சாலை பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

சாலை பாதுகாப்பு என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும்.  சாலை பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி விவரத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.10 இலட்சம் மக்கள் விபத்தினால் உயிர் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

இந்தியா உலகிலேயே அதிக சாலை போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். இந்தியாவில் மூன்று மில்லியன் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் 60% தார்ச்சாலைகளாக உள்ளன. இந்திய பொருளாதார வளர்ச்சிக்குச் சாலைகளின் பங்கு குறிப்பிடத் தக்கவை.

ஆனால் சாலையைப் பயன்படுத்துவோர்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கின்றன. தற்போது சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகமாகவே உள்ளன. ப‌லரின் வாழ்க்கையே முடங்கிப்போகிறது.

இந்தியாவில் சாலைப் போக்குவரத்துச் சட்டம் ஜுலை 1, 1989ல் ஏற்படுத்தப்பட்டது. இது வாகன ஓட்டுநர்களுக்கு ஓர் வழிகாட்டியாக உள்ளது. வாகன ஓட்டுநர் வாகனத்தை முந்திச் செல்லுதல், வேக அளவு, தன்னோடு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் பற்றி சாலை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாலைப் பாதுகாப்புக் குழு தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதும், சாலை விபத்துக்களைக் குறைப்பதும் இதன் பணியாகும். தேசிய பாதுகாப்புக் கொள்கையை இக்குழு உருவாக்கியது.

ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு பற்றியும் சாலை பாதுகாப்பு சட்டங்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசியின் மூலம் 103ஐ தொடர்பு கொள்ளலாம்.

 

சாலைப் பாதுகாப்பில் முக்கிய விதிகள்

வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடது புறத்திலேயே வாகனங்களைச் செலுத்துதல் வேண்டும்.

முன் செல்லும் வண்டியினை வாகன ஓட்டுநர்கள் முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

வாகன ஓட்டுநர் குறுக்குச் சாலை அல்லது பாதாசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்லல் வேண்டும்.

தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.

வாகன ஓட்டுநர்கள் ‘U’ திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் வாகனங்களைத் திருப்ப வேண்டும்.

தங்கள் வாகனத்தை மெதுவாக ஓட்டும்போது அதற்குரிய சைகையை ஓட்டுநர் காட்ட வேண்டும்.

வலது புறமாகவோ, அல்லது இடது புறமாகவோ வாகனத்தை திருப்பும் முன் சைகை காட்ட வேண்டும். அதே போல் தனது வாகனத்தை நிறுத்தும் முன் அதற்குரிய சைகையை காட்ட வேண்டும்.

வாகன ஓட்டுநர்கள் ‘U’ திருப்பம் செய்யும் முன்பும் அல்லது இடப்புறமோ, வலப்புறமோ திருப்பும் முன்பும் வாகனத்தில் உள்ள அதற்குரிய விளக்கினை எரியச் செய்ய வேண்டும்.

வாகன ஓட்டுநர் ஒரு வழிப்பாதை என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் அவர் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்வழியன்று என்று அறிவிக்கப்பட்ட ஓரிடத்தினுள் உள்ளே வருதலோ, போதலோ, நுழைதலோ கூடாது.

நெடுஞ்சாலைகளில் வண்டிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பாதையில்தான் வண்டியைச் செலுத்த வேண்டும்.

வழித்தடம் மாறும் முன் முறையான சைகையைக் காட்டி வாகனத்தைச் செலுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் மஞ்சள் கோட்டினைத் தாண்டிச் செல்லக்கூடாது.

வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து வாகனத்திலுள்ள ஒலிப்பானை பயன்படுத்தல்கூடாது.

அமைதி இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

வாகனத்தில் இயந்திரக்கோளாறு இருந்தாலோ, வாகனத்தை இயக்கும் போது அதிக சத்தம் வரும் என்று தெரிந்தாலோ வாகனம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும் தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக் கொள்ளும் விபத்தினைத் தவிர்க்கலாம்.

 

சாலை சைகைகள்

சாலைகளில் உள்ள சைகைகள் போக்குவரத்தை சீர் செய்யவும், பாதாசாரிகளை பாதுகாக்கவும், பயன்படுகிறது. சாலைகளிலுள்ள சைகைகளை அறிவிப்புக்களாகக் கருதப்பட வேண்டும்.

சாலை சைகைகளை

1.உத்தரவு சைகைகள்

2.எச்சரிக்கைச் சைகைகள்

3.தகவல் சின்னங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

 

குறுக்குச் சாலையிலுள்ள போக்குவரத்து ஒளி விளக்கு மற்றும் நிறுத்தலர் விளக்குகள் எப்பொழுது பாதசாரிகள் சாலையைக் கடக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது. சாலையில் செல்லும் வண்டிகளைக் கட்டுப்படுத்துகிறது.

போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது.

போக்குவரத்து காவல்துறையினர் தங்களது கைகளைப் பயன்படுத்தி போக்குவரத்தினை முறைப்படுத்துதல், சீர் செய்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

 

ஓட்டுநர் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்

வாகன ஓட்டுநர்கள் எப்பொழுதும் தன்னுடைய ஓட்டுநர் உரிமம், வண்டியின் பதிவுச் சான்றிதழ், வாகன வரி கட்டியதற்கான ரசீது, வாகனத்திற்கான காப்பீட்டுச் சான்றிதழ், மேலும் அனுமதி மற்றும் தகுதிச் சான்றிதழ்களையும் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும். அரசின் மோட்டார் வாகனத்துறை அலுவலர்கள் கேட்கும் போது இவற்றினை வாகன ஓட்டுநர்கள் காண்பிக்க வேண்டும்.

 

சாலை விபத்திற்கான காரணங்கள்

வயது முதிர்வு, சோர்வு, உடல்நலக்குறைபாடு, வாகனம் ஓட்டுதலில் போதிய பயிற்சியின்மை மற்றும் மனநிலைக் குறைபாடுகள் போன்ற தனிப்பட்ட காரணங்களினாலும் தட்பவெப்பநிலை, இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக் குறைவு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களினாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

நவீன காலத்தில் வேகமாகக் குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்லுவது போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாகும்.

போக்குவரத்துச் சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால் பாதசாரிகளும், வாகனங்களும் குறுகிய இடைவெளிகளில் செல்வதால் விபத்துக்கள் நிகழ்கின்றன.

நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

கனரக வாகனங்களுக்குத் தனிப்பாதையும், அதற்கெனக் குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்பட்டால் விபத்துக்கள் குறையும்.

 

குடிப்போதையில் வாகனம் ஓட்டுவதால் வாகன ஓட்டுநர்கள் ஓட்டும் திறமையை இழப்பதோடு, முடிவு எடுக்கும் திறனையும் இழந்து விடுகிறார்கள். இதுதான் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும்.

 

 

சாலை பாதுகாப்பில் கடைப்பிடிக்க வேண்டிய‌ விதிமுறைகள்

வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துதல் கூடாது.

நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது, ஓட்டுநர் மற்றும் பயணிப்போர் வார்பட்டை(Seat Belt) அணிய வேண்டும்.

மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக்கூடாது.

வேகக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.

பாதசாரிகள் கவனமுடன் நடைபாதையில் செல்ல வேண்டும்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும்.

பாதசாரிகள் மஞ்சள் கோடுகள் போடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து சைகைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அவசர ஊர்திகளுக்கு வாகன ஓட்டுநர்கள் அவ்வாகனங்களை முந்திச் செல்ல வழிவிடல் வேண்டும்.

வாகனங்களை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

நடைபாதையில் கடைகள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.

18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ ஓட்டுதல் கூடாது. மேலே கூறிய விதிமுறைகளை முறைப்படிக் கடைப்பிடிப்பதன் மூலம் சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும்.

ஆண்டுதோறும் சனவரி முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.

 

எச்சரிக்கையாக வாகனம் ஓட்டுங்கள்
இலக்கை உயிருடன் அடையுங்கள்

– என்ற பொன்மொழி அரசால் வலியுறுத்தப்படுகிறது. மேலும் அரசு வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துக்களை தவிர்க்கும் முறைகள் பற்றி கருத்துப் பட்டறையும், கருத்தரங்குகளும் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இது பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது.

மக்கள் சாலைப் பாதுகபாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம் விலை மதிப்பு மிக்க ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க முடியும்.

நான் சாலை விதிகளைக் கடைபிடிப்பேன் என்ற உறுதி மொழியை ஏற்று ஒவ்வொருவரும் செயல்பட்டு சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.