சித்திரை வெயிலும் நானும்
சேர்ந்து விளையாடிருக்கோம்
எத்தனை எரிச்சல் தந்தாலும் கூட
இனிமை அதில் ஒளிஞ்சிருக்கும்
ஆத்துல தண்ணியும் கொஞ்சமா வரும்
ஆனாலும் மணலு கொதிச்சு கிடக்கும்
வாத்து நடையில மணலைத் தாண்டி
வழுக்கி விழுந்தா சுகத்தைக் கொடுக்கும்
வோகாத வெயிலு இதுன்னு அலுத்து
வெறுத்து ஒதுங்கும் போதுதான் நமக்கு
தோதாக வேம்பின் காத்தும் கிடைக்கும்
துவண்ட உடம்பை துடைச்சி விடும்
சந்தைக்கு போகும் சனங்களுக் கென்று
சத்தான வெள்ளரி காயும் கிடைக்கும்
சந்தன நிறத்து வெள்ளரிப் பழமும்
சந்தையை முழுக்க மணக்க வைக்கும்
பனையில் ஏறும் பழனி மாமாவின்
பானையில் பதினி நெறைஞ்சு இருக்கும்
துணைக்கு அங்க நொங்கு குலைகளும்
தொங்க தொங்கவே காய்ச்சிக் கிடைக்கும்
வீடெல்லாம் நீச்சுத் தண்ணி யிருக்கும்
வீதியெங்கும் நீரு மோரும் கிடைக்கும்
காடெல்லாம் வேலை செய்யும் மனுசன்
கரைஞ்சு குடிக்க கஞ்சியும் கொடுக்கும்
தெருவை மறிச்சி பொங்கலை வச்சி
தினமும் கூழையே காய்ச்சிக் கொடுத்து
கூறுகெட்ட இந்த சனங்க ளுக்கே
கூடியே வாழ்ந்திடக் கற்றுக் கொடுக்கும்
– இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942