படிப்பவருக்கு இன்பத்தையும் மறக்கமுடியாத உணர்வுகளையும் தரவல்லது சிறுகதையாகும். அதை மட்டுமே முழுக்க முழுக்கத் தரும் இணையதளம் சிறுகதைகளின் சங்கமம் என்றே சொல்லக்கூடிய www.sirukathaigal.com ஆகும்.
“கதை ஆசிரியனின் சிந்தனையில் பிறந்து, வாசகர்களின் சிந்தனையில் நிறைவு பெறுவது சிறுகதையாகும்.
சிறுகதைக்கு, அது பேசக்கூடிய பொருளும் கால எல்லையும், ஒருமைப்பாடும் மிக முக்கியம்.
சிறுகதையின் பொருள் காலத்திற்குக் காலம், எழுத்தாளருக்கு எழுத்தாளர் மாறுபடலாம். ஆனாலும் அவை சமுதாயத்தை நுவல் பொருளாகக் கொண்டவை என்று பொதுமைப் படுத்திவிட முடியும்.” எனச் சிறுகதை குறித்து விளக்கம் தரும் தமிழ் இணையக் கல்விக்கழகம்.
சிறுகதை இலக்கியம் குறித்து எழுத்தாளர் சுஜாதா கூறும்பொழுது, ”சிறுகதை என்பது சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. A short fictional narrative in prose. வேறு எந்த வரைமுறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது.
சிறுகதைகளில் ஒரு பொது அம்சம் இருக்கிறது. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறுகதை அல்ல; பஸ் டிக்கெட். ஒரு வாரம் அல்லது ஒரு வருஷம் கழிந்தோ அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல சிறுகதைகளில் உள்ள பொதுவான அம்சம்.
சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் சிறுகதை செதுக்கப்பட வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய்த் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். இதன் மூலமே சிறுகதையின் கலையம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.” என்பார்.
இந்த இணையதளத்தில் உள்ள பெரும்தலைப்புகள் கீழ்க்கண்டவாறு உள்ளன.
• கதைப்பதிவு
• பிரசுரங்கள்
• கதை கேளுங்கள்
• உங்கள் கருத்து
• சிறுகதைப் பற்றி»
• கதையாசிரியர்கள்»
• அமானுஷம்
• அறிவியல்
• ஆன்மிகக் கதை
• காதல்
• கிரைம்
• குடும்பம்
• சமுகநீதி
• சரித்திர கதை
• சிறப்பு கதை
• சுட்டி கதைகள்
• தின/வார இதழ்கள்
• த்ரில்லர்
• நகைச்சுவை
• மொழிபெயர்ப்பு
• இளம் எழுத்தாளர்கள்
• புனைவு
தினவார இதழ்கள் பகுதியில், இதயம் பேசுகிறது,கல்கி, குங்குமம், குமுதம், சாவி, தினகரன், தினத்தந்தி, தினமலர், தினமணி, தென்றல், தேவி, நக்கீரன், பாக்யா, மங்கையர் மலர், ராணி, ஆனந்தவிகடன் ஆகியவற்றில் வந்த சிறுகதைகளை இங்கு தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
சிறுகதை பற்றி பகுதியில், சிறுகதை குறித்தான விளக்கம், அறிஞர்களின் கருத்துக்கள் போன்றவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இது ஒரு அரிய முயற்சியாகும்.
”உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி. ”
எனச் சந்திரா இரவீந்திரன் இத்தளம் குறித்துப் பாராட்டியுள்ளார்.
“நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும், பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி”.
என ஆரார் மிதுன் எனும் சிறுகதை எழுத்தாளர் இத்தளம் குறித்து கூறுகிறார்.
இத்தளம் குறித்து அவர்களின் மொழியில் இனி பார்க்கலாம்.
”சிறுகதைகள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.
தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதைகளின் ஆசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையதளம் டிசம்பர் 2011 முதல் செயற்பட்டுவருகிறது.
பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். 1400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் 11,000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
நவம்பர் 2015 முதல் இத்தளத்தை உங்கள் மொபைல் போன் வழியாக எளிதாக படிக்கலாம். கிட்டத்தட்ட 50% சதவிதற்க்கு மேலான வாசகர்கள் தங்கள் மொபைல் போன் வழியாக சிறுகதைகள் இணைய தளத்தை உபயோகிக்கிறார்கள்.”
சிறுகதைகளை ஒரு சேரப் படிக்கவும், ஆராயவும் இத்தளம் சிறந்த ஒன்றாகும். இத்தளம் செல்ல இதைச் சொடுக்கவும். www.sirukathaigal.com.
(இணையம் அறிவோமா? தொடரும்)

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!