சித்ரா பவுர்ணமி

சித்ரா பவுர்ணமி இந்துக்களால் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் போது தர்ம தேவதையான எமதர்மராஜனின், உதவியாளரான (கணக்கு பிள்ளை) சித்திர குப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தினத்தில் சிவன் மற்றும் அம்மன் வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

 

சித்திரை மாதத்தில் குளிர் முழுவதும் முடிந்து இளவெயில் ஆரம்பமாகிறது. எனவே இவ்விழா வசந்த காலத்தை வரவேற்கும் உற்சாக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இவ்விழா நாளன்று மக்கள் நீர் நிலைகளில் புனித நீராடலை மேற்கொள்கின்றனர்.

பொங்கல் வைத்து படையலிட்டும், அன்னதானம் செய்தும் மக்கள் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி அன்று விரதம் மேற்கொள்கின்றனர். இதனால் வாழ்வின் துன்பங்கள் நீங்கி வளம் பெறுவதாகவும், எம பயம் நீங்கி நீண்ட ஆயுள் கிடைப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.

இத்தினத்தன்று இரவு மக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் கூடி நிலவொளியில் அமர்ந்து சித்ரான்னம் என்று சொல்லக் கூடிய பல வகையான கலவை சாத வகைகளை பகிர்ந்து உண்டு மகிழ்கின்றனர். இவ்வாறு சித்ரா பவுர்ணமி இரவு உணவு உண்ணும் நிகழ்ச்சி பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

 

இவ்விழாவிற்கான காரணங்கள்

சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று தான் சித்திர குப்தன் அவதரித்ததாக கருதப்படுகிறது. எனவே அன்றைய தினம் சித்திர குப்தர் வழிபாடு முக்கியமானதாகிறது. சித்திர குப்தர் தோன்றிய கதை கீழ்வருமாறு.

முன்னொரு சமயம் பார்வதி தேவி அழகான ஆண்குழந்தை ஓவியத்தை வரைந்தார். அதனைப் பார்த்த சிவபெருமான் அவ்வோவியத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் அவர் சித்திர குப்தன் என்று அழைக்கப்பட்டார் எனவும்

இந்திரன் குழந்தை வேண்டி சிவபெருமானை வணங்கும் போது அவர் இந்திரனின் குழந்தை காமதேனு மூலம் கிடைக்கும் என்று அருளினார்.சிவபெருமானின் கூற்றுப்படி காமதேனுவின் கருவிலிருந்து சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரத்தில் சித்திர குப்தன் தோன்றினார் எனவும் கூறப்படுகிறது. அவர் அறிவில் சிறந்து விளங்கினார். எனவே எமதர்மனின் உதவியாளராக உலக உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை கணக்கிட்டு கொடுக்கும் பொறுப்பை ஏற்றார் எனவும் கூறப்படுகிறது.

 

இந்திர பூஜை

முன்னொரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் தேவர்களின் குருவான பிரகஸ்பதிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. அதன் காரணமாக பிரகஸ்பதி இந்திரனுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை ஏதும் வழங்கவில்லை. இதனால் இந்திரன் தீய வழியில் சென்றான்.

இறுதியில் தன் குற்றங்கள் குறைய வழிகாட்டுமாறு தேவ குருவை வேண்டினான். அதற்கு அவர் பூலோகம் சென்று தீர்த்த யாத்திரை மேற்கொண்டு சிவபெருமானை வழிபடுமாறு வழிகாட்டினார். அதன்படி தீர்த்தயாத்திரை மேற்கொள்ளும்போது தன் தோளில் இருந்து பாரம் இறங்குவது போல பாவங்கள் நீங்கியதாக உணர்ந்தான்.

உடல் மாற்றத்திற்கான காரணத்தை கண்டறிய முற்பட்ட போது அருகே சிவலிங்கத்தை கண்டான். சிவலிங்கத்திற்கு இந்திரன் விமானத்தை அமைத்து அருகே உள்ள குளத்தில் பூத்திருந்த பொற்றாமரையால் சிவனை வழிபட்டான். இவ்விடமே பின்னாளில் மதுரை என வழங்கலாயிற்று.

இந்திரன் வழிபட்ட நாள் சித்திரை மாத பவுர்ணமியாகும். இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று இரவு இந்திர பூஜை விழா நடத்தப்படுகிறது. இந்திரன் இவ்வழிபாட்டில் கலந்து கொள்வதாக கருதப்படுகிறது.

 

விழா கொண்டாடப்படும் முறை

சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர்.

பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து ஏடு மற்றும் எழுத்தாணியை (பேப்பர் மற்றும் பேனா) உருவத்தின் அருகே வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் (பால் சேர்க்காமல்) படைத்து விளக்கேற்றி தீப ஆராதனை காண்பிக்கின்றனர்.

பின் தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும் இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.

வழிபாடு முடிந்த பின் முறத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, தட்சிணை ஆகியவற்றை வைத்து எளியவர்களுக்கு தானம் செய்கின்றனர். வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று சித்திர குப்தரின் வரலாற்றை படிக்கின்றனர். வழிபாடு முடிந்த பின் படிக்கோலத்தை அழிந்து விடுகின்றனர்.

விரத முறையில் மக்கள் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

 

சித்திரகுப்தன்

சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்திர குப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

இவர் இடது காலை மடித்து வலது காலை ஊன்றி சுகாசனம் என்ற நிலையில் உள்ளார். தனது வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஓலைச்சுவடியும் வைத்திருப்பார். இவரிடம் என்றும் வற்றாத கணக்குப் புத்தகம் உள்ளது. அதன் பெயர் அக்கிர சந்தாணி ஆகும்.

சித்திர குப்தனுக்கு என்று தனிக்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று இங்கு சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின் சித்திர குப்தர் மற்றும் சித்ரலேகா வீதி உலா வருகின்றனர்.

சித்ரா பவுர்ணமி அன்று மதுரை, மானா மதுரை, பரமக்குடி போன்ற இடங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கிரிவல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமக்கும் மேலான சக்தி ஒன்று நம்மை இடைவிடாது கண்காணிக்கிறது எனவே தீய செயல்களை தவிர்த்து நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே இவ்விழாவின் சாராம்சம் ஆகும்.

மேலும் ஒற்றுமையுடன் பகிர்ந்துண்ணல், தான தர்மம் ஆகியவற்றையும் இவ்விழா எடுத்துரைக்கிறது. எனவே நாமும் இப்பிறவியில் தீமைகளை தவிர்த்து நன்மைகள் செய்து நன் நிலையை அடைய சித்ரா பவுர்ணமி அன்று வழிபாடு மேற்கொள்வோம்.

 

Comments are closed.