியிருக்கிறது.
திருநெல்வேலியில் உள்ள ஒரு திருமணத் தகவல் அலுவலகத்தில் பதியப்பட்டது. ஒரு சில இடங்களில் தகுதியான இளைஞர்கள் இருந்ததை அறிந்து, அலசி ஆராய்ந்து, எங்கள் குடும்பத்திற்குத் தகுந்த ஒரு இளைஞனைத் தேர்வு செய்தனர்.
குமரி மாவட்டத்தில் மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்ப்பார்ப்புகள் யாவும் கனமாகவே நிறைவு செய்யப்படும் என்பதால், நெல்லை மாவட்டத்தாரும் குமரி மாவட்டத்தில் பெண் எடுக்க ஆர்வமாக இருப்பார்கள்.
எனக்குத் தகவல் தந்தார்கள். நானும் அவர்களை ஊக்கப்படுத்தினேன். பொருளாதார ரீதியில் நான் உதவுவதாக உறுதியளித்தேன். இன்னும் என் தம்பி எல்லோரும் உதவி செய்வோம் என்பது என் தங்கைக்குத் தெரியும்.
என் தங்கை மகள் என்னிடம் மிகுந்த அன்பாய் இருப்பாள். புத்திசாலிப் பெண். சுறுசுறுப்பானவள், எனது ஆலோசனைப்படி அவள் கல்வி அமைந்தது.
ஒரு முறை மாமா நீங்க சொல்லித் தான் எம்.காம். படித்தேன். வேறு ஏதாவது படித்திருந்தால் இன்று நல்ல வேலைக்குப் போயிருப்பேன் என்று கூறி விட்டாள். உண்மையும் அதுதான்.
அன்று நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இவளைக் கஷ்டம் தெரியாத அளவுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
நெல்லை மாவட்டம். தென்காசிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர். அரசு ஆசிரியர் பணி என்று கூறினார்கள். நானும் ஒப்புதல் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன்.
குடும்பத்தை விசாரித்த பொழுது, எங்கள் உறவினர் ஒருவருக்குத் தூரத்து உறவுமுறை என்று தெரிந்தது. அனைவருக்கும் திருப்தியாகப் பட்டது.
ஆனால் மாப்பிள்ளையின் ஊர் சிறிய கிராமம். மாப்பிள்ளையின் வீடும் சிறியது என்று யோசித்தார், என் அத்தான் பில்டிங் காண்டிராக்டர் ஆகவே வீடு ஒரு பிரச்சனையில்லை, கட்டிக் கொடுத்து விடலாம் என்று கருதினோம். ஆனால் அது பற்றி யாரும் பேசிக் கொள்ளவில்லை.
வழக்கம் போல மாப்பிள்ளை வீட்டாரைத் திருப்திப்படுத்தும் வகையில், கையிலும், கழுத்திலுமாகச் செய்முறைகள் பேசப்பட்டது.
பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எனது மனமும், இனம் தெரியாத பூரிப்புடன் இருந்தது. காரணம் பெண்ணைப் பார்த்தால் யாரும் பிடிக்கவில்லை என்று கூறவே மாட்டார்கள்.
ஆகவே கிட்டத்தட்ட உறுதியான நிலை இருந்தும் மாப்பிள்ளை வீட்டார் சம்பிரதாயமாக வந்து பார்த்து, பிடித்திருப்பதைத் தெரியப்படுத்தினர். விரைவில் திருமணத்தைப் பேசி உறுதிபடுத்துவதாகக் கூறிச் சென்றனர்.
திருமண உறுதி என் முன்னிலையில் நடக்க வேண்டும் என என் தங்கை மற்றும் அம்மா, தம்பி என அனைவரும் கருதி என்னிடம் நாள் கேட்டனர்.
நானும் அரையாண்டு விடுமுறையான டிசம்பர் 26 அன்று உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று கூறினேன். மாப்பிள்ளை வீட்டாருக்குத் தகவல் தரப்பட்டது. அவர்களும் ஒப்புதல் வழங்கினர்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. காலையிலேயே வீட்டில் கலகலப்பு ஆரம்பமானது. நெல்லை மாவட்டத்தினருக்குக் குமரி மாவட்ட ‘அவியல்’ பிடிக்கும் எனத் தனிக்கவனம் செலுத்திக் கூட்டு வகைகள், பாயசம் எல்லாம் ஓடிஆடித் தயாரானது.
தம்பி அங்கும், இங்குமாக ஓடி, எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டான். மணப்பெண், அவள் அக்கா, அவள் கணவன், தங்கை, அத்தான் என அனைவரும் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர்.
எங்கள் வீடு கலகலப்பாக இருந்தது. மணப்பெண்ணின் வீடு நாகர்கோவில் டவுனில் இருந்தது. எங்கள் வீடு மூன்று கிலோமீட்டர் மேற்கில் இருந்தது.
எங்களது வீட்டில் வைத்துத்தான் குடும்பத்தின் அனைத்து விழாக்களும் நடைபெறும். அந்த அடிப்படையில் அனைவரும் குழுமி இருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டு வந்து கொண்டு இருப்பதாகத் தகவல் வந்தது. அவர்கள் தரப்பில் இருந்து ஓர் ஏழு எட்டுப்பேர் வருவதாகக் கூறினார்கள். நண்பகல் பன்னிரெண்டு மணிக்குள் நிச்சயம் செய்வதாக ஒப்பந்தம்.
நேரம் செல்லச் செல்லப் பரபரப்புக் கூடியது. இதோ வருகிறார்கள், அதோ வருகிறார்கள் என்று கூறிக்கூறி ஒரு வழியாக 11.30 மணி அளவில் வந்து சேர்ந்தனர்.
அன்புடன் மரியாதை செலுத்தி அமரச் செய்தோம். ஒருவருக்கொருவர் அறிமுகத்திற்குப் பின் குடிப்பதற்குப் பானம் கொடுத்தோம். முதல் சுற்று உபசரிப்பு முடிவடைந்தது. நான் இரண்டு குடும்பத்திற்கு இணைப்புப் பாலமாக இருந்து அவசரப்படுத்தினேன். இன்னும் இருபது நிமிடம் தான் உள்ளது என்றேன்.
வந்திருந்தவர்களில் ஒருவர், பெண் என்ன படித்திருக்கிறார்? என்று கேட்டார். அவர் மாப்பிள்ளையின் அக்காள் கணவராம். அவரிடம் அவளின் முதுகலைப்படிப்பு – கம்ப்யூட்டர் டிப்ளமோ – டைப்பிரட்டிங் படிப்பு – தையல் தொடர்பான படிப்பு அனுபவங்களைக் கூறினேன்.
உடன் அவர், அந்தச் சான்றிதழ் எல்லாம் பார்க்க வேண்டும் என்றார். நான் நாளை தருவதாகவும், அனைத்தும் நாகர்கோவிலில் உள்ள அவள் வீட்டில் இருப்பதாகவும் கூறினேன். அவர் ‘போய் எடுத்திட்டு வாருங்கள். பொதுவாக, குமரி மாவட்டத்தினர் படிப்பு விஷயத்தில் பொய் சொல்லுவார்கள். எங்களுக்கு அப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது’ என்றார். நான் இடிந்து போனேன்.
அவரிடம் சொன்னேன் ‘திருமணம் என்பது விசுவாசத்தின் அடிப்படையில் அமைவது, ஒருவர் ஒருவரை விசுவாசிக்க வேண்டும். நம்பிக்கை தான் வாழ்க்கை. நாங்கள் உங்களை நம்பி எங்கள் பிள்ளையைத் தருகிறோம், நீங்கள் எங்களை நம்பிப் பெண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள். இன்னும் பதினைந்து நிமிடம் தான் இருக்கிறது.
நாளை உங்களுக்குச் சான்றிதழ் எல்லாம் தந்து விடுகிறேன் என்று கூறியதும் அனைவரும் அமைதியானார்கள்.
உச்சக்கட்டப் பரபரப்பு, அனைவரிடமும் விவாதம் பிரச்சனையாவதைக் கவனித்த என் மனைவி, என்னிடம் ஒரு நிமிடம் தனியாக வரக் கூறினாள்.
நானும் சென்று இருவரும் ஆலோசனை நடத்தினோம். என் மனைவி தானே மாப்பிள்ளையிடம் கேட்பதாகவும், அதற்குப் பின் முடிவு செய்வோம் என்றாள். நானும் சரி என்று கூறிவிட்டேன்.
அனைவரும் கூடியிருந்த சபையின் நடுவில் என் மனைவி நின்று கொண்டு, மாப்பிள்ளையைப் பார்த்து தம்பி நீங்க என்ன சொல்லுகிறீர்கள்? உடனே சான்றிதழ்களைக் காட்ட வசதிப்படாது, நாளைக் காட்டி விடுகிறோம். நீங்க நினைக்கிறதைச் சொல்லுங்க என்று தைரியமாகக் கேட்டாள்.
மாப்பிள்ளை பதிலை அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர். அவரோ பெரியவங்க கேக்கிறாங்க அல்லவா! நீங்க சான்றிதழ் எல்லாம் காட்டிடுங்க என்று கூறிவிட்டார்.
மறுநொடியில் நான் சபையின் நடுவே வந்து நின்றேன். இரு கைகளையும் குவித்து மாப்பிள்ளை வீட்டார்களைப் பார்த்துக் கூறினேன்.
சரி! இந்தத் திருமணத்தில் கடவுளுக்கு விருப்பமில்லை போலும், நாம் உறவினர்களாக இருக்க வேண்டாம், நண்பர்களாகவே இருப்போம், இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள், நீங்க எல்லோரும் சாப்பிட்டு விட்டுப் போங்க, தவறாக நினைக்க வேண்டாம், கடவுளின் சித்தமில்லாது எதுவும் நடக்காது என்றேன்.
இந்தத் திருமணத்தில் கடவுளுக்குச் சித்தமில்லை என்றதும் அனைவரும் அமைதியானார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஒருவர் எழுந்து வீட்டிற்கு வெளியே சென்றார். அவரைத் தொடர்ந்து அனைவரும் சென்றனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது. பின்னர் சாப்பிடாமலேயே விடைபெற்றுக் கொண்டனர்.
என் தங்கை மிகவும் மனம் நொந்து போனாள். நானும், என் மனைவியும் தைரியம் சொன்னோம். மணப்பெண், மாமா சொன்ன முடிவு தான் சரியானது என்றாள். எனக்கு ஆறுதலாக இருந்தது.
அவள் இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்குத் தாய். நில புலன்களோடு ஆடு, மாடு, வயல் என்று இஞ்சீனியரான் தன் கணவரோடு நாகர்கோவில் அருகிலேயே மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வருகிறாள். அன்று நான் எடுத்த முடிவானது ஒரு நல்ல முடிவு.
சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்