சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாள்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது. இவ்விழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் என இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்

 

உலகிலேயே மிக அதிக நாள்கள் நடைபெறும் திருவிழா என்ற பெருமையும் பெற்றது சித்திரைத் திருவிழா. இவ்விழா கொண்டாட்டத்தின்போது உள்ளுர் மற்றும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் பழைய காலத்தில் தனித் தனியே நடைபெற்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தான் இவ்விரு விழாக்களும் ஒன்றிணைக்கப்பட்டு சித்திரை மாதத்தில் ஒரே விழாவாக கொண்டாடப்பட்டது.

முதலில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது சோழவந்தானில் நடைபெற்று வந்தது. பின் இந்நிகழ்ச்சி மதுரைக்கு திருமலை நாயக்கர் மன்னரால் மாற்றப்பட்டது. இவ்விழா சைவ மற்றும் வைணவ சமய ஒற்றுமையுடன் அக்காலத்தில் காணப்பட்ட சாதி வேறுபாடுகளை களையும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

 

விழாவிற்கான காரணம்

முன்னொரு காலத்தில் அழகர்மலையில் வசித்து வந்த முனிவர் ஒருவர் அழகர் மலை தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துர்வாசக முனிவரைக் கவனிக்கவில்லை.

ஆனால் வேண்டுமென்றே தன்னை வரவேற்க தவறிய முனிவரை மண்டூகமாக (தவளையாக) உருமாறுமாறு துர்வாசகர் சாபம் அளித்தார். இதனைக் கேட்ட முனிவர் தனக்கு சாப விமோசனம் கோரினார்.

அதற்கு துர்வாசகர் வைகை ஆற்றில் தவளையாக வசித்து அழகரை பிரார்த்தனை செய்யுமாறு கூறினார். முனிவரும் தவளையாக வைகை ஆற்றில் வசித்து அழகரை நினைத்து பிரார்த்தனை செய்தார்.

அழகர் வைகையில் மண்டூக முனிவருக்கு தச அவதாரக் காட்சிகளுடன் காட்சி தந்தார். இந்நிகழ்வே முதலில் ஆற்றில் அழகர் எழுந்தருளி முனிவருக்கு பாபவிமோசனம் வழங்குவதாக சோழவந்தானில் கொண்டாடப்பட்டது.

 

மலையத்துவ பாண்டிய அரசின் புதல்வியான தடாகை என்னும் மீனாட்சி போர்கலைகளில் சிறந்து விளங்கினாள். உலகில் எல்லா இடத்திலும் தன் வெற்றிக் கொடியை நாட்டி இறுதியில் திருகைலாயம் சென்றபோது சிவனை எதிர்த்து போரிட்டு அவர் மீது காதல் வயப்பட்டு மதுரை திரும்பினாள்.

இறைவன் அன்னை மீனாட்சியை மதுரையில் மணம் புரிந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மீனாட்சியின் சகோதரரான அழகர் மதுரையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து புறப்பட்டார்.

அப்பகுதி கள்ளர்கள் (திருடர்கள்) நிறைந்த பகுதியாகையால் அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக திருடர்கள் மற்றும் காவலாளிகளிடமிருந்து தங்கைக்கு சீர் கொண்டு வந்த பொருட்களை பாதுகாத்து வைகை ஆற்றின் அருகே வந்தபோது மீனாட்சி கல்யாணம் நடந்ததைக் கேள்வியுற்று கோபம் கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.

மீனாட்சியும் தன் கணவருடன் வைகை ஆற்றில் உள்ள தன் தமையனாரைச் சந்தித்து ஆசி பெற்று சீர் பொருள்களை (திருமண பரிசுப் பொருள்களை) பெற்றார் எனவும், பின்னர் வண்டியூர் அருகில் உள்ள வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தந்து பின் அழகர் கோவில் புறப்பட்டார் எனவும் இவ்விழாவிற்கான கதையாகக் கூறப்படுகிறது.

 

விழா கொண்டாடப்படும் முறை

இவ்விழாவிற்கான முதல் நிகழ்ச்சி மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. பின் நாள்தோறும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் கற்பக விருட்சம், காளை, சிம்மம் உட்பட பல வாகனங்களில் நாள்தோறும் வீதிகளில் வலம் வருவர்.

அப்போது சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தியவாறு வீதிகளை வலம் வருகின்றனர். 8-ஆம் நாள் திருவிழாவின் போது மீனாட்சி அம்மனுக்கு அரசியாக முடிசூட்டப்படுகிறது.

அப்போது அம்மனுக்கு ரத்தின செங்கோல் வழங்கப்படுகிறது. அது முதல் அடுத்த நான்கு மாதங்களுக்கு மீனாட்சி ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. 9-ஆம் நாள் திருவிழாவின் போது மீனாட்சி திக் விஜயம் நடைபெறுகிறது.

மீனாட்சி உலகின் எல்லாப் பகுதிகளையும் வெற்றி கொண்ட பின் கயிலை சென்று சிவனை எதிர்த்து போரிட்டதை நினைவு கூறும் விதமாக இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

பத்தாம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு, மேற்கு ஆடி வீதிகளின் சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.

 

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்

 

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இறைத் திருக்கல்யாணம் முடிந்தவுடன் பெண்கள் தாலி சரடை மாற்றிக் கொள்கின்றனர். பிரசாதப் பை வழங்குவோர் திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று பிரசாதப் பையினை வழங்குகின்றனர். திருக்கல்யாணம் முடிந்த உடன் கல்யாண விருந்து நடைபெறுகிறது.

பதினோராம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு ஒன்று கூடி தேரினை இழுக்கின்றனர். சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், மீனாட்சியம்மை மற்றொரு தேரிலும் நகரினை வலம் வருகின்றனர்.

திருமணம் முடிந்து இறைவனும், இறைவியும் தம் மக்களைப் பார்க்கும் பொருட்டு வலம் வருவதாக கருதப்படுகிறது. ஊர்கூடித் தேர் இழுத்தல் என்ற பழமொழியின் மூலம் தேர்த்திருவிழா ஒற்றுமை வலியுறுத்துகிறது என்பதை அறியலாம்.

திருக்கல்யாணம் இரவு பூப்பல்லக்கில் இறைவன் இறைவி ஊர்வலம் நடைபெறுகிறது. இத்துடன் மீனாட்சி கல்யாணம் முடிவடைகிறது. தேரோட்டத்தன்று இரவு அழகர் கோவிலிருந்து அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக மதுரையை நோக்கி வருகிறார்.

 

ஒளிரும் வைகை ஆறு
ஒளிரும் வைகை ஆறு

 

மதுரையின் மூன்றுமாவடியிலிருந்து தல்லாகுளம் வரை அழகரை வரவேற்று எதிர்சேவை என்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்சியில் ஏராளமானோர் பங்கேற்று அழகரை வரவேற்கின்றனர்.

மறுநாள் அதிகாலையில் அதாவது சித்திரை பவுர்ணமி அன்று மீனாட்சி கல்யாணம் நிறைவு பெற்றதைக் கேள்வியுற்று சீர்வரிசைப் பொருட்களுடன் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இங்கு அழகர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருளுகிறார். அழகர் அணிந்திருக்கும் பட்டாடையின் நிறத்தைக் கொண்டு எதிர்வரும் ஆண்டின் வளமானது கணிக்கப்படுகிறது.

 

ஆற்றில் இறங்கும் அழகர்
ஆற்றில் இறங்கும் அழகர்

 

மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் அழகரைக் கண்டு வாழ்த்து பெறுவதற்காக வைகையை அடைகின்றனர். இங்கு தன் தங்கை மீனாட்சிக்கு சீர் பொருட்களை பரிசளித்து வாழ்த்துக்களை அழகர் தருவதாக கூறப்படுகிறது.

பின் அங்கிருந்து ராமராயர் மண்டகப்படியில் அழகரை எழுந்தருளச் செய்து அங்கு அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடன் நிறைவேற்றப்படுகிறது. இந்நிகழ்வின் போது அழகரை தெற்கு மாசி வீதியில் வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வரவேற்பார்.

பின் அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருவார். அங்கு விடிய விடிய மக்கள் வாண வேடிக்கையுடன் அழகரை தரிசிக்கின்றனர்.

மறுநாள் காலையில் அழகரை வண்டியூரில் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், நாரைக்கு முக்தி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பின் இரவில் ராமராயர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பின் மறுநாள் ராமராயர் மண்டகப் படியிலிருந்து வைகைத் திருக்கண், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் வழியே தல்லாகுளம் சேதுபதி மண்டகப் படியில் அழகர் எழுந்தருளுகிறார்.

அன்று இரவு இங்கு அழகரை பூப்பல்லக்கில் வைத்து உற்சவம் நடத்துகின்றனர். மறுநாள் காலை அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு நடைபெறுகிறது.

இத்திருவிழாவின் போது மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி சிறப்பு வாய்ந்தது. கோடை விடுமுறையின் போது இவ்விழா கொண்டாடப்படுவதால் பெரியவர் முதல் சிறியவர் வரை இந்நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொள்கின்றனர்.

ஆற்றில் அழகர் இறங்கியவுடன் எல்லோர் மீதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகின்றது. இதன் மூலம் மக்கள் கூட்ட நெரிசலால் எற்படும் புழுக்கத்திலிருந்தும் கோடையில் ஏற்படும் வெப்பத்திலிருந்தும் ஓரளவு ஆறுதல் அடைக்கின்றனர்.

அன்றைய நாள்களில் வெளியூர் மக்கள் எல்லோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டு வண்டியில் வருகை தந்தனர். அதை நினைவு கூறும் வகையில் இன்றும் அருகில் உள்ள ஊர்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டியில் வருகை தருகின்றனர்.

 

தின்பண்டங்கள் விற்கும் கடை
தின்பண்டங்கள் விற்கும் கடை

 

அன்றைய நாட்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று காளை மற்றும் பசுக்களுக்கான சந்தை நடைபெற்றது. மக்கள் திருவிழாக் கொண்டாட்டத்தோடு சந்தையிலும் பங்கேற்றனர்.

சித்திரை திருவிழாவானது மதுரை மட்டுமின்றி மானாமதுரை, பரமக்குடி போன்ற வைகை பாயும் மதுரைக்கு அருகில் உள்ள ஊர்களிலும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 

இவ்விழாவின் சாராம்சம்

இவ்விழாவானது மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி சாதிவேறுபாடுகளை களைய முற்படுகிறது. சகோதர சகோதரி உறவிற்கு எடுத்துக் காட்டாகவும், கோபம் வந்தபோதும் அதனை அடக்கி உறவுகளை மேம்படுத்தி உன்னத நிலையை அடைய வேண்டும் என்கின்ற கூற்றை மக்களுக்கு விளக்குகிறது.

பாரம்பரியம், கலாச்சாரம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் சித்திரைத் திருவிழாவிற்கு நாமும் ஒரு முறை சென்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அழகரை தரிசித்து கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோம்.

Comments are closed.