நான் மழலையாக இருந்தபோதே
ஒரு சித்திரத்தை
வரைவதற்கான பொருட்களைச்
சேகரிக்கத் தொடங்கினேன்
ஒவ்வொரு மனிதனும்
அவனது கலையால் வளர்க்கப்படுகிறான்
பின்னாளில் அவனது
குணாதிசயங்களிலிருந்து இருந்து
வெவ்வேறு மாற்றத்தை அடைந்தாலும்
தற்கால நடவடிக்கைகளில்
வெற்றி பெற்றாலும்
இன்றுவரை நான் எனக்கான
அந்த பழைய பொருட்களைக்
கொண்டுதான் சித்திரம் வரைகிறேன்
அதன் பயன் பாட்டில் இருக்கும்
சாத்தியப்பாட்டிலிருந்து பொருட்கள்
மாறிக் கொண்டே இருக்கிறது
சித்திரமும் வேறு வேறாகத்
தோன்றிக் கொண்டே இருக்கிறது
நகரும் காலத்தின் நிரூபணமாக
சில சித்திரங்கள் மறந்து போக
ஆழ் கடலில் போய் தங்கிவிட்ட
சில சித்திரங்கள்
மனதில் அப்படியே நிற்கின்றது
நகர்த்தும் புள்ளியாகச்
சித்திரத்தோடு பேசுகிற நான்
சித்திரமாகவே இருக்கிறேன்
புஷ்பால ஜெயக்குமார்
மறுமொழி இடவும்