சின்னத்தாயே சின்னத்தாயே எந்தன்
தாயின் மறு பிறப்பே
செல்லத்தாயே செல்லத்தாயே எங்கள்
இல்லத்தின் குல விளக்கே
தாயின் மடியில் மீண்டும்
சாயும் சுகத்தைக் கண்டேனே
சேயே தாயாகும் அதிசயம்
மகளின் செயலில் கண்டேனே
தந்தையான என்னைத் தாங்கும்
விந்தை பெண்ணை வளர்த்தேனே
சிரிப்பில் கோடி மகிழ்ச்சி
சிந்திட மனதால் மகிழ்ந்தேனே
தேம்பி தேம்பி அழும்போது
இதயம் நொறுங்கி நொந்தேனே
கோபப்படும் அழகை காண
கோபப்படுத்தி மகிழ்வேனே
குழலும் தள்ளாடும் உன்
குரலின் இனிமை கேட்டு
நிலவும் விலகிவிடும் உன்
உலவும் விழி பார்த்து
மலரும் மயங்கிவிழும் உன்
விலகும் விரல் பார்த்து
மயிலின் இறகும் சிறையில் உன்
அழகு முகத்தின் எதிரில்
வாழும் காலம் வரையில் நீயே
என் இதய அறையில்
ஓடிவா ஓடோடிவா மகளே
எனை ஏத்திடு மெத்தை மடியில்
கரம் கோதிடு கத்தை முடியில்
வாழ்வேன் பல்லாண்டு
வாழ்க நீ நூறாண்டு
சிரிப்பில் எனை செதுக்கும் மகளே
சின்னத்தாயே
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!