சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கூறுவதை தேன்சிட்டு தென்னவன் கேட்டது.
பூவில் தேனை உறிவதை விட்டுவிட்டு ஆசிரியர் பழமொழியின் விளக்கத்தைப் பற்றிக் கூறுகிறாரா என கேட்கலாயிற்று.
மாணவன் ஒருவன் ஆசிரியிடம் “ஐயா, இந்தப் பழமொழி குழப்பமான பொருளை கூறுவது போல் உள்ளது.
சாறு என்பது நீரைப் போன்றது. இது எப்படி பாறையாக மாறும். சாந்து என்பது நீரால் குழைக்கப்பட்டது. இது எப்படி குப்பையாகும்?. இப்பழமொழியின் உண்மையான பொருள் என்ன?” என்று கேட்டான்.
சாறு மிஞ்சினால் பாறை
ஆசிரியர் “நான் இப்பழமொழியைப் பற்றி விளக்குகிறேன். நாம் ஒரு பழத்தை தின்ன வேண்டும் என எண்ணுகிறோம் என வைத்துக் கொள்வோம்.
ஒன்று அதை அப்படியே கடித்து சுவைத்துச் சாப்பிடலாம் அல்லது பழத்தை நன்கு பிழிந்து சக்கையை பிழிந்து சாறு எடுத்து அருந்தலாம்.
இவ்விதமாக இருவகைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பழத்தை உண்போம். இரண்டாவது கூறிய முறையில் சாறு எடுத்து சாற்றை அருந்திவிட்டு அதன் சக்கையை எறிந்து விடுவோம் அல்லவா?
இது போலவே நல்ல நூல் ஒன்றை படிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அந்த நூலில் கூறியுள்ள கருத்துகள், அந்த நூலிற்கான மூல நூலின் சாறு எனக் கொள்ளலாம் அல்லவா?.
எனவே நல்ல நூல்களைப் படிக்கும்போது அதில் உள்ள கருத்துக்கள் நமது மனதில் மிஞ்சி (இருத்தி) விடும்.
நாம் கற்ற நல்ல விசயங்களை மனதில் நிலை நிறுத்த பழகிக்கொண்டால் நாம் பாறையைப் போல வலிமையுள்ள மனிதனாக மாறலாம் என்பதே முதல் பாதியின் கருத்து.
இதைத் தான் வள்ளுவரும் “நிற்க அதற்கு தக” என்றார்.
சாந்து மிஞ்சினால் குப்பை
இனி இரண்டாவது பாதிக்கு வருவோம்.
இதில் சாந்து மிஞ்சினால் குப்பை என்று கூறப்பட்டுள்ளது. சாந்து என்பது மண் போன்ற உலர்ந்த பொருளை நீர்விட்டு பிசைந்தால், அது ‘கொழ கொழ’ என்று மாற்றிக் இருப்பதைக் குறிக்கும்.
நாம் படிக்கும் நூல்களின் கருத்துகளை நமது மன இயல்புக்கு ஏற்றபடி, மாற்றுக் கருத்துடன் இணைத்து குழப்பி சாந்து போல ஆக்குவது.
அதாவது நூலின் கருத்துகளை மனதில் தங்க விடாமல் அக்கருத்துகளை குழப்பமான மனதுக்கு அடிப்படையாக மாற்றிக் கொள்வது.
இவ்வாறு செய்யும் போது அந்த நூலினால் பயன் ஏற்படுவதற்கு மாறாக வீண் என்ற எண்ணமே உண்டாகும்.
குறிப்பாக இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்கள்.
பாடநூல்களை மட்டும் படித்து சராசரியாக வாழ்பவர்களைவிட பலதரப்பட்ட நூல்களையும் கற்று, அதன் கருத்துகளை மனதில் நிறுத்தி வாழும் மாணவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறான்.
மனதைக் கெடுக்கும் அருவருத்தக்க கருத்துகளையுடைய இரண்டாம் தர நூல்களை படிக்கும் மாணவனின் வாழ்க்கை தாழ்ந்து போகிறது.
இக்கருத்துகளை நமக்கு விளக்கவே நமது முன்னோர்கள்
‘சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை’ என்ற இப்பழமொழியை கூறினார்கள்.
அதாவது நல்ல கருத்துகளை மனதில் நிறுத்த வலிமை அதிகரிக்கும் என்றும், தீய கருத்துகளை மனதில் நிறுத்த வலிமை குறையும் என்றும் நமக்கு கூறிச் சென்றுள்ளனர்.” என்று கூறினார்.
இதனைக் கேட்ட தேன்சிட்டு தென்னவன் வட்டப்பாறையினை நோக்கிப் பறந்தது. அங்கே எல்லோரும் கூடி காக்கை கருங்காலனின் வரவிற்காக காத்திருந்தன. தேன்சிட்டு தென்னவன் வரும்போது காக்கை கருங்காலனும் அவ்விடத்திற்கு வந்தது.
காக்கை கருங்காலன் கூட்டத்தினரைப் பார்த்து “என் அருமைக் குட்டிகளே, குஞ்சுகளே. உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.
தேன்சிட்டு தென்னவன் “தாத்தா நான் இன்றைக்கு சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை என்ற பழமொழியைக் கூறுகிறேன்” என்று தான் கேட்ட முழுவதையும் கூறியது.
அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “குழந்தைகளே தீய கருத்துக்களை விலக்கி நல்ல கருத்துகளை மனதில் இருத்தி நன்மை பெறுங்கள். நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942