சிகரம் தொட்ட‌ சிவசங்கரி

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி என்ற‌ இக்கட்டுரையில் நாம் சிவசங்கரியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் படைப்புகளில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

சிவசங்கரி சிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். இவருடைய எழுத்துக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், உத்வேகத்தை அளிப்பதாகவும் உள்ளது.

பிறப்பு

இவர் 1942ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சூர்யநாராயணன். இவரது தாயார் பெயர் ராஜலட்சுமி.

படிப்பு

இவர் தன் பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் சாரதா வித்யாலயா பள்ளிகளிலும், கல்லூரிப் படிப்பை சென்னையிலுள்ள S.I.E.T. மகளிர் கல்லூரியிலும் படித்தார்.

இவர் 1963 இல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெயர் சந்திரசேகரன்.

படைப்புகள்

சிவசங்கரியின் முதல் சிறுகதை “அவர்கள் பேசட்டும்”. இது குழந்தையில்லாத இளந்தம்பதியரின் மெல்லிய மன உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை. இது 1968இல் கல்கியில் பிரசுரமானது.

இவரது இரண்டாவது சிறுகதை “உனக்குத் தெரியுமா?” ஒரு குடிகாரனைப் பற்றிய கதை. இது ஆனந்த விகடனில் வெளியானது.

இவர் மது ஒழிப்பு, போதைப்பழக்க ஒழிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து பல கதைகள் மற்றும் நாவல்களை எழுதினார்.

சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” என்ற நாவல் ஒரு குடிகாரனைப் பற்றியது. இதன் மூலம் இவர் பிரபலமானார்.

இவர் “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” என்ற செயல்திட்டத்தை 1993இல் இருந்து செய்து வருகிறார்.

குழந்தைகளுக்கான “அம்மா சொன்ன கதைகள்” என்ற பேசும் புத்தகத்தை இவர் 1996இல் வெளியிட்டார்.

சிவசங்கரி 150 சிறுகதைகள், 48 குறுநாவல்கள்,36 நாவல்கள் மற்றும் 15 பயணக்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இவரது பல நாவல்கள் திரைப்படமாக உருவாக்கப்பட்டன. அவற்றுள் அவன் அவள் அது, 47 நாட்கள், நண்டு மற்றும் குட்டி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

இவர் எழுதிய‌ “அவன்” என்ற நாவல், “சுபா” என்ற தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, ஜி.டி.நாயுடு மற்றும் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் நூலாக எழுதியுள்ளார்.

இவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அன்னை தெரசா ஆகிய தலைவர்களுடன் விரிவான நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

இவர் தன்னுடைய‌ சுயசரிதையை “சூர்யவம்சம்” என்ற நூலாக 2019இல் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

இவர் 1983 ஆம் ஆண்டு “பாலங்கள்” என்ற நாவலுக்காக கஸ்தூரி ஸ்ரீநிவாசன் விருதைப் பெற்றார்.

மேலும் இவர் 1988ஆம் ஆண்டு “சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?” என்ற கட்டுரைத் தொடருக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருதைப் பெற்றார்.

1990 ஆம் ஆண்டு பாரதிய பாஷபரிசத் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இவர் தமிழ் அன்னை விருதையும் பெற்றுள்ளார்.

ஏழைக்குழந்தைகளின் படிப்பிற்கு இவர் பல உதவிகளை செய்து வருகிறார். இவர் “அக்னி ட்ரெஸ்ட்” அமைப்பின் மூலம் பல சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார்.

கண்தானம் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பல ஆயிரக்கணக்கான மக்களை இறந்த பின் தன் கண்களை தானம் செய்ய உறுதிமொழி எடுக்க வைத்தது.

இவ்வாறு எழுத்துலகில் பல சாதனைகளை படைத்த சிகரம் தொட்ட‌ சிவசங்கரி படைப்புகளை நாமும் படித்து பயன்பெறுவோம்.

பிரேமலதா காளிதாசன்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.