சிறப்புலி நாயனார் திருவைந்தெழுத்தை ஓதி வேள்விகள் செய்து அடியார்கள் தொண்டிலும் சிறந்து விளங்கிதால் புகழ்பெற்ற மறைவர்.
சோழநாட்டில் இருந்த ஆக்கூர் என்னும் ஊர் சிறந்த நீர்வளமும் நிலவளமும் கொண்டிருந்தது. அங்குள்ள திருக்கோவிலுக்கு தான்தோன்றி மாடம் என்பது பெயராகும்.
ஆக்கூர் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆக்கூரில் சிறப்புலி நாயனார் வேள்விகள் செய்யும் தொழிலைக் கொண்ட வேதியராகப் பிறந்தார்.
இளவயதிலேயே அவர் சிவபிரானிடத்தும் அவர்தம் அடியவர்களிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார். ஆதலால் அவர் சிவபிரானுக்குரிய தொண்டுகளைச் செய்வதில் வல்லவராகவும், ஈகைத்திறத்தில் சிறந்தவராகவும் விளங்கினார்.
நாள்தோறும் தவறாது ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை ஓதியும், தம்முடைய குலவழக்கப்படி வேள்விகள் செய்து அதனுடைய பயனை சிவனார்க்கே அர்ப்பணமும் செய்தார்.
இறையடியார்கள் யாரேனும் வந்தால், அவர்களை அடிபணிந்து முன்நின்று இனிய மொழிகளைக் கூறி, அறுசுவையுடன் அவர்களுக்கு திருவமுது செய்விப்பார். அடியார்கள் வேண்டும் பொருளையும் வழங்கி மகிழ்வார்.
ஒருசமயம் சிறப்புலி நாயனார் 1,000 சிவனடியார்களுக்கு திருவமுது படைக்க எண்ணி அதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
சிறப்புலியாரின் திருவமுது செய்விக்கும் நிகழ்ச்சிக்கு 999 சிவனடியார்கள் வருகை தந்திருந்தனர். ஒருசிவனடியார் மட்டும் குறைவாக இருக்கவே சிறப்புலியார் ஆக்கூரில் கோவில் கொண்டிருக்கும் தான் தோன்றி நாதரை மனமுருக வேண்டினார்.
இறைவனார் வயதோதிக சிவனடியராக சிறப்புலியாரின் திருவமுது செய்விக்கும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளினார். அவரை மனமுவந்து வரவேற்று சிறப்புலியார் திருவமுது செய்வித்தார்.
திருவமுது உண்டதும் சிவனார் அங்கிருந்தோருக்கு காட்சியருளினார்.
ஆயிரத்தில் ஒருவராக வந்து திருவமுது உண்ட தான்தோன்றி நாதர் ‘ஆயிரத்தில் ஒருவர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
தான் தோன்றி மாடத் திருக்கோவில் கோசெங்கட் சோழனால் கட்டப்பட்ட யானை ஏற முடியாத மாடக்கோவில்களுள் ஒன்றாகும்.
இவ்வாறு அடியார்களுக்கும் பிறர்க்கும் நலங்கள் பல புரிந்து, தம் மரபிற்கு ஏற்றவாறு அறங்களிலும் தலைசிறந்து விளங்கிய சிறப்புலியார் யாவராலும் போற்றப்பட்டார்.
அறங்களிலும் அடியார் தொண்டிலும் சிறந்து விளங்கிய சிறப்புலிநாயனார் இறுதியில் பேரின்பமான வீடுபேற்றினை அடைந்தார்.
சிறப்புலி நாயனார் குருபூஜை கார்த்திகை மாதம் பூராடம் நட்சத்திரத்தில் போற்றப்படுகிறது.
வேள்விகள் பல புரிந்து அடியார் தொண்டிலும் சிறந்து விளங்கிய சிறப்புலி நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.