சிறுகிழங்கு பொரியல் செய்வது எப்படி?

சிறுகிழங்கு எல்லாக் காலங்களிலும் கிடைப்பதில்லை. இக்கிழங்கு மார்கழி மாதம் முதல் மாசி மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.

தைப்பொங்கலுக்கான சமையலில் கட்டாயம் இக்கிழங்கு இடம் பெறும்.

சிறுகிழங்கின் சீசனான இச்சமயத்தில் சிறுகிழங்கு பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சிறுகிழங்கு
சிறுகிழங்கு

 

சிறுகிழங்கு – 250 கிராம்

தேங்காய் – ½ மூடி (சிறியது)

மல்லிப் பொடி – 1½ ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ¾ ஸ்பூன்

சீரகப்பொடி – ¾ ஸ்பூன்

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – ¾ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

உளுந்தம் பருப்பு – ¾ ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3 எண்ணம்

 

செய்முறை

முதலில் சிறுகிழங்கு தண்ணீரில் நன்கு மூழ்குமாறு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பின்பு கிழங்கில் ஒட்டியுள்ள மண் நீக்க மூன்று, நான்கு முறை தண்ணீரில் நன்கு அலசவும்.

பின் அதன் மேல் தோலை சீவிக் கொள்ளவும். பின் அதனையும் நன்கு அலசவும். பின் கிழங்கினை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய சிறுகிழங்கு
நறுக்கிய சிறுகிழங்கு

 

சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவல் செய்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவல்
தேங்காய் துருவல்

 

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய், சதுரங்களாக நறுக்கிய வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும்போது
தாளிதம் செய்யும்போது

 

பின் குக்கரில் சதுரங்காக நறுக்கிய சிறுகிழங்கினைப் போடவும். அதனுடன் கொத்தமல்லி தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கிழங்கு வேகத் தேவையான நீர் சேர்த்து (சிறிதளவு) ஒரு சேரக் கிளறி விடவும்.அதனுடன் தாளிதம் செய்த பொருட்களைச் சேர்க்கவும்.

சிறுகிழங்குடன் மசால் சேர்த்து குக்கரை மூடும் முன்பு
சிறுகிழங்குடன் மசால் சேர்த்து குக்கரை மூடும் முன்பு

 

இதனை நன்கு கலக்கி குக்கரை மூடி விசில் போடவும். அடுப்பை முழுவதும் எரிய விடவும்.

பின் குக்கரில் இருந்து விசில் வந்தவுடன் தணலை சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

குக்கரில் ஆவி வெளியேறிய பின் குக்கரைத் திறந்து அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு சேர கிளறி விடவும்.

குக்கரைத் திறந்தவுடன் தண்ணீர் அதிகமாக இருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து தண்ணீரை வற்ற வைக்கவும். அதன் பின் துருவிய தேங்காய் சேர்த்து  கிளறி விடவும்.

வேகவைத்த சிறுகிழங்கு கலவை
வேகவைத்த சிறுகிழங்கு கலவை

 

சுவையான சிறுகிழங்கு பொரியல் தயார். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

சுவையான சிறுகிழங்கு பொரியல்
சுவையான சிறுகிழங்கு பொரியல்

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லித் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றிற்குப் பதிலாக மசாலாப் பொடி சேர்த்து மேற்கூறிய முறையில் சிறுகிழங்கு பொரியல் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.