ரீ… ரீ… ரீ… என்றபடி
ரீங்காரம் இட்டபடி
சின்னக் கொசு காதுப் பக்கம் வந்து நின்றது
என் கதையைச் சொல்லவா? என்று கேட்டது.
ஏய்… ஏய்… ஏய்… நீ இப்ப
என்னதான் சொல்ல வாரே
சொல்லுறத முழுசா சொல்லப் போறயா?
சொல்லாம கொள்ளலாமா ஓடப் போறயா?
என்று நான் சொன்னவுடன்
என் பக்கம் வந்து நின்ற கொசு
தன் கதையைக் காதோடு சொல்லலானது
தாள மின்றி பாட்டாக பாடலானது
தேங்கி நிற்கும் குட்டையில்
தங்கி வாழப் பிறந்தவன் நான்
ஓங்கி வளராது இருக்கும்
புதர்களிலே வளர்பவன் நான்;
தூங்குகின்ற மனிதர்களை
கடிப்பதிலே தேர்ந்தவன் நான்
தொடர்ந்து பல நோய்களையே
கொண்டு வந்து கொடுப்பவன் நான்
எங்களத்தான் கூட்டத்தோடு
அழித்திடும் எண்ணம் கொண்டு
என்னதான் செய்தாலும்
எதிர்த்து வாழத் தெரிந்தவன் நான்
உங்க வீட்டைச் சுற்றி நீரினைத்
தேக்கி வச்சா மகிழ்பவன் நான்
உங்க ஊரைச் சுற்றி சாக்கடையை
கொட்டி வச்சா வாழ்பவன் நான்
எங்கேயும் எப்போதும்
சுத்தம் இல்லாதிருந்தால்
எங்களுக்குக் கொண்டாட்டம்
உங்களுக்குத் திண்டாட்டம்
என்னதான் ஆனாலும்
எப்படித்தான் போனாலும்
எங்களை வாழ வைக்கும் தெய்வமே நீங்கதான்
அதுக்கு நாங்கள் தரும் பரிசோ நோய்கள்தான்
என்று கதை சொல்லிப் போன கொசுவை
என்ன செய்து விரட்டலாம் நீங்க சொல்லுங்க
–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்