முன்னொரு காலத்தில் மகிழ்வனம் என்றொரு காட்டில் விலங்குகள் பல வாழ்ந்து வந்தன. அக்காட்டிற்கு ராஜாவாக சிங்கம் சின்னையா இருந்தது. அது தன்னுடைய காட்டு மக்களை நன்கு பாதுகாத்து வந்தது.
அக்காட்டில் நரி நஞ்சப்பன் ஒன்று வசித்து வந்தது. அது பெயருக்கு ஏற்றால் போல் கெட்ட எண்ணம் கொண்டதாக இருந்தது. அதனால் காட்டில் இருந்த எந்த விலங்குகிற்கும் நரி நஞ்சப்பனைப் பிடிக்கவில்லை.
ராஜாவான நரி
ஒருநாள் இரவு நேரத்தில் காட்டினை ஒட்டிய ஊரின் ஒதுக்குப்புறப் பகுதிக்கு நரி நஞ்சப்பன் வந்தது. அப்போது நாய்கள் நரி நஞ்சப்பனைத் துரத்தின.
நாய்களுக்கு பயந்த நரி நஞ்சப்பன் அருகே இருந்த சாயப்பட்டறையினுள் ஓடியது. ஓடிவந்த வேகத்தில் சாயம் முக்கும் தொட்டியினுள் நரி நஞ்சப்பன் விழுந்தது.
நாய்கள் குரைக்கும் சத்தம் ஓயும்வரை தொட்டியினுள்ளே இருந்தது. தொட்டியிலிருந்த சாயம் நரி நஞ்சப்பன் உடலில் ஒட்டியது. இதனை அறியாத நரி நஞ்சப்பன் நாய்கள் குரைக்கும் சத்தம் நின்றவுடன் வெளியே வந்து, பதட்டத்தில் மீண்டும் காட்டினுள் ஓடியது.
மறுநாள் பொழுது விடிந்ததும் நரியைப் பார்த்த விலங்குகள் எல்லாம் பயந்து ஓடின. நரி நஞ்சப்பனுக்கு ஒரே ஆச்சர்யம். ‘தன்னைப் பார்த்து விலங்குகள் ஏன் பயப்படுகின்றன?.
நான் நேற்று தொட்டியில் விழுந்ததும் எனக்கு சக்தி வந்துவிட்டதால் எல்லோரும் என்னைப் பார்த்து பயப்படுகிறார்களா?’ என்று மனதிற்குள் எண்ணியது. நரி நஞ்சப்பன் பற்றிய தகவல் காடு முழுவதும் பரவியது.
நரி நஞ்சப்பன் நேரே சிங்கம் சின்னையா இருந்த குகைக்குச் சென்றது. சாயம் ஒட்டிய நரி நஞ்சப்பனை அடையாளம் தெரியாமல் சிங்கம் சின்னையன் திகைத்துப் பயந்தது.
இதனைக் கண்டதும் நரி நஞ்சப்பன் “நான் வேற்று கிரகத்திலிருந்து வந்திருக்கும் புதுவிலங்கு. நானே இனிமேல் இக்காட்டிற்கு ராஜா” என்று கூறியது.
அதே நேரத்தில் தங்கள் காட்டிற்கு புதிதாக வந்திருக்கும் விலங்கினைக் காண காட்டு விலங்குகள் எல்லாம் சிங்கம் சின்னையனின் குகைக்கு முன்னே கூடின.
நரிக்குப் பயந்த சிங்கம் சின்னையன் “என் அருமை மக்களே, இங்கே நிற்கும் இவர்தான் இனி காட்டின் புதிய ராஜா” என்று நரி நஞ்சப்பனை காட்டு விலங்குகளுக்கு அறிமுகப்படுத்தியது.
காட்டு விலங்குகளும் நரி நஞ்சப்பனை தங்களுடைய அரசனாக ஏற்றுக் கொண்டன. காட்டுக்கு அரசனாக மாறியதிலிருந்து நரி நஞ்சப்பன் காட்டு விலங்குகளிடம் கடுமையாக நடந்து கொண்டது.
காட்டு விலங்குகள் தங்களின் புதிய அரசனின் மீது அதிருப்தி கொண்டன.
நரியான ராஜா
ஒருநாள் மாலைப்பொழுதில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போலிருந்தது. எங்கேயோ நரிகள் ஊழையிடும் சத்தம் கேட்டது.
அரசனான நரி நஞ்சப்பன் பதிலுக்கு ஊழையிட்டது. சிறிது நேரத்தில் கடும் மழை பெய்தது. நரி நஞ்சப்பன் மழையில் நனைந்ததால் அதனுடைய சாயம் வெளுத்துப் போச்சு.
தங்களை ஏமாற்றிய நரி நஞ்சப்பனை காட்டு விலங்குகள் கோபத்தில் கடித்து குதறின. நரி நஞ்சப்பன் பரிதாபமாக இறந்தது.
குழந்தைகளே, ஏமாற்றுபவர்கள் கட்டாயம் தண்டனை அடைவார்கள் என்பதை சாயம் வெளுத்துப் போச்சு கதை மூலம் அறிந்து கொண்டீர்கள் தானே!
மறுமொழி இடவும்