தமிழ் புத்தாண்டு

சித்திரை சிறப்புகள்

சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இம்மாதத்தோடு வசந்த காலம் நிறைவடைகிறது.

சூரியன் இம்மாதத்தில்தான் உச்சநிலையினை அடைந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சித்திரை மொத்தம் 31 நாட்களைக் கொண்டுள்ளது.

 

தமிழ் புத்தாண்டு

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை நித்திய கடமைகளை முடித்து கோவில்களுக்குச் சென்று அன்றைய ஆண்டில் எல்லா வளங்களும் பெற இறைவனை வழிபடுகின்றனர்.

மதிய வேளையில் உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்கின்றனர். பெரியவர்கள் சிறியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் நிகழ்ச்சிகளாகும்.

கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

சித்திரை விசு
சித்திரை விசு

பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர்.

மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற‌ நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

 

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி
வசந்த நவராத்திரி

நவராத்திரி என்பது உலகைக் காக்கும் அன்னையை விரத முறைகள் மேற்கொண்டு வழிபடக்கூடிய நாட்களைக் குறிக்கும்.

பொதுவாக வருடத்தில் புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஆடியில் ஆசாட நவராத்திரி, தையில் சியாமளா நவராத்திரி, சித்திரையில் வசந்த நவராத்திரி நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. இவற்றுள் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் மிக முக்கியமானவை ஆகும்.

சாராதா நவராத்திரி வழிபாடு போகத்தையும், வசந்த நவராத்திரி வழிபாடு யோகத்தையும் வழங்கிறது.

வசந்த நவராத்திரியானது பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்பட்டு வளர்பிறை நவமி வரை மொத்தம் ஒன்பது நாட்களாகவும், பங்குனி அமாவாசை முதல் அடுத்த பௌர்ணமி வரை மொத்தம் பதினைந்து நாட்களாகவும், பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை மொத்தம் நாற்பத்தைந்து நாட்களாகவும் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

வசந்த நவராத்திரியில் ஒன்பது நாட்கள் வழிபாடு மேற்கொள்ள உலக நன்மையும், பதினைந்து நாட்கள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் வரங்களும், நாற்பத்தைந்து நாட்கள் வழிபாடு மேற்கொள்ள சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

பெரும்பாலும் இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்இந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

 

சித்ரா பவுர்ணமி

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரா பௌர்ணமி என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாம் செய்யும் பாவ புண்ணிய கணக்குகளை நிர்ணயம் செய்பவரும், எமதர்மனின் உதவியாளரும் ஆகிய சித்திர குப்தன் என்பவருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவன்று மக்கள் பொங்கலிட்டும் அன்னதானம் செய்தும் வழிபாடு மேற்கொள்கின்றனர்.

ஆறு,குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் மக்கள்கூடி நிலவொளியில் அமர்ந்து சித்ரான்னம் என்று சொல்லக் கூடிய பலவகையான கலவை சாத வகைகளை உண்டு மகிழ்கின்றனர். இவ்வாறு உணவு உண்ணும் நிகழ்ச்சி பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சித்ரா பௌர்ணமி அன்று சோழர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோவிலில் அன்னம்தானம் செய்வதை வழக்கில் கொண்டிருந்தனர் என்பதை திருச்சி மலைக்கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ராமநவமி

ராமநவமி
ராமநவமி

ராமநவமி என்பது திருமாலின் பத்துஅவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராமனின் பிறந்த நாளைக் குறித்து கொண்டாடப்படும் விழாவாகும்.

இராமன் பங்குனி அமாவசையை அடுத்த வளர்பிறை நவமியில் பிறந்தாகக் கருதப்பட்டு இவ்விழா கோலாகலமாக் கொண்டாடப்படுகிறது.

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை கடைப்பிடித்து சாதாரண மனிதனாக வாழ்ந்து எல்லோருக்கும் முன்னுதாரமாகத் திகழ்பவர் ஸ்ரீராமபிரான் ஆவார்.

எனவே ராமநவமி அன்று  விரதம் மேற்கொண்டு இராமபிரானை வழிபட, நல்ல நெறியில் வாழ்க்கை முறை அமைந்து வாழ்வின் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

அன்றைய தினம் முதல் ராம மந்திரம் சொல்லத் தொடங்கினால் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.

 

மத்ஸ்ய ஜெயந்தி

திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரம் சித்திரை மாதம் வளர்பிறை திருதியையில் (அமாவாசை அடுத்த மூன்றாவது நாள்) நிகழ்ந்தது. எனவே ஆண்டுதோறும் சித்திரை வளர்பிறை திருதியையில் மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அநீதியின் வடிவமான சோமுகாசுரன் என்னும் குதிரை முக அரக்கனிடம் இருந்து வேதங்களை காப்பாற்றி உலக உயிர் இயக்கத்திற்கு காரணமான மச்ச மூர்த்தியை வழிபட வாழ்வின் துன்பங்கள் நீங்கும்.

 

சித்திரைத் திருவிழா

 

சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாட்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் என இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருகின்றனர்.

பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருகல்யாணம் நடைபெறுகிறது. பதினொன்றாம் நாள் தேர்த்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்

சித்திரை பௌர்ணமி அன்று அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. வைகைக்கு வரும் அழகரை வரவேற்கும் எதிர்சேவையும், ராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியும், சேதுபதி மண்டகப்படியில் நடைபெறும் பூப்பல்லக்கும் சிறப்பு வாய்ந்தவை.

ஆற்றில் இறங்கும் அழகர்
ஆற்றில் இறங்கும் அழகர்

உலகிலே அதிக நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா என்ற சிறப்பினை சித்திரைத் திருவிழா பெறுவது குறிப்பிடத்தக்கது.

 

அட்சய திருதியை

அட்சய திருதியை
அட்சய திருதியை

அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சய என்றால் எப்போதும் அள்ள அள்ள குறையாத எனப் பொருள்படும்.

அதாவது இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான தான தருமங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும்.

பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில் தான்.

அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத்தடை அகலும். உணவுதானியங்கள் தானம் செய்தால் விபத்துக்கள் அகால மரணம் போன்றவை ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

 

காமதா ஏகாதசி

காமதா ஏகாதசி
காமதா ஏகாதசி

சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் திருமாலை விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்ள வாழ்வின் எல்லா நல்ல விருப்பங்களும் நிறைவேறும்.

இவ்விரத முறையைப் பின்பற்றி லலிதன் என்னும் கந்தர்வன் சாபத்தினால் பெற்ற அரக்க உருவத்தில் இருந்து மீண்டும் கந்தர்வ வடிவம் பெற்றான்.

 

பாபமோசனிகா ஏகாதசி

சித்திரை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபமோசனிகா ஏகாதசி அன்று விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும்.

 

பைரவர் விரதம்

சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவ விரதம் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் பகல் உணவு மட்டும் உண்டு விரத முறை மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைக்கு திருமுறை ஓதுதல் வழக்கத்தில் உள்ளது. இவ்விரத முறையை பின்பற்றினால் சுபிட்சமான வாழ்வுடன் இறுதியில் முக்தி கிடைக்கும்.

 

லட்சுமி பூஜை

லட்சுமி பூஜை
லட்சுமி பூஜை

சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட செல்வம் பெருகும்.

சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

 

சித்திரை மாதத்தை சிறப்புச் செய்தவர்கள்

ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்

ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார், ரமணர், பரசுராமர் ஆகியோரின் அவதாரம் இம்மாதத்தில்தான் நிகழ்ந்தது.

திருக்குறிப்புத் தொண்டர், இசைஞானியார், விரன்மிண்டர், மங்கையர்கரசியார், சிறுதொண்டர், திருநாவுக்கரசர் ஆகியோரின் குருபூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

– வ.முனீஸ்வரன்

 


Comments

“சித்திரை சிறப்புகள்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] நாயனார் குருபூஜை சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் […]

  2. […] நாயனார் குருபூஜை சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் […]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.