சாம்புவின் உண்ணாவிரதம் நாம் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோளை செயல்படுத்தும்போது சந்தேகம் முளைத்தால் அச்குறிக்கோள் கெட்டு விடும் என்பதை விளக்குகிறது. இனி கதையைப் பார்ப்போம்.
சாம்பு வெகுளியான மனிதன். ஒருநாள் கோவிலுக்குச் சென்ற போது அங்கே முனிவர் ஒருவர் “விரதம் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கும். அத்தோடு மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் உண்ணாவிரதம் ஒரு வழியாகும்.” என்று உண்ணாவிரத்தின் பெருமைகளையும், உண்ணாவிரதம் இருக்கும் முறைகளையும் விளக்கினார்.
முனிவரின் போதனைகளைக் கேட்டதும் சாம்புவிற்கு உண்ணாவிரதம் இருக்க ஆசையாக இருந்தது. தன்னுடைய மனைவியிடம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறினான்.
அதனைக் கேட்டதும் அவனுடைய மனைவி உண்ணாவிரதம் இருந்தால் உடல் களைப்பு ஏற்படும் என்று கூறினாள்.
அதனைக் கேட்டதும் சற்று பயந்த சாம்பு துணிவினை வரவழைத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்க உறுதி கொண்டான்.
உண்ணாவிரத தினத்தன்று காலையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தான்.
திடீரென அவனுக்கு ‘உண்ணாவிரதம் இருக்கும்போது களைப்பு ஏற்பட்டு தன்னால் நடக்க முடியாமல் போனால் என்ன செய்வது?’ என்ற எண்ணம் தோன்றியது.
உடனே வீட்டின் முற்றத்தில் இருந்து எழுந்து சமையலறைக்குள் சென்று அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்றதும் ‘உண்ணாவிரதத்தினால் உண்டாகும் களைப்பினால் என் கையால் உணவுப் பொருட்களை எடுக்க முடியாமல் போனால் என்ன செய்வது?’ என்று எண்ணினான்.
உடனே பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கூடைக்கு அருகே சென்றான்.
இன்னும் சிறிது நேரம் ஆனதும் அவனுக்கு மறுபடியும் சந்தேகம் தோன்றியது. என்னவென்றால் ‘உண்ணாவிரதத்தின் களைப்பால் பழங்களை கூடையில் இருந்து எடுக்க முடியாமல் போனால் என்ன செய்வது?’ என்று எண்ணினான்.
உடனே பழக்கூடையிலிருந்த பழங்களை கையில் எடுத்து வைத்துக் கொண்டான்.
பழத்தின் வாசனை அவனுடைய மூக்கினைத் துளைத்தது.
சற்று நேரத்திற்குப் பிறகு ‘இந்த பழத்திற்கும் என்னுடைய வாயிற்கும் ஐந்து அங்குல இடைவெளிதான். பழம் கையில் இருந்தால் என்ன?. என்னுடைய வாயில் இருந்தால் என்ன?.’ என்று எண்ணி வாயில் பழத்தை வைத்தான்.
சிறிது நேரத்தில் பழத்தின் ருசிக்கு அடிமையாகி பழத்தைச் சாப்பிடத் துவங்கினான்.
மூன்று நிமிடங்களில் பழக்கூடையிலிருந்து அனைத்துப் பழங்களையும் உண்டு விட்டான்.
உடனே ‘பழங்களும் காலியாகி விட்டது. என்னுடைய உண்ணாவிரதமும் முடிந்து விட்டது’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
சாம்புவைப் போல்தான் நம்மில் பலரும் ஏதேனும் ஒரு செயலை செய்ய எண்ணி, வீண் குழப்பங்களால் செய்ய வேண்டிய செயலை செய்யாது, குறிக்கோளைத் தவிர எதையாவது செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் ஒருசெயலை செய்ய தீர்மானித்து விட்டால் எப்படியேனும் செய்து முடிக்க வேண்டும்.
வீணான சந்தேகங்கள் ஏற்பட்டால் செயலினை செய்து முடிக்க முடியாது என்பதை சாம்புவின் உண்ணாவிரதம் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான தமிழ் கதை நிறைய இத்தளத்தில் உள்ளன. அவற்றைப் படிக்க இங்கே சொடுக்கவும்.