எல்லாவற்றையும்
மறந்து போக செய்யும்
மாயக்காரன் சிரிப்பு!
கழுதையும்
காட்டெருமையும்
இன்னும் சிரிக்க கற்றுக்கொள்ளவில்லை!
கடவுள்,
மனிதனுக்குக் கொடுத்த
மகா உன்னதமான வரம்
சிரிப்பாகும்…
வஞ்சகன் சிரிப்பு நம்மை
வலைவீசி அழைக்கும்…
காமுகனின் சிரிப்பு
கன்னியர்கள் வாழ்வை
கெடுக்கும்…
கவலைப்படுபவனின்
சிரிப்பிற்குப் பின்னால்
சோகம் புதையலாய்
புதைத்து வைக்கப்படும்…
மகிழ்ச்சியடைபவனின்
சிரிப்பில் மனங்கள்
துள்ளிக் குதிக்கும்…
குழந்தையின் சிரிப்பில்
குவலயம் தோற்றுப் போகும்
காதலியின் சிரிப்பில்
காதலன் நிலைகுலைந்து
போவான்…
பாஞ்சாலியின் சிரிப்பில்
பாரதப்போர் மூண்டது
சிரிப்பு அத்தனையும்
செய்யும்…
இறைவனின் படைப்பில்
இயற்கையும் சிரிக்கிறது!
ஞாயிறு நகைக்கும்போது
ஞாலமும் வெளிச்சம்
பெறுகிறது..
நிலவு சிரிக்கும் போது
இரவு குளிர்ந்து போகிறது
பூக்கள் சிரிக்கும் போது
வண்டுகள் தேனருந்தி
மகிழ்கிறது…
வண்ணங்களின் சிரிப்பில்
வானவில் உருவாகிறது…
மனிதன்,
வெண்பற்கள் காட்டி
சிரிக்கும் போது
வெண்முல்லைப்பூக்கள்
வெட்கித்தலை குனிகின்றன!
மரணத்தைக் கடத்தும்
மந்திரசிரிப்பு மனிதனுக்கு
தேவையானதாகவே
இருக்கிறது…
ரோகிணி
மறுமொழி இடவும்