சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய அரிநெல்லிக்காகாய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது சின்ன நெல்லிக்காய் சீசன் ஆதலால் மார்க்கெட்டில் அதிக அளவு கிடைக்கும்.
இப்பொழுது நெல்லிக்காய்களை வாங்கி ஊறுகாய் தயார் செய்து வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.
இனி சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சின்ன நெல்லிக்காய் – 1படி
கல் உப்பு – 100 கிராம்
கடுகு – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
மண்டை வெல்லம் – 150 கிராம்
வற்றல் பொடி – 100 கிராம்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 100 கிராம்
கறிவேப்பிலை – 2 கொத்து
கடுகு – 1 ஸ்பூன்
செய்முறை
சின்ன நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி சுத்தமான உலர்ந்த துணியில் உலர விடவும்.
நெல்லிக்காய்களின் மேற்பரப்பு நன்கு உலர்ந்தவுடன் 100 கிராம் கல் உப்புடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
உப்பானது நெல்லிக்காயுடன் சேர்ந்து நன்கு நீர்விடும் வரை பாத்திரத்தை அடிக்கடி குலுக்கி விடவும்.
நெல்லிக்காய் நீர்விட்டதும் உப்புத் தண்ணீரை தனியே பிரித்து எடுத்து விடவும்.
நெல்லிக்காய்களை மட்டும் எடுத்து தட்டில் போட்டு வெயிலில் காய வைக்கவும். ஒரு நாள் பகல் பொழுது முழுவதும் காய வைக்கவும்.
கடுகையும் வெந்தையத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியே போட்டு பொரியும் வரை வறுக்கவும்.
பின் வறுத்த கடுகையும் வெந்தையத்தையும் ஆற விடவும். நன்கு ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
மண்டை வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும். நெல்லிக்காய் ஊறிய உப்புத் தண்ணீரில் மண்டை வெல்லத்தைக் கரைத்து கரைசலை வடிகட்டிக் கொள்ளவும்.
பின் வடிகட்டிய கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
கரைசல் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி அதனுடன் கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, வற்றல் பொடி, காய வைத்த நெல்லிக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து ஊறுக்காய் கலவையில் கொட்டி நன்கு கிளறி விடவும்.
ஊறுகாய் சூடு ஆறியதும் பாத்திரத்தின் வாயினை துணியினால் கட்டி வைக்கவும்.
இதனை வெயிலில் இரண்டு மூன்று நாட்கள் வைத்து எடுக்கவும் (பாத்திரத்தின் வாயினை துணியால் கட்டியபடி).
பின் டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தவும். சுவையான சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.
இதனை சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். ஊறுகாயில் தண்ணீர் படாமல் வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் இதனைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு
வற்றல் பொடிக்கு மிளகாய் வற்றலைக் காய வைத்து மிக்ஸியில் பொடியாக்கி உபயோகிக்க ஊறுகாயின் சுவை கூடுதலாகும்.
புதிதான சின்ன நெல்லிக்காயில் ஊறுகாய் தயார் செய்தால் சுவை மிகும்.
நெல்லிக்காயை அலசி நன்கு அதனுடைய மேற்பரப்பு உலர்ந்தவுடன் துணியில் லேசாக துடைத்து விட்டு உப்பில் ஊற விடவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!