பலவருடம் முன்பாக நாங்களெல்லாம் ஒன்றாக
யாரோ ஒருவர் கட்டிவைத்த பெருவீட்டுப் பரனொன்றில்
அங்கங்கே சேர்த்துவைத்த குப்பைக் குச்சிக்கொண்டு
அழகான கூடுகட்டி மகிழ்வாக வாழ்ந்தோமே!!
பேதமே இல்லாமற் பேரிணக்கங் கொண்டு நாங்கள்
நினைத்த போதெல்லாம் மகிழ்வுற்ற அன்பினாலே
இனப்பெருக்கங் கொள்வோமே!!
கீச்சுக்குரல்கள் எங்களுள் அமுதகானமாய் ரீங்காரமிட்டோமே
எப்பொழுதும் நாங்கள் கூட்டமாய்க் குழுமியிருப்போமே!!
காலமாறுதல் ஆகஆகவே என்னவாயிற்றோ சாபக்கேடு
எங்குதான் சென்றாலும் மூளையைக் கீறல்போடும்
நுணுக்கமான சிதறலைப்போல் நுண்ணலைச் சப்தங்கள்!!
சிலகாலம் சென்றபின்னே இதுவும் கடந்துபோகும்
என்ற உங்கள் நம்பிக்கைபோல்…
செய்வதறியா வண்ணங்கெட்டு காலத்தைக் கடந்திட்டோம்!!
பல்வேறு அனுபவத்தின் பின்புதான் தெரிந்த உண்மை
வெற்றுக் களியாட்டம் போடயிங்கு உமக்கெல்லாம்
தொட்டு மகிழ்ந்தாடும் பொட்டிக் கைப்பேசி தேவையென்று!!
பரவலாய் பலதிசையில் சுகமெனநீ களியுறவே
எட்டுத் திசையெல்லாம் எழுப்பிட்டாய் உயர்க்கோபுரம்
அலைக்கற்றை பின்விளைவை அழுத்தமாய்நான் சொன்னாலும்
எப்படியும் கேட்கமாட்டாய் என்னசெய்ய நானும்!!
சமயம் வரும்போது சரியாகிடும் என்றஎண்ணம்
எனக்கெல்லாம் துளிகூட இல்லையில்லை உன்னிடமே
அபரிமிதக் கதிர்வீச்சு ஆட்கொல்லி என்பதைநான்
எடுத்துச்சொல்லும் போதெல்லாம் எட்டிக்காயாய்க் கசந்திடுமேயுனக்கு!!
நியாயம் பலக்கூறினாலும் முழுநட்டம் எனக்குத்தானே
ஒன்றாய்க் கூடுகட்டி குதூகலமாய் வாழந்தயெனை
கருவறுத்துவிட்டாயே புத்திகெட்ட மானிடாநீ!!
கதிர்வீச்சு கோபுரங்கள் அதிகமாய் வந்ததாலே
சப்தமில்லா இடம்தேடி சந்ததியே பிரிந்துவிட்டோம்!!
‘கேடுசெய்தவன் கேடில் விழுவான்’
இவ்விதி உண்மையெனில்…
அற்பமாய் அலைக்கற்றை ஆட்கொள்ளும் நீயும்
சுகமின்றி வீழ்வாய் இதுதான் உன்விதி!!
சிவா.தேவராசு
ஒசூர்
கைபேசி: 9941503810
மின்னஞ்சல்: devakalai006@gmail.com